என் மலர்
இந்தியா
- அனைத்து இடங்களிலும் நம் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகம் தணிக்கும்படி தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
- தண்ணீர் பந்தலில் தண்ணீர் உள்ளதா? என தினந்தோறும் தவறாமல் கவனித்து செயல்பட வேண்டும்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் நிர்வாகிகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கோடை வெயிலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தங்கள் மாவட்டங்களில் உள்ள மாநகரம், நகரம், ஒன்றியம், பேரூர் பகுதி, வார்டு மற்றும் வட்டம் என அனைத்து இடங்களிலும் நம் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகம் தணிக்கும்படி தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
முக்கியமாக நிர்வாகிகள் செய்ய வேண்டிய விஷயம் என்னவென்றால் தாங்கள் அமைத்த தண்ணீர் பந்தலில் தண்ணீர் உள்ளதா? என தினந்தோறும் தவறாமல் கவனித்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.
- ஏழை மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்.
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் 2025- 26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து 7-வது நாள் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வட்டம் தொடங்கியதும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, நியாய விலைக்கடைகள் இல்லாத பகுதிகளில் வாகனங்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும், கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகையில், "புதுச்சேரியில் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் ஏழை மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்" என அறிவித்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் மஞ்சள் நிற ரேசன் அட்டை வைத்துள்ள மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
தற்போது சிவப்பு நிற ரேசன் அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சாதாரண குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள் நிற குடும்ப அட்டை என்பது ஆண்டு குடும்ப வருமானம் ரூ.1,20,000 வரை மட்டுமே பெரும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
- சிறுமியை கடத்திச் சென்ற இருவரும் ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர்.
- பாலியல் வன்கொடுமையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமியால் பேச முடியவில்லை.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் ஜி.கொண்டூரை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் கடந்த 9-ந்தேதி பக்கத்து வீட்டுக்காரருடன் வீரபனேனி குடேமில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார்.
கடந்த 13-ந்தேதி உறவினருக்கும், சிறுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சிறுமி கோபித்துக் கொண்டு உறவினர் வீட்டில் இருந்து வெளியேறி தனியாக நடந்து சென்று கொண்டு இருந்தார்.
இதனை கவனித்த 15 வயது சிறுவன் மற்றும் ரசாக் என்ற வாலிபர் சிறுமியிடம் வந்து நைசாக பேசினர். பைக்கில் அழைத்து சென்று வீட்டில் பத்திரமாக விடுவதாக தெரிவித்தனர். இதனை நம்பிய சிறுமி அவர்களுடன் பைக்கில் சென்றார்.
சிறுமியை கடத்திச் சென்ற இருவரும் ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் அவர்களின் நண்பர்களான அணில் குமார், ஜிதேந்திராவுக்கு போன் செய்து வரவழைத்தனர். அவர்களும் சிறுமியை வன்கொடுமை செய்தனர். அதன் பின்னர் அனித், ஹர்ஷவர்தன், கேசர்ப்பள்ளியை சேர்ந்த சிறுவன் ஆகியோர் சிறுமியை 4 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
4 நாட்களுக்கு பிறகு சிறுமியை என்.டி.ஆர் மாவட்டம் மச்சாவரம் சாலையில் விட்டு தப்பி சென்றனர்.
அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் சிறுமியை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். பாலியல் வன்கொடுமையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமியால் பேச முடியவில்லை.
இதையடுத்து போலீசார் சிறுமியை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது சம்பந்தமாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 7 பேரையும் கைது செய்தனர்.
- அணையில் மொத்தமுள்ள 90 அடியில் 51.12 அடி நீர்மட்டம் உள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 74 கன அடி நீர்வரத்தும், அணையில் இருந்து பாசனத்திற்கு 170 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் ஆகிய 8 ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்களில் இரண்டாம் போகம், சம்பா பருவ நெல் சாகுபடிக்காக வருகிற 30-ந்தேதி வரை அணையில் இருந்து நீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் பயன்பெறும், 25,250 ஏக்கர் நிலங்களில் உள்ள நிலைப்பயிர்களை காப்பாற்றும் வகையில் வருகிற 20-ந்தேதி வரை நீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வறட்சி நிலை காணப்படுவதால் கடந்த 2 மாதமாக அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையில் இருந்து தொடர்ந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. அணையில் மொத்தமுள்ள 90 அடியில் 51.12 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 74 கன அடி நீர்வரத்தும், அணையில் இருந்து பாசனத்திற்கு 170 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தாராபுரம் நகராட்சி மற்றும் வழியோர கிராமங்கள் குடிநீர் தேவைக்காக அணை நீராதாரத்தை நம்பியுள்ளதால், கோடை காலத்தை சமாளிக்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அணை நீர் நிர்வாகத்தை முறைப்படுத்தவும், பாசன நிலங்களுக்கு உயிர்த்தண்ணீர் மற்றும் குடிநீர் தேவைக்காக இருப்பு வைக்க வேண்டும் என 2 மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 500 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் இன்றைய நிலவரப்படி 1500 கன அடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- கொலை செய்யப்பட்ட ஜானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த ஜான் மீது 2 கொலை வழக்கு உட்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது என தெரியவந்தது.
ஈரோடு:
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்கியன். இவரது மனைவி ஆதிரா. ஜான் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சேலத்தில் இருந்து ஜான் மற்றும் அவரது மனைவி ஆதிரா திருப்பூர் செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றனர்.
ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாமி கவுண்டம்பாளையம் பிரிவு அருகில் இன்று மதியம் 12.15 மணிக்கு அவர்களது கார் சென்று கொண்டிருந்தது. அவர்களது காரை பின் தொடர்ந்து வந்த மர்மகும்பல் ஜான் சென்ற காரை வழிமறித்து நிறுத்தியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் மர்மகும்பல் ஜானை சரமாரியாக வெட்டினர். இதை தடுக்க சென்ற அவரது மனைவி ஆதிராவுக்கும் அரிவாள் விட்டு விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஜான் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின்னர் அந்த மர்ம கும்பல் மற்றொரு காரில் ஏறி தப்பி சென்றது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆதிராவை மீட்டு நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட ஜானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நேரில் சென்று பார்வையிட்டார். பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த ஜான் மீது 2 கொலை வழக்கு உட்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது என தெரியவந்தது. ஈரோட்டில் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இந்த ஆண்டு என்ஜினீயரிங் வகுப்புகள் முன்கூட்டியே தொடங்கப்பட உள்ளது.
- இந்த கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 2-வது வாரத்தில் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 430-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் இளநிலை படிப்புகளில் சுமார் 1.70 லட்சம் இடங்கள் வரை உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இணையதளம் வழியாக நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு மொத்தம் 1.70 லட்சம் என்ஜினீயரிங் இடங்கள் இருக்கும் நிலையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.
இந்த ஆண்டு என்ஜினீயரிங் வகுப்புகள் முன்கூட்டியே தொடங்கப்பட உள்ளது. இதனால் என்ஜினீயரிங் கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இந்த கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 2-வது வாரத்தில் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே தரவரிசை பட்டியலும் முன்னதாகவே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 22-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை நடந்தது.
இந்த ஆண்டு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையின் ஒவ்வொரு செயல்முறையும் ஆன்லைனில் நடைபெற இருப்பதால் நேரத்தை மிச்சப்படுத்த கலந்தாய்வு கால அளவு குறைக்கப்படலாம். இருந்தாலும் இந்த யோசனை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெறப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பால்க்கன்-9 எனும் ராக்கெட்டுடன், டிராகன் எனும் விண்கலம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது
- அவர் பத்திரமாக மீண்டும் பூமிக்கு வந்தடைந்த செய்தி, நம் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
சென்னை:
சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார். அவர் ஆற்றிய உரை வருமாறு:-
விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ். எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பூமிக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. இவர்களது உடல்நிலை பாதிக்கப்படும் எனவும், உயிருக்கு ஆபத்து எனவும் பல தகவல்கள் வெளிவந்தன. இருந்தும், அந்த விண்வெளி மையத்தில் அவர்கள் அயராது தங்களது பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், பால்க்கன்-9 எனும் ராக்கெட்டுடன், டிராகன் எனும் விண்கலம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. இதன்மூலமாக சுனிதா வில்லியம்ஸ் அவர்களும், புட்ச் அவர்களும், அங்கிருந்த மேலும் 2 வீரர்களோடு இணைந்து பயணித்து, பத்திரமாக புளோரிடா அருகே கடலில் தரையிறங்கினர்.
அவர் பத்திரமாக மீண்டும் பூமிக்கு வந்தடைந்த செய்தி, நம் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இத்தருணத்தில் சுனிதா வில்லியம்சுக்கும், அவரை பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டவர்களுக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூடல்புதூர் போலீசார், காரின் கண்ணாடிகளை உடைத்து கதவை திறந்து பார்த்தபோது, காருக்குள் படுத்த நிலையில் கருப்பசாமி பிணமாக கிடந்தார்.
- பிணமாக கிடந்த கருப்பசாமியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை:
மதுரையை அடுத்த எஸ்.ஆலங்குளம் டிசைன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 45). இவர் செல்லூர் மண்டல பா.ஜ.க. ஓ.பி.சி. அணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கட்சி பணியில் சமீப காலமாக தீவிரம் காட்டி வந்த அவர் தனி அணி சார்பில் பல்வேறு கூட்டங்களையும் நடத்தி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி வந்தார்.
இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு தனக்கு சொந்தமான காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றவர் அதன் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்ப உறுப்பினர்கள் கருப்பசாமியை உறவினர்கள், நண்பர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக தேடினர். அத்துடன் பா.ஜ.க. நிர்வாகளிடமும் விசாரித்தனர்.
ஆனாலும் கருப்பசாமி குறித்த எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து கருப்பசாமி மாயமான குறித்து அவரது குடும்பத்தினர், கூடல்புதூர் போலீசில் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கருப்பசாமியை தேடினர். மேலும் அவரது கார் சென்றுவந்த பாதைகள் குறித்து டோல்கேட் உள்ளிட்ட இடங்களிலும் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் இன்று காலை கூடல்புதூர் பகுதியில் தனியாக கேட்பாரின்றி நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அருகில் சென்று பார்த்தபோது உள்ளே ஒருவர் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த கூடல்புதூர் போலீசார், காரின் கண்ணாடிகளை உடைத்து கதவை திறந்து பார்த்தபோது, காருக்குள் படுத்த நிலையில் கருப்பசாமி பிணமாக கிடந்தார். அவரது உடல் பாகங்கள் லேசாக அழுகிய நிலையில் காணப்பட்டது. அவர் இறந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிணமாக கிடந்த கருப்பசாமியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது காரில் அமர்ந்திருந்தபோது மாரடைப்பு வந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பாராளுமன்ற வளாகத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்
- Fair Delimitation என்ற பெயர் தாங்கிய பெரிய துணியை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பிடித்திருந்தனர்.
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடைபெற்று வருகிறது. பாராளுமன்றத்தில் தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிக்க தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசு வழங்கி இருந்தார். ஆனால் இது பற்றி விவாதிக்க சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து தி.மு.க. எம்.பி.க்கள் பாாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், இன்று பாராளுமன்ற வளாகத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது Fair Delimitation என்ற பெயர் தாங்கிய பெரிய துணியை எம்.பி.க்கள் பிடித்திருந்தனர்.
போராட்டத்தின்போது பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, "தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்பட்டால் நாடாளுமன்றத்தில் எங்களது குரலின் வலிமை குறைந்துவிடும்" என்று தெரிவித்தார்.
வரும் 22 ஆம் தேதி சென்னையில், தொகுதி மறுசீரமைப்புக்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஹமர் மற்றும் ஜோமி பழங்குடியினரிடையே மோதல் ஏற்பட்டது.
- கடைகள் மற்றும் சொத்துக்களை சூறையாடிய கலவரக்காரர்களை அடக்க போலீசார் போராடினர்.
மணிப்பூரில் சூரசந்த்பூர் மாவட்டத்தில், ஹமர் பழங்குடியினத் தலைவர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட்டார்.
இதனால் ஹமர் மற்றும் ஜோமி பழங்குடியினரிடையே மோதல் ஏற்பட்டது. எனவே சூரசந்த்பூரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு தீர்வு காணும் விதமாக இரு சமூக தலைவர்களும் கடந்த திங்கள்கிழமை அமைதி உடன்படிக்கை ஒன்றை எட்டினர். ஆனால் நேற்று இரவே மீண்டும் இரு சமூகத்தினரிடையேயும் மோதல் வெடித்தது.
அப்பகுதியில் ஜோமி பழங்குடியினர் தங்கள் சமூகத்தின் கொடியை ஏற்ற ஹமர் பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்தபோது இருதரப்புக்கும் வன்முறையில் இறங்கியது. கல்வீச்சு சம்பவங்கள் மற்றும் தாக்குதல்கள் நிகழ்ந்தன. இதில் லால்ரோபுயி பாகுமாட்டே என்ற 53 வயது நபர் உயிரிழந்தார்.
மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். கலவரத்தை அடக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். கடைகள் மற்றும் சொத்துக்களை சூறையாடிய கலவரக்காரர்களை அடக்க போலீசார் போராடினர். சூரசந்த்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே குக்கி மற்றும் மெய்தேய் பழங்குடியினரையே கடந்த வருடம் முதல் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து பார்வையிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் இன்று மணிப்பூர் வருகின்றனர். இந்த கலவரத்தில் இதுவரை 250 க்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- டெல்லியில் யாரையெல்லாம் சந்தித்து பேசுவார் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை 6.50 மணிக்கு டெல்லி சென்றார். டெல்லியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இன்று டெல்லியில் தங்கி இருக்கும் அவர் மத்திய மந்திரிகளை சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 22-ந்தேதி தென்மாநில கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்த இருக்கிறார். இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவர் டெல்லியில் யாரையெல்லாம் சந்தித்து பேசுவார் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இன்று முழுவதும் டெல்லியில் இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை மாலை சென்னை திரும்புகிறார்.






