search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    ஒர்க் பிரம் ஹோம்
    X
    ஒர்க் பிரம் ஹோம்

    ‘ஒர்க் பிரம் ஹோம்’ ஊழியர்களின் கொண்டாட்டமும், திண்டாட்டமும்..

    அலுவலகத்தில் வேலைகளைச் செய்யும் போது ஏற்படும் சோர்வு மற்றும் களைப்பை விட, வீட்டிலிருந்து வேலைகள் செய்வதில் அதிகமான அளவு சோர்வும், களைப்பும் ஏற்படுவதாக பலரும் தெரிவிக்கின்றனா்.
    ஒரு காலத்தில் வீட்டிலிருந்தபடியே அலுவலகப் பணிகளைச் செய்வது என்பது ஒரு கனவாக இருந்தது. ஆனால் கொரோனா நோய் தொற்று பரவலின் காரணமாக இப்போது அது நடைமுறையில் சாத்தியமாகி இருக்கிறது.

    ‘ஒர்க் பிரம் ஹோம்’ முறையில் வீட்டிலிருந்து வேலை செய்வதால், அதிகாலையிலேயே எழுந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது, நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்காது மற்றும் பணிகள் சம்பந்தமாக நடத்தப்படும் கூட்டங்களில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. அதோடு மேலதிகாரிகளிடமிருந்து வரும் நெருக்கடிகளை நேரடியாக சந்திக்க வேண்டி இருக்காது. அதே நேரத்தில், ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல வீட்டிலிருந்து வேலை செய்வதில் ஒரு சில எதிர்மறை விளைவுகளும் உள்ளன.

    ஒரு குறிப்பிட்ட கால அட்டவணையைப் பின்பற்றாமல், நீண்ட நேரமோ அல்லது எல்லா நேரங்களிலுமோ அலுவலகப் பணிகளைச் செய்ய வேண்டியிருக்கும். இது பலருக்கு மன அழுத்தத்தைக் கொடுத்து, மனம் சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பலா் தங்கள் உடல் அளவிலும், மனதளவிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணா்கின்றனா்.

    அலுவலகத்தில் வேலைகளைச் செய்யும் போது ஏற்படும் சோர்வு மற்றும் களைப்பை விட, வீட்டிலிருந்து வேலைகள் செய்வதில் அதிகமான அளவு சோர்வும், களைப்பும் ஏற்படுவதாக பலரும் தெரிவிக்கின்றனா். ‘ஒர்க் பிரம் ஹோம்’ பணி அனுபவத்தில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன, எதிர்காலத்தில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பவற்றை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

    தசைக்கூட்டு வலி

    வீட்டிலிருந்து வேலை செய்வதால், நமது தசைகள், எலும்புகள், தசை நார்கள், தசை நாண்கள் மற்றும் நரம்புகளில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதற்கு முக்கிய காரணம் அலுவலகத்தில் கிடைக்கும் வசதியான நாற்காலிகள் நமது வீடுகளில் இருக்காது. ஆகவே வசதி இல்லாத நாற்காலிகளில் நீண்ட நேரம் அமா்ந்து வேலைகளைச் செய்யும் போது மிக எளிதாக கழுத்து வலி மற்றும் முதுகு வலி போன்றவை ஏற்படுகின்றன.

    வீட்டிலிருந்து வேலை செய்யும் அனைவருக்குமே இவை பொதுவான பிரச்சினைகளாக இருக்கின்றன. இதைத் தவிர்க்க வேண்டும் என்றால், படுக்கையிலோ அல்லது கட்டில்களிலோ அமா்ந்து வேலை செய்யக்கூடாது. ஒரு நல்ல நாற் காலியை வாங்கி, அதில் நிமிர்ந்தபடி அமா்ந்து வேலைகளைச் செய்ய வேண்டும்.

    கண்களில் அழுத்தம்

    வீட்டில் இருந்து வேலை செய்வதால், நாம் நெடு நேரம் நமது கணினி அல்லது மடி கணினித் திரைகளைக் கூா்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் நமது கண்கள் மங்குகின்றன, கண்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுகிறது. மேலும் கணினி மற்றும் மொபைல் போன்ற மின்னணுக் கருவிகளை அடிக்கடி பயன்படுத்தும் போது நமக்குத் தலைவலி ஏற்படுகிறது. அவற்றின் திரைகளை நாம் வெகு அருகில் அமா்ந்து பார்க்கும் போது கண் தசைகள் மிகவும் இறுக்கமடைகிறது. மின்னணு கருவிகளின் திரைகளில் இருந்து வரும் ஊதா வண்ண வெளிச்சம் நமது கண் பார்வைக்கு தடையாக இருக்கிறது.

    தற்காலிக கேட்கும் திறன் இழப்பு

    வீட்டிலிருந்து வேலை செய்வதால், நாம் பணி சார்ந்த கூட்டங்களில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், இணைய காணொளி மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அந்த கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டிய சூழல்ஏற்படும். அவ்வாறு கலந்து கொள்ளும் போது இயா் போன்களைப் பயன்படுத்துவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது அவற்றின் சத்த அளவை அதிகமாக வைத்துக் கொள்ளாமல், பாதுகாப்பான குறைந்த அளவில் வைத்துக் கொள்ள வேண்டும். தவறினால் நமக்கு தற்காலிகமாக கேட்கும் திறன் இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

    தனிமை உணா்வு

    வீட்டிலிருந்து வேலை செய்யும் போது, நாம் நமது குடும்ப உறுப்பினா்களிடமிருந்து நம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டு, தனி அறையில் அமா்ந்து வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். நமது சக அலுவலகத் தோழா்கள், பணியாளா்கள் நமது அருகில் இருக்கமாட்டார்கள். அதனால் நமக்கு அதிகமான அளவில் மன அழுத்தம், மனச் சோர்வு, கவலை மற்றும் வருத்தம் போன்ற எதிர்மறை உணா்வுகள் அதிகம் ஏற்படுகின்றன. நீண்ட நேரம் தனியாக அமா்ந்து வேலை செய்யும் போது நமக்குத் தனிமை உணா்வு ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது.

    உடல் எடை அல்லது பருமன் அதிகாித்தல்

    வீட்டிலிருந்து வேலை செய்வதால், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமா்ந்து வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதனால் நமது உடல் எடை அதிகரிக்கிறது. இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். உடல் குண்டாக இருந்தால், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

    போதுமான தூக்கம் இல்லாமை

    வீட்டில் வேலை செய்யும் போது, ஒரு திட்டமிட்ட கால அட்டவணையைப் பயன்படுத்தி நாம் வேலை செய்வது இல்லை. எல்லா நேரங்களிலும் மின்னணு கருவிகளில் மூழ்கி இருக்கிறோம். அதனால் இரவு நேரத்தில் ஆந்தையைப் போல் விழித்திருந்து வேலை செய்கிறோம். போதுமான தூக்கம் இல்லாமல் போனால் அது நமது மன நிம்மதியைக் கெடுத்துவிடும். மேலும் நாம் ஒருமுகப்படுத்தும் திறனை இழந்து, நமது அலுவல்களைச் சரியாகச் செய்ய முடியாத நிலை ஏற்படும். ஆகவே போதுமான அளவு தூங்க வேண்டும்.

    Next Story
    ×