search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பெண்களுக்கு டீன் ஏஜ் பருவத்தில் வரும் பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும்
    X

    பெண்களுக்கு டீன் ஏஜ் பருவத்தில் வரும் பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும்

    • டீன் ஏஜ் பெண்கள் தங்கள் சிக்கல்கள் குறித்து மனம் விட்டுப் பேசவேண்டும்.
    • டீன் ஏஜ் பெண்களுக்கு தாயின் அரவணைப்பு மிக முக்கியம்.

    பதின்பருவத்தில் தவறு என உணராமல் டீன் ஏஜ் பெண்கள் செய்யும் சிறுசிறு செயல்கள்கூட பெரிய இடர்பாடுகளை ஏற்படுத்தலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பதின்பருவத்தில் வரும் பிரச்னைகளும், அதற்கான தீர்வுகளும் இங்கே...

    * பதின் பருவத்தில்தான் அதிகமான வளர்ச்சிதை மாற்றம் நிகழும்; உடல் மற்றும் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். அதனால் டீன் ஏஜ் பெண்கள் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கார்போஹைட்ரேட், புரதம், விட்டமின், மினரல், நல்ல கொழுப்பு, இரும்புச்சத்து, கால்ஷியம் நிறைந்த உணவுகளை சரிவிகித அளவில் உட்கொள்ள வேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இல்லாவிட்டால், உடல் எடை அதிகமாகிவிடும். இதனால் இறுதிகட்ட பள்ளிப் பருவமும், ஆரம்பகட்ட கல்லூரிப் பருவமும் அவர்களுக்கு தாழ்வுமனப்பான்மை தரலாம்.

    * குழந்தைப் பருவத்தில் இருந்து உணராத தன் அழகு மற்றும் உருவத்தோற்றம் குறித்தும், தன் மீது மற்றவர்கள், குறிப்பாக தன் வயதுக்கு இணையான எதிர்பாலினத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் பதின் வயதில் அதிகளவில் நினைக்கத் தோன்றும். அதனால்தான் உடுத்தும் உடை, செய்துகொள்ளும் மேக்கப் உள்ளிட்டவை பொருத்தமாக இருக்குமா, மற்றவர்களுக்குப் பிடிக்குமா, மற்றவர்கள் தன்னை என்ன சொல்வார்கள் என தனக்குள்ளேயே பல கேள்விகளை அடிக்கடி கேட்டுக்கொள்வார்கள். இவையெல்லாம் அப்பருவத்தில் உடல் ரீதியாக ஏற்படும் விஷயங்கள்தான் என்றாலும், உடல், அழகு மீதான அதீத அக்கறையும், ஈடுபாடும் கொள்ள வேண்டாம் என்பதே அவர்களுக்கான அறிவுரை. இதனால் அவர்கள் படிப்பில் சரியான கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.

    * பரு, மரு, முடி உதிர்தல், முகத்தில், கை கால்களில் அதிகம் ரோமம் வளர்தல் பருவப் பெண்களுக்கு கவலையை உண்டாக்கலாம். பெரிய ஹீல்ஸ் கொண்ட செப்பல் பயன்படுத்த, டாட்டூ குத்திக்கொள்ள, மார்டன் உடை அணிய, அடிக்கடி பியூட்டி பார்லர் செல்ல, வித்தியாசமான அக்ஸசரீஸ் பயன்படுத்த அதிக ஈடுபாடு வரும்.

    * மாதவிடாய் வலி, அதிகமான உதிரப்போக்கு, அடிவயிற்றில் விட்டு விட்டு வலி, சீரற்ற மாதவிடாய் போன்ற சிக்கல்களால் பல டீன் ஏஜ் பெண்கள் அடிக்கடி அவதிப்படுவார்கள். இதனால் அச்சப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை. இது இயற்கையான ஒரு விஷயம் என்பதை உணர வேண்டும். தங்கள் உடல்நிலையைப் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு, சீரான இடைவெளியில் மாதவிடாய் நிகழ, தாயின் உதவியுடன் நேர்த்தியான வாழ்க்கை முறையையும், தேவைப்பட்டால் மருத்துவ ஆலோசனையும் பெற்று, தங்கள் ஆரோக்கியத்தையும், சுகாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும்.

    * பருவப் பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்ய சோம்பல் படுவார்கள். காலை உணவு உள்பட தினமும் உணவு சாப்பிடவேண்டிய நேரத்துக்குச் சரியாக சாப்பிட மாட்டார்கள். வீட்டில் அம்மா, அப்பா உள்ளிட்ட யாரோ ஒருவர் பல முறை சொன்னால்தான் சாப்பிடுவார்கள். சாப்பிட்ட பின்னர், உடல் உறுப்புகளுக்கு பயிற்சி கொடுக்கும் வகையில் ஏதாவது வேலைகளைச் செய்யாமல் உடல் பருமன் பிரச்னைக்கு ஆளாவார்கள். அதேபோல, காய்கறிகள் தவிர்ப்பது, ஜங்க் ஃபுட் விரும்புவது என உணவு விஷயத்தில் காட்டும் அலட்சியத்தால் ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கும் ஆளாவார்கள். எனவே, சரியான நேரத்துக்கு சரிவிகித உணவு எடுத்துக்கொள்வதும், வீட்டு வேலைகள், உடற்பயிற்சி, விளையாட்டு என்று உடலுக்கு இயக்கம் கொடுக்க வேண்டியதும் முக்கியம்.

    * கல்வி கற்பதிலும், தேர்வுகளை குழப்பமின்றி எழுதுவதிலும், எதிர்காலச் சிந்தனைகள் குறித்தும் பல கவலைகளை பருவ வயதினர் சந்திக்க நேரிடும். குறிப்பாக எதிர்பாலினத்தவர் மீதான நட்புக்கும், ஏஜ் அட்ராக்‌ஷனுக்கும், காதலுக்குமான இடைவெளி, உண்மையான அர்த்தம் புரியாமல் தடுமாறும் பருவம் இது. அம்மா, அப்பா உள்ளிட்ட தங்கள் மீது அக்கறை கொண்ட ஒருவரிடம் தினமும் டீன் பெண்கள் தங்கள் சிக்கல்கள் குறித்து மனம் விட்டுப் பேசவேண்டும். இது மன அழுத்தத்தில் இருந்து அவர்களைக் காப்பதுடன், வாழ்க்கையின் முக்கியமான முடிவை தவறாக எடுத்துவிடுவதால் ஏற்படும் சிக்கல்களையும் அவர்களைத் தவிர்க்கச் செய்யும்.

    * டீன் ஏஜ் பெண்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகள், ஸ்ட்ரெஸ், டென்ஷன், டிப்ரஷன், தூக்கமின்மை. அன்றாடம் நடைப்பயிற்சி, தியானம், சுவாசப் பயிற்சி, பிடித்த வெல்விஷரிடம் பேசுவது, இயற்கை காட்சிகளை ரசிப்பது, வளர்ப்பு பிராணிகளுடன் விளையாடுவது, குழந்தைகளுடன் விளையாடுவது, மன அழுத்தம் குறைக்கும் பாடல்களைக் கேட்பது போன்ற செயல்பாடுகளைச் செய்வது அவர்களின் மன இறுக்கத்தைக் குறைத்து நல்ல பலன் கொடுக்கும்.

    * நேரம் காலம் போவதே தெரியாமல் செல்போனில் நண்பர்களிடம் பேசிக்கொண்டே இருப்பது, இன்டர்நெட்டில் அதிக நேரத்தை செலவிடுவதை பருவ வயதினர் தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஃபேஸ்புக்கில் முகம் தெரியாத நபரை நண்பராக ஏற்றுக்கொண்டு அவரிடம் தன் பெர்சனல் விஷயங்களை பகிர்தல் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். தன் அழகை வர்ணிக்கும் எதிர்பாலினத்தவரிடம் நன்மதிப்பை ஏற்படுத்திக்கொள்ள நினைப்பது, நல்ல நண்பர், போலியான நண்பரை அடையாளம் காண முடியாமல் அனைவரிடமும் எதார்த்தமாகப் பழகுவது இவையெல்லாம் இந்த வயதுக்குப் பாதுகாப்பற்ற செயல்கள்.

    * பதின் பருவ பெண்கள், ஆண்களால் நேரடியாகவோ அல்லது போன் வாயிலாகவோ பல பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ள நேரிடலாம். இதனால் அச்சப்பட்டு தனக்குள்ளேயே பிரச்னையை வைத்துக்கொள்ளவோ, தானே சிக்கலைத் தீர்க்கவோ நினைக்கக் கூடாது. பெற்றோர் அல்லது நலன் விரும்பிகளிடம் அதுபற்றிப் பகிர்ந்து தீர்வு காண வேண்டும்.

    * அறிவுரை சொல்பவரைக் கண்டாலே கோபப்படுவது, தனிமையை விரும்புவது, கூட்டத்தைத் தவிர்க்க நினைப்பது, நம்மால் முடியுமா என்ற எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுவது, தயக்கம்... இதுபோன்ற டீன் ஏஜ் சிக்கல்களைத் தீர்க்க, விளையாட்டு நல்ல பலன் கொடுக்கும். மேலும் தனக்கான எதிர்கால லட்சியங்களை தீர்க்கமாக முடிவெடுத்து அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதால், மேற்கண்ட சிக்கல்கள் ஏற்படாலும், தோன்றாமலும் தடுக்க முடியும்.

    டீன் ஏஜ் பெண்ணின் அம்மாவுக்கு சில வார்த்தைகள்...

    பருவப் பெண்களுக்கு தாயின் அரவணைப்பு மிக முக்கியம். மகள் என்ன செய்கிறாள், யாருடன் எல்லாம் பழகுகிறாள் என தெரியாமல் இருப்பதும் தவறு; மகள் எதைச் செய்தாலும் அதை தவறான கண்ணோட்டத்திலேயே பார்ப்பதும் தவறு.

    மகளின் அன்றாட பேச்சு, பழக்க வழக்கங்களை முறையாக கவனிப்பதுடன், மகளின் தோழிகளை அவ்வப்போது வீட்டுக்கு அழைத்து, அவளுக்கு ஏதாவது சிக்கல் இருக்கிறதா எனக் கேளுங்கள். அவளின் உடல்ரீதியான மாற்றங்களை முறைப்படுத்தி, மகளின் உடை, அலங்காரம் சார்ந்த விஷயங்களில் கட்டுப்பாடும், படிப்பில் போதிய நாட்டமும் இருக்கும்படியாக பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை.

    Next Story
    ×