search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நோய் எதிர்ப்பு சக்தி தரும் விளாம்பழம்
    X

    நோய் எதிர்ப்பு சக்தி தரும் விளாம்பழம்

    பலமான ஓட்டுடன் பார்ப்பதற்கு மிக சாதாரணமாகத் தெரியும் விளாம்பழம் பல்வேறு மருத்துவ குணங்களைக்கொண்டது.
    பலமான ஓட்டுடன் பார்ப்பதற்கு மிக சாதாரணமாகத் தெரியும் விளாம்பழம் பல்வேறு மருத்துவ குணங்களைக்கொண்டது. இதன் கொழுந்து, இலை, காய், பிசின், பழம், ஓடு போன்ற அனைத்து பாகங்களும் மருந்துகளில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    ‘விட்டதடி ஆசை விளாம்பழத்தின் ஓட்டோடு’ என்றொரு சொலவடை உண்டு. ‘பழத்தின் மீதான ஆசை, ஓட்டை பார்த்ததும் ஓடிவிட்டது’ என்பது இதன் அர்த்தம்.

    விளாங்காய் ஓட்டோடு ஒட்டிய நிலையில் இருக்கும். பழுத்து பக்குவத்திற்கு வந்ததும் எடைகுறைந்து, உள்ளுக்குள்ளேயே ஓட்டைவிட்டு விலகி விடும். நன்கு பழுத்த பழம், புளிப்பு கலந்த இனிப்பு சுவைதரும். எண்ணற்ற விதைகள் இருக்கும். விதைகளும் சுவை பொருந்தியதுதான்.

    விளாம்பழம் தசை வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை தருகிறது. ரத்தத்தை சுத்தம் செய்கிறது. ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. பசியை அதிகரிக்கிறது.

    பித்தம் அதிகரிப்பதால் தலைவலி, கண்பார்வை மங்கல், இளநரை, ருசியின்மை போன்றவை ஏற்படும். அவைகளை இந்த பழம் போக்கும். இதில் புரதமும், தாது சத்துகளும் அதிகம் உள்ளதால், எலும்புகளை உறுதியாக்கும். ஞாபக சக்தியை மேம்படுத்தும். இதை ஒரு சிறந்த ஊட்டச்சத்து உணவாக போற்றலாம்.

    விளாம்பழத்திற்கு சளியை அகற்றும்தன்மை இருக்கிறது. அதனுடன் அரை தேக்கரண்டி திப்பிலி பொடி கலந்து சாப்பிட்டால், மூச்சிறைப்பு மற்றும் மேல்மூச்சு ஏற்படுதல், விக்கல் போன்றவை நீங்கும். தொண்டை நோய்களும் குணமாகும். கல்லீரலில் உள்ள பிரச்சினைகளை போக்கும் சக்தியும் விளாம்பழத்திற்கு இருக்கிறது.

    பூச்சிகள் மற்றும் விஷஜந்துக்கள் கடித்த இடங்களில் விளாம்பழத்தை பிசைந்து பூசலாம். புறஊதா கதிர்களால் முகத்தில் உண்டாகும் கருத்திட்டுகளுக்கு பழக்கூழை பூசி, பத்து நிமிடங்கள் வைத்திருந்து முகம்கழுவவேண்டும்.

    விளா மர கொழுந்தை அரைத்து ஐந்து கிராம் அளவு எடுத்து, 100 மி.லி. பாலில் கலந்து சுவைக்கு கற்கண்டு கலந்து பருகினால், இருமல் இளைப்பு, பித்தசூடு போன்றவை நீங்கும்.

    விளா மர இளந்தளிரை அரைத்து 10 கிராம் அளவு எடுத்து, 200 மி.லி. மோரில் கலந்து காலை, மாலை இரு நேரம், மூன்று நாட்கள் பருகினால், வயிற்று நோய்கள் குணமாகும். கொழுந்தை அரைத்து சாறு பிழிந்து வேர்குரு மற்றும் கோடை கொப்பளங்கள் மீது பூசி குளித்தால், நிவாரணம் கிடைக்கும்.

    விளாங்காயை நீரிலிட்டு அவித்து, ஓட்டை நீக்கிவிட்டு தசைப் பகுதியை எடுக்கவேண்டும். அதை கஞ்சியில் கலந்து குடித்தால் மூலநோய் கட்டுப்படும்.

    காயின் தசையை அவிக்காமல் வெயிலில் காயவைத்து பாதுகாத்து, புளிக்கு பதிலாக காய்கறிகளுடன் கலந்து சாப்பிடும் பழக்கம் இலங்கை மக்களிடம் உள்ளது.

    விளாம்பழத்தின் பிசின் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதில் சிறிதளவு எடுத்து, அரை தேக்கரண்டி வெண்ணெய்யுடன் கலந்து சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், நீர்எரிச்சல், மாதவிடாய் நேரத்தில் உண்டாகும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை நீங்கும். அதில் சிறு துண்டை வாயில் இட்டு சுவைத்தால் இருமல் நிற்கும். விளாம்பழ ஓட்டை காயவைத்து தூளாக்கி, சீயக்காய் தூள் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், சூடு நீங்கும். முடி உதிராது. இளநரை மாறும்.

    விளாம் மரங்கள் இப்போது அரிதாகிவிட்டன. அதன் பழங்களும் இப்போது பலராலும் உண்ணப்படுவதில்லை. விளாம் மரங்கள் அதிகம் வளர்க்கப்பட வேண்டும். இதன் பயன்பாட்டில் மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். இந்த பழத்தில் ஜாம், ஜெல்லி, பழக்கூழ், ஜூஸ் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட உணவுகளை தயாரிக்க முடியும்.

    விளாம்பழம் ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கிடைக்கும். விநாயகருக்கு மிக விருப்பமான பழம் என்பதால் விநாயக சதுர்த்திக்கு படைப்பது வழக்கம்.
    Next Story
    ×