என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • ஓணம் பண்டிகையை முன்னிட்டு மோகன்லால் நடித்த ஹிருதயபூர்வம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • படத்தின் இசையை Sam CS மேற்கொண்டுள்ளார்.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு மோகன்லால் நடித்த ஹிருதயபூர்வம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இதனை தொடர்ந்து மோகன்லால் அடுத்ததாக விருஷபா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இது ஒரு பான் இந்தியன் காவியமாக உருவாகி வருகிறது. மோகன்லால் உடன் ஷனயா கபூர், ஜாரா கான், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ரகினி துவேவிடி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை நந்தா கிஷோர் இயக்கியுள்ளார். மேலும் எக்தா ஆர் கபூர் (Balaji Telefilms), Connekkt Media, AVS Studios ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை Sam CS மேற்கொண்டுள்ளார்.

    இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அரசர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

    • 19ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் விளாசினார்.
    • இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் குசல் மெண்டிஸ்.

    2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று இலங்கை அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. ரஹ்மதுல்லா குர்பாஸ், செதிக்குல்லா அடல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    குர்பாஸ் 14 ரன்னிலும், அடல் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கரிம் ஜனத் 1 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். இப்ராகிம் ஜத்ரன் 24 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த ரசூலி 9 ரன்னிலும், ஓமர்சாய் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனால் 79 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் திணறியது. 7ஆவது விக்கெட்டுக்கு முகமது நபி உடன், ரஷித் கான் ஜோடி சேர்ந்தார். ரஷித் கான் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆனால், முகமது நபி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 19ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் விளாசினார்.

    கடைசி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் வெலாலகே வீசினார். இந்த ஓவரின் முதல் 3 பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார் முகமது நபி. அடுத்த பந்தை நோ-பாலாக வீசினார். அடுத்து அடுத்த இரண்டு பந்துகளையும் சிக்கருக்கு தூக்கினார். 4ஆவது சிக்ஸ் அடிக்கும்போது 20 பந்தில் அரைசதம் அடித்தார்.

    கடைசி பந்தில் 2 ரன்களுக்கு ஓடும்போது முகமது நபி ஆட்டமிழந்தார். அவர் 22 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது.

    170 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை அணி, 8 பந்துகள் மீதமிருக்க, இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

    இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் குசல் மெண்டிஸ். அவர் 52 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கமெண்டிஸ் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து சிறப்பான பங்களிப்பை அளித்தார்.

    இந்த வெற்றியின் மூலம், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தோல்வியின் மூலம், ஆப்கானிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது.   

    இந்த தொடரில் குரூப் A  இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவில்குரூப் B பிரிவில் இலங்கை, வங்கதேசம்  ஆகிய அணிகள் சூப்பர் 4  சுற்றுக்கு முன்னேறியுள்ளன.  இதற்கிடையே இன்று (செப்டம்பர் 19) ஓமன் அணியுடன் குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா மோதுகிறது.

    • ரோபோ சங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு.
    • ரோபோ சங்கர் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

    ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்தார்.

    இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார்.

    இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ரோபோ சங்கரின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ரோபோ சங்கர்

    ரோபோ புனைப்பெயர் தான்

    என் அகராதியில் நீ மனிதன்

    ஆதலால் என் தம்பி

    போதலால் மட்டும் எனை விட்டு

    நீங்கி விடுவாயா நீ?

    உன் வேலை நீ போனாய்

    என் வேலை தங்கிவிட்டேன்.

    நாளையை எமக்கென நீ விட்டுச்

    சென்றதால்

    நாளை நமதே.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஜெய்ப்பூர் அணிக்கு 43 ரெய்டுகளில் 20 ரெய்டு வெற்றிகரமாக அமைந்தது. இதில் 28 புள்ளிகள் கிடைத்தன.
    • பெங்கால் அணிக்கு 46 ரெய்டுகளில் 23 ரெய்டுகள் வெற்றிகரமாக அமைந்தன. இதில் 29 புள்ளிகள் கிடைத்தன.

    புரோ கபடி லீக் 2025 சீசனில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்கால் வாரியார்ஸ் அணிகள் மோதின. இதில் ஜெய்ப்பூர் அணி 45-41 என 4 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதல் பாதி நேர ஆடடத்தில் ஜெய்ப்பூர் 24-18 என முன்னிலை பெற்றது. 2ஆவது பாதி நேர ஆட்டத்தில் 21-23 என சறுக்கினாலும் வெற்றியை உறுதி செய்தது.

    ஜெய்ப்பூர் அணிக்கு 43 ரெய்டுகளில் 20 ரெய்டு வெற்றிகரமாக அமைந்தது. இதில் 28 புள்ளிகள் கிடைத்தன.

    பெங்கால் அணிக்கு 46 ரெய்டுகளில் 23 ரெய்டுகள் வெற்றிகரமாக அமைந்தன. இதில் 29 புள்ளிகள் கிடைத்தன.

    ஜெய்பூர் அணிக்கு டேக்கிள் மூலம் 13 புள்ளிகள் கிடைத்தன. இதில் 3 சூப்பர் டேக்கிள் மூலம் கிடைத்தன. பெங்கால் அணிக்கு 8 புள்ளிகள் கிடைத்தன.

    • அபகரிப்பு அரசியலில் இருந்து அரவணைக்கும் அரசியலை நோக்கி நகர்ந்திருக்கிறேன்.
    • அவருடைய உள்ளாசை திராவிட கழகம் ஒன்றாக வேண்டும் எனக் கூட நினைக்கலாம்.

    திமுகவில் இணைந்தது குறித்து மருது அழகுராஜ் கூறியதாவது;-

    அபகரிப்பு அரசியலில் இருந்து அரவணைக்கும் அரசியலை நோக்கி நகர்ந்திருக்கிறேன். 20 வருடமாக அதிமுகவிற்கு என்னுடைய தமிழ், எழுத்து, பேச்சையும் ஒப்படைத்து உழைத்தவன். எடப்பாடியின் அபகரிப்பு அரசியலை, ஆக்கிரமிப்பு அரசியலை ஜனநாயகத்திற்கு புறம்பானது என கண்டித்த காரணத்தினால் அங்கிருந்து விலக்கப்பட்டேன். அதிமுக-வை எடப்பாடி பழனிசாமி அபரிகரித்தார். இப்போது அதிமுகவை பாஜக அபகரித்துள்ளது.

    எம்ஜிஆர் காலத்தில் திராவிடக்கழகம் ஒன்றிணைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அது முடியாமல் போனது. தற்போது எடப்பாடி பழனிசாமி புண்ணியத்தில் திராவிட இயக்கம் ஒன்றாகக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அன்வர் ராஜா வந்துள்ளார். நான் வந்துள்ளேன். இன்னும் பல்லாயிரம் மற்றும் பல லட்சம் பேர் வருவார்கள்.

    எடப்பாடி பழனிசாமியே ஆசி கொடுத்து அனுப்பி வைப்பார். திமுக கட்சியை வலப்படுத்துவற்கு எடப்பாடி பழனிசாமியும் துணையாக இருக்கிறார். அவருடைய உள்ளாசை திராவிட கழகம் ஒன்றாக வேண்டும் எனக் கூட நினைக்கலாம். அதிமுக-விற்கு பல காலம் உழைத்தவர்களை நல்ல எண்ணத்துடன் அனுப்பி வைத்துள்ளார் என எடுத்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

    • 28 சதவீதம், 18 சதவீதத்திற்குப் பதிலாக 0 முதல் 5 சதவீதம் வரை கிடைக்கும்.
    • சுதந்திரமாக ஷாப்பிங் செய்யுங்கள். ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வாங்குங்கள்.

    மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்துள்ளது. இதை ஜிஎஸ்டி 2.0 எனக் கூறுகிறார்கள். முன்னதாக 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு அடுக்குகளில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டது. இனிமேல் 5 மற்றும 18 ஆகிய இரண்டு அடுக்குகள் மட்டுமே இருக்கும். ஆடம்பர கார்கள், பைக்குகள், சிகரெட் போன்றவற்றிற்கு 40 சதவீத வரியை அறிமுகம் செய்துள்ளது.

    இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இந்த சீர்திருத்தம் வருகிற 22ஆம் தேதி முதல் அமல்படுத்த இருக்கிறது.

    இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பெண்கள் அனைவரும் வருகிற 22ஆம் தேதி முதல் ஷாப்பிங் செய்ய தொடங்குங்கள் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    நேற்று டெல்லி மாநில அரசின் 1723 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை அமித் ஷா தொடங்கி வைத்தார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    தீபாவளி மற்றும் நவராத்திரி விரைவில் வரவிருக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் பொருட்கள் இனிமேல் 28 சதவீதம், 18 சதவீதத்திற்குப் பதிலாக 0 முதல் 5 சதவீதம் வரை கிடைக்கும். டெல்லியின் தாய்மார்கள், சகோதரிகள் வீட்டில் முதலாளியாக இருந்து, செப்டம்பர் 22ஆம் தேதி முதல் இன்னும் மேலும் மேலும் ஷாப்பிங் செய்ய வேண்டும் எனச் சொல்ல விரும்புகிறேன்.

    சுதந்திரமாக ஷாப்பிங் செய்யுங்கள். ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வாங்குங்கள். வெளிநாட்டில் இருந்து இறக்குமதியான பொருட்களை வாங்காதீர்கள். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் நம் நாட்டில் தயாரிக்கப்படுவதை மட்டுமே வாங்குவதாக உறுதிமொழி எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • இமாச்சல பிரதேசத்தில் கங்கனா ரணாவத் மணாலியில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறது.
    • மேகவெடிப்பு, மழை வெள்ளத்தால் இமாச்சல பிரதேசம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

    தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரிதும் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் இமாச்சல பிரதேச மாநிலமும் ஒன்று. கனமழையுடன் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய் மழை கொட்டியது. ஒருமுறை அல்ல. பலமுறை மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுள்ளது.

    வீடுகள், கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளளனர். இவர்கள் எப்படியோ சமாளித்து வருகிறார்கள். இந்த நிலையில் கங்கனா ரணாவத் "நேற்று, என்னுடைய ரெஸ்டாரன்டில் வெறும் 50 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரம் நடந்துள்ளது. நான் 15 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குகிறேன். தயது செய்து என்னுடைய வலியையும் புரிந்து கொள்ளுங்கள். நான் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவள். என்னுடைய வீடும் இங்கேதான் உள்ளது" எனத் தெரிவிததுள்ளார்.

    மவுன்டைன் ஸ்டோரி என்ற ரெஸ்டாரன்ட்-ஐ கங்கனா ரணாவத் மணாலியில் இந்த வருடம் தொடங்கினார். உண்மையான இமாச்சல பிரதேச மாநில உணவுகளை வழங்கும் உணவகம் என சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலப்படுத்தினார்.

    மணாலி சுற்றுலாவையே பெரிதும் நம்பி இருக்கிறது. கனமழை மற்றும் நிலச்சரிவால் இங்கு தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

    கங்கனா ரணாவத், பாஜக தலைவரும், மணாலியின் முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான கோவிந்த் சிங் தாகூர் உடன் சோலங்க், பல்சான் ஆகிய கிராமங்களுக்கு சென்றார். அப்போது அங்கும் வசிக்கும் மக்கள், வெள்ளத்தால் கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 15 முதல் 16 வீடுகள் பாதுகாப்பாற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

    நிலச்சரிவால் சோலாங் கிராமம் முழுவதற்கும் ஆபத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது, பியாஸ் ஆறு படிப்படியாக தனது எல்லையை விரித்து கரையோர அரிப்பு அதிகமாகியுள்ளது. மேற்கொண்டு அரிப்பை தடுக்க ஆற்றின் திசையை மாற்றிட விடவேண்டும்" எனத் தெரிவித்தனர்.

    கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதியில் இருந்து இமாச்சால பிரதேசத்தின் பெய்த கனமழை மற்றும் பருவமழை காரணமாக 419-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் 52 பேர் ஆவார்கள்.

    • இந்தியா சார்பில் நடப்பு சாம்பியன் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
    • இந்தியாவின் சச்சின் யாதவ் 86.27 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும் நீரஜ் சோப்ரா 84.03 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தை பெற்றனர்.

    டோக்கியோ:

    20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் நடப்பு சாம்பியன் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டிகளில் 2021-ம் ஆண்டு (டோக்கியோ ஒலிம்பிக்ஸ்) தங்கப் பதக்கமும், 2024-ம் ஆண்டு (பாரிஸ் ஒலிம்பிக்ஸ்) வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 2022-ல் வெள்ளியும், 2023-ல் தங்கமும் வென்றிருந்தார். இதனால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

    இந்த இறுதிப்போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஷத் நதீம் (பாகிஸ்தான்) உலகின் முதல் நிலை வீரரான ஜூலியன் வெப்பர் (ஜெர்மனி), ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரேனடா), ஜேக்கப் வட்லெஜ் (செக்குடியரசு) ஜூலியஸ் (கென்யா) ஆகியோர் நீரஜ் சோப்ராவுக்கு கடும் போட்டியாளர்களாக இருந்தார்கள்.

    இறுதிப்போட்டி 6 த்ரோ முறையில் நடைபெற்றது. இதில் முதல் 3 த்ரோ முடிவில் இந்தியாவின் சச்சின் யாதவ் 86.27 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருந்தார். இதுவே இவரது சிறப்பான த்ரோ ஆகும். மற்றொரு இந்திய வீரரான நீரஜ் சோப்ரா யாரும் எதிர்பார்க்காத வகையில் 8-வது இடத்தில் இருந்தார். முதல் 3 இடங்களில் வால்காட் 87.83, பீட்டர்ஸ் 87.38, தாம்சன் 86.6 ஆகியோர் இருந்தார்.

    இதனை தொடர்ந்து நடந்து மீதமுள்ள 3 த்ரோ வீசப்பட்டது. இதன் முடிவில் வால்காட் (டிரினிடாடியன்) 88.16 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். இந்த த்ரோ இந்த சீசனின் சிறந்த த்ரோ ஆகும். பீட்டர்ஸ் (கிரேனடா) 87.38 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். தாம்சன் (அமெரிக்கா) 86.67 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கத்தை வென்றார்.

    இந்தியாவின் சச்சின் யாதவ் 86.27 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும் நீரஜ் சோப்ரா 84.03 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தை பிடித்தனர்.

    • சேதமைடைந்த விஷ்ணு சிலையை சீரமைத்து மீண்டும் நிறுவக்கோரி மனு
    • கடவுளிடம் சென்று ஏதாவது செய்யக் சொல்லுங்கள் என கவாய் கருத்து தெரிவித்திருந்தார்.

    மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராகோ கோவில் வளாகத்தில் உள்ள ஜவாரி கோவிலில் சேதம் அடைந்த கடவுள் விஷ்ணுவின் சிலையை சரி செய்து மீண்டும் நிறுவன வேண்டும் என ராகேஷ் தலால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு கடந்த செவ்வாய்க்கிழமை தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான பெஞ்ச் முன் விசாணைக்கு வந்தது. இப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தது.

    அத்துடன் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "இந்த மனு முற்றிலும் சுய லாபம் நோக்கம் கொண்டது. கடவுளிடம் சென்று ஏதாவது செய்யக் சொல்லுங்கள். நீங்கள் கடவுள் விஷ்ணுவின் கடுமையான பக்தர் என்று சொல்லிக் கொள்ளீர்கள் என்றால், பிரார்த்தனை செய்து, தியானம் செய்யுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.

    இது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு சர்ச்சையானது. இந்த நிலையில் நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என கவாய் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கவால் கூறுகையில் "இந்த விவகாரம் தொடர்பாக நான் கூறியதாக சமூக வலைத்தளங்களில் சித்தரித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக என்னிடம் ஒருவர் தெரிவித்தார். நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்" என்றார்.

    • உயரமான இடங்களில் ஏறி நின்று அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பு?
    • இதை நீங்கள் ஒழங்குபடுத்த வேண்டாமா?

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பிரசார கூட்டத்திற்கு அனுமதி வழங்கும்போது நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள், மற்ற கட்சிகள் மீது விதிக்கப்படாத நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணையின்போது, "கர்ப்பிணி, மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் எனக் கூறி மற்றவர்களுக்கு நீங்கள் முன்மாதிரியாக திகழலாமே?. உயரமான இடங்களில் ஏறி நின்று அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பு? இதை நீங்கள் ஒழங்குபடுத்த வேண்டாமா?" என உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

    மேலும், பொதுச்சொத்து சேதமடைந்தால் இழப்பீட்டை வசூலிக்கும் வகையில் தொகை டொபாசிட் செய்ய விதி வகுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் திருச்சி பரப்புரையின்போது சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துகளுக்கான இழப்பீடு வசூலிக்கப்பட்டதா? எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    அத்துடன் பொதுச்சொத்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் தலையிட நேரிடும் என தவெக-வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

    திருச்சி பிரசாரத்தின்போது த.வெ.க. தொண்டர்களின் செயல்களை புகைப்படமாகவும் காவல்துறை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

    • இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    20-ந்தேதி வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    21-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    22-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    23 மற்றும் 24-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே இன்று முதல் 21-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    நாளை முதல் முதல் 22-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • செந்தில் பாலாஜியை உலகமகா உத்தர் போல் முதலமைச்சர் பாராட்டுகிறார்.
    • செந்தில் பாலாஜியை திருடன் என விமர்சித்த முதலமைச்சர் தற்போது பாராட்டுகிறார்.

    சென்னை:

    பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * செந்தில் பாலாஜியை உலகமகா உத்தர் போல் முதலமைச்சர் பாராட்டுகிறார்.

    * செந்தில் பாலாஜியை திருடன் என விமர்சித்த முதலமைச்சர் தற்போது பாராட்டுகிறார்.

    * மண் குதிரையை நம்பி முதலமைச்சர் காவிரி நோக்கி பயணிக்கிறார்.

    * 2026 தேர்தலுக்கு முன் மண் குதிரையில் காவிரிக் கரை நோக்கி முதலமைச்சர் செல்கிறார்.

    * சாராயம் விற்ற பணத்தில் தான் தி.மு.க.வின் முப்பெரும் விழா நடைபெற்றுள்ளது என்றார். 

    ×