என் மலர்
இந்தியா

இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் 22ஆம் தேதி முதல் அதிக அளவில் ஷாப்பிங் செய்ய தொடங்குங்கள்: அமித் ஷா
- 28 சதவீதம், 18 சதவீதத்திற்குப் பதிலாக 0 முதல் 5 சதவீதம் வரை கிடைக்கும்.
- சுதந்திரமாக ஷாப்பிங் செய்யுங்கள். ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வாங்குங்கள்.
மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்துள்ளது. இதை ஜிஎஸ்டி 2.0 எனக் கூறுகிறார்கள். முன்னதாக 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு அடுக்குகளில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டது. இனிமேல் 5 மற்றும 18 ஆகிய இரண்டு அடுக்குகள் மட்டுமே இருக்கும். ஆடம்பர கார்கள், பைக்குகள், சிகரெட் போன்றவற்றிற்கு 40 சதவீத வரியை அறிமுகம் செய்துள்ளது.
இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இந்த சீர்திருத்தம் வருகிற 22ஆம் தேதி முதல் அமல்படுத்த இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பெண்கள் அனைவரும் வருகிற 22ஆம் தேதி முதல் ஷாப்பிங் செய்ய தொடங்குங்கள் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லி மாநில அரசின் 1723 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை அமித் ஷா தொடங்கி வைத்தார்.
அப்போது அமித் ஷா கூறியதாவது:-
தீபாவளி மற்றும் நவராத்திரி விரைவில் வரவிருக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் பொருட்கள் இனிமேல் 28 சதவீதம், 18 சதவீதத்திற்குப் பதிலாக 0 முதல் 5 சதவீதம் வரை கிடைக்கும். டெல்லியின் தாய்மார்கள், சகோதரிகள் வீட்டில் முதலாளியாக இருந்து, செப்டம்பர் 22ஆம் தேதி முதல் இன்னும் மேலும் மேலும் ஷாப்பிங் செய்ய வேண்டும் எனச் சொல்ல விரும்புகிறேன்.
சுதந்திரமாக ஷாப்பிங் செய்யுங்கள். ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வாங்குங்கள். வெளிநாட்டில் இருந்து இறக்குமதியான பொருட்களை வாங்காதீர்கள். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் நம் நாட்டில் தயாரிக்கப்படுவதை மட்டுமே வாங்குவதாக உறுதிமொழி எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.






