என் மலர்
ஆசிரியர் தேர்வு
- டெல்லியில் பள்ளிகள், விமான நிலையங்களுக்கு வெடிகுண்ட் மிரட்டல் விடுக்கப்பட்டது.
- சோதனைக்குப் பிறகே வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது.
புதுடெல்லி:
விமான நிலையங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது சமீப காலமாக தொடர் கதையாக உள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதோடு மக்களும் பீதி அடைகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள விமான நிலையங்கள், பள்ளிகள், நிறுவனங்கள் என 300-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனால் சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் விரைந்தனர். அவர்கள் அங்கு சென்றதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் மோப்ப நாய் உதவியுடன் அங்குலம் அங்குலமாக சோதனை நடைபெற்றது. ஆனால் சந்தேகத்துக்குரிய பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. அதன்பிறகே வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது. எனினும் வெடிகுண்டு மிரட்டலால் அந்தப் பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.
- பல்வேறு திட்டங்களை ஒதுக்கீடு செய்வதில் முன்னாள் வேளாண் மந்திரி முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
- அப்போது அரசின் திட்டங்களை பணத்தை வாங்கிக் கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது.
பீஜிங்:
சீனாவின் முன்னாள் வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகார மந்திரி டாங் ரெஞ்சியன் (63). இவர் தனது பதவிக் காலத்தில் பல்வேறு திட்டங்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அப்போது அரசின் திட்டங்களை பணத்தை வாங்கிக் கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கு ஜிலின் மாகாணம் சாங்சுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
விசாரணை நிறைவடைந்த நிலையில் நலத்திட்டங்களை ஒதுக்குவதற்காக பயனாளிகளிடம் இருந்து சுமார் ரூ.336 கோடி வரை லஞ்சம் பெற்றது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், நாட்டையே உலுக்கிய இந்த ஊழல் வழக்கில் டாங் ரெஞ்சியனுக்கு கோர்ட் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
மேலும் அந்த தொகையை அவரிடம் இருந்து கைப்பற்றி தேசிய கருவூலத்துக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.
- நாற்பது உயிர்களை துள்ளத்துடிக்க சாகக்கொடுத்த, அந்தக்குடும்பங்களின் நிலைமை என்னவாகும்.
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று மாலை தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பலரும் இரங்கலையும், தத்தமது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் ராஜ்கிரண் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "கரூர் கொடுந்துயரம், மிகப்பெரும் மன அழுத்தத்தையும், பரிதவிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
என்னதான் ஆறுதல் படுத்தப்பார்த்தாலும் மனம் தவிப்பதை, என்னால் நிறுத்த முடியவில்லை. எனக்கே இந்த நிலையென்றால், நாற்பது உயிர்களை துள்ளத்துடிக்க சாகக்கொடுத்த, அந்தக்குடும்பங்களின் நிலைமை என்னவாகும்.
இறைவா அந்தக் குடும்பங்களை ஆறுதல் படுத்து... இனிமேலும் இப்படியான கூட்டங்களில் போய்உயிரை விடாமல், நம் வாழ்க்கையை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற புத்தியை, எல்லா பாமர மக்களுக்கும் கொடு" என்று தெரிவித்துள்ளார்.
- சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மர்மநபர் ஒருவர் மெயில் அனுப்பியுள்ளார்.
- விஜய் இல்லத்திற்கு வெடிகுண்டு நிபணர்கள் விரைந்து சோதனை நடத்தினர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மர்மநபர் ஒருவர் மெயில் அனுப்பியுள்ளார்.
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து விஜயின் நீலாங்கரை இல்லத்திற்கு வெடிகுண்டு நிபணர்கள் விரைந்து சோதனை நடத்தினர்.
வெடிகுண்டு நிபுணர்களுடன் காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதலில் வெடிகுண்டு மிரட்டல் என தெரியவந்துள்ளது.
கரூரில் விஜய் கூட்டத்தில் நெரிசல் காரணமாக 40 பேர் உயிரிழந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இது வருகிற 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
- அந்த பணியாளர்களில் பலர் தொழில்நுட்பத் துறையில் உள்ளனர்.
அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா விண்ணப்ப கட்டணத்தை 1 லட்சம் டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) அதிபர் டிரம்ப் உயர்த்தி அறிவித்தார்.
எச்-1பி விசா பெறுபவர்களில் 71 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவார்கள். இதனால் இக்கட்டண உயர்வால் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். வெளிநாட்டு ஊழியர்களை கட்டுப்படுத்த விசா விதிகளை அமெரிக்கா கடுமையாக்கி வரும் நிலையில், சீனா புதிய விசா நடைமுறையை அறிவித்தது.
அறிவியல், தொழில்நுட் பம், பொறியியல், கணிதம் சார்ந்த துறைகளில் உலக அளவில் உள்ள சிறந்த ஊழியர்களை ஈர்க்கும் நோக்கில் கே விசாவை அறிமுகம் செய்துள்ளது. இது வருகிற 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த நிலையில் வெளிநாட்டு பணியாளர்களை ஈர்க்கும் வகையில் சலுகைகள் வழங்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவில் அதிகமான எச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கு இனி விசா நீட்டிப்பு கிடைக்காது. இவர்கள் திறமையானவர்கள். அவர்களுக்கு கனடாவில் ஒரு வாய்ப்பு வழங்கி பயன்படுத்தி கொள்வோம்.
விரைவில் இது குறித்து ஒரு விசா சலுகையை வழங்குவோம். அந்த பணியாளர்களில் பலர் தொழில்நுட்பத் துறையில் உள்ளனர். மேலும் அவர்கள் கனடாவில் வேலைக்கு வர தயாராக உள்ளனர்.
கனடா அரசாங்கம் இந்த வகையான திறமைகளை உள்வாங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுகுறித்து தெளிவான சலுகை விரைவில் இருக்கும்" என்று கூறினார்.
கனடா பிரதமர் கார்னி அறிவிப்பின்படி விசா சலுகை அளிக்கப்பட்டால் அமெரிக்காவின் எச்-1பி விசா கட்டண உயர்வால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணமாக இருக்கும்.
ஆயிரக்கணக்கான உயர் திறமையான இந்திய நிபுணர்களுக்கு ஒரு தெளிவான மாற்று இடமாக கனடா இருக்கும்.
- முறையான பாதுகாப்பு வழங்காமல் தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது மனு.
- தவெக தாக்கல் செய்த வழக்கில் இடையீடு மனுவாக தாக்கல் செய்தால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
கரூரில் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
முறையான பாதுகாப்பு வழங்காமல் தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று செந்தில் கண்ணன் தாக்கல் செய்த அவசர வழக்கை இன்று மாலை 4.30 மணிக்கு விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அனுமதி வழங்கினார்.
இந்நிலையில், இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த மனு மீது இன்று விசாரணைக்கு ஏற்கப்படவில்லை.
மேலும், தவெக தாக்கல் செய்த வழக்கில் இடையீடு மனுவாக தாக்கல் செய்தால் தான் விசாரிக்க முடியும் எனவும் உயர்நீதிமன்ற பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
- விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.
- விஜயை கைது செய்ய வேண்டும் என்று நடிகை ஓவியா வலியுறுத்தியுள்ளார்.
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் விஜயை கைது செய்ய வேண்டும் என்று நடிகை ஓவியா வலியுறுத்தியுள்ளார். இதனால் விஜய் செய்யப்படுவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.
தெலுங்கானாவில் புஷ்பா 2 பட வெளியீட்டின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி ரேவதி என்ற 39 வயது பெண் உயிரிழந்தது தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே போல் தமிழ்நாட்டிலும் விஜய் செய்யப்படுவாரா? என்று அவரது ரசிகர்களும் த.வெ.க. தொண்டர்களும் அச்சம் அடைந்துள்ளனர்.
- யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான்.
- காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன்.
சென்னை :
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில்வெளியிட்டுள்ள பதிவில்,
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.
நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.
என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.
நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.
அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம் என்று கூறியுள்ளார்.
- இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
- 4 பேர் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கரூரில் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாவ தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், புஸ்ஸி ஆனந்த், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.
- தவறு செய்தவன் திருந்த பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்.
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய் பரப்புரையின்போது உயிரிழந்தவர்களுக்கு நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய சத்யராஜ், "கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். தவறு என்பது தவறி செய்வது... தப்பு என்பது தெரிந்து செய்வது... தவறு செய்தவன் திருந்த பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தி ஆகணும். சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து... சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தப்பு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ... தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ... ச்ச" என்று தெரிவித்தார்.
குறிப்பாக வீடியோ முடிவில் 'ச்ச' என்று வேதனையோடு சத்யராஜ் கூறினார்.
- விஜய் பிரசாரத்தில் இதற்கு முன்பு எந்த பிரச்சனையுமே இல்லையே.
- எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்வதற்கு அ.திமு.க. ஆட்சியில் முழு பாதுகாப்பு அளித்தோம்.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிந்தவர்களின் உடல்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதலும் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
* விஜய் பிரசாரத்தில் இதற்கு முன்பு எந்த பிரச்சனையுமே இல்லையே.
* 4 மாவட்டத்தில் த.வெ.க. பிரசாரம் செய்துள்ளது. ஏற்கனவே நடந்த கூட்டத்தை பார்த்து தமிழக அரசும், காவல்துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
* விஜய் பேசும் போது மின் விளக்கு அணைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
* எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு தி.மு.க. அரசு முறையான பாதுகாப்பு அளித்து நடுநிலையோடு செயல்பட்டிருக்க வேண்டும்.
* கூட்டத்திற்கு ஏற்றவாறு தலைவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.
* நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் பலனின்லை.
* இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு தரப்பட்டதாக தெரியவில்லை.
* எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்வதற்கு அ.திமு.க. ஆட்சியில் முழு பாதுகாப்பு அளித்தோம்.
* அ.தி.மு.க. கூட்டத்திற்கும் காவல்துறை பாதுகாப்பு இல்லை.
* எப்படிப்பட்ட நிலை இருந்தது என ஆய்வு செய்ய வேண்டும்.
* ஒரு நபர் கமிஷன் அமைத்ததன் நோக்கம் என்ன என தெரியவில்லை.
* கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் கட்சிகளுக்கு அனுபவம் உண்டு.
* அரசியலுக்கு அப்பாற்பட்டு பேச வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது.
* ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி எனும் வகையில் காவல்துறை தனது கடமையிலிருந்து தவறிவிட்டது.
* அரசியல் கட்சி கூட்டங்களில் இதுவரை இப்படி உயிர் பலி நிகழ்ந்ததில்லை.
* மக்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை
* கூட்டத்தை ஒழுங்குப்படுத்துவதில் கட்சிகளுக்கு அனுபவம் உண்டு.
* ஒரு கட்சி தலைவர், இன்னொரு தலைவருக்கு அறிவுரை கூறகூடாது என்றார்.
- பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 31க்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று கரூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 31க்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பிரசார கூட்டத்தின்போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன.
இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு வலிமை கிடைக்கவும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






