search icon
என் மலர்tooltip icon
    • மாணவியர் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வுகள் வருகிற 24ம் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.
    • விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    2023-24-ம் ஆண்டிற்கான விளையாட்டு விடுதிகளில் பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 23-ந் தேதி கடைசி நாளாகும்.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் படிக்கும்மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்பவிளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடியவிளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டுவருகின்றன.

    மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    மாணவிகளுக்கான விடுதிகள், ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள், சென்னை ஜவகர்லால் நேரு விளையட்டு அரங்கம், திருச்சி (ஸ்ரீரங்கம்) மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலும், மாணவியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி, சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவ, மாணவிகளுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது.

    2023-24-ம் ஆண்டு விளையாட்டு விடுதி மற்றும் விளையாட்டுப் பள்ளிகளில் 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்புகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வுகள் வருகிற 24ம் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.

    மாணவர்களுக்கான தேர்வுப் போட்டிகள், தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், கபாடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜுடோ, ஸ்குவாஷ், வில்வித்தை ஆகிய விளையாட்டுகளிலும், மாணவியர்களுக்கான தேர்வு போட்டிகள், தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், தேக்வாண்டோ, கையுந்து பந்து, பளுதூக்குதல், கபாடி, டென்னிஸ், ஜுடோ, ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டு களிலும்நடைபெறும்.

    மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ, மாணவிகள் இணையதள முகவரியில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான படிவத்தினை வருகிற 23-ந் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
    • மீதமுள்ள 9 மனுக்கள் தொடர் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் தருமபுரியில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

    இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    நிலத்தகராறு, சொத்து தகராறு, பொது வழி பிரச்சனை, குடும்பத் தகராறு உள்ளிட்ட மொத்தம் 129 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இந்த விசாரணையின் போது மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த முகாமில் 120 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 9 மனுக்கள் தொடர் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராமச்சந்திரன், சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் ரங்கசாமி, நவாஸ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    • அங்கு வந்த பசவராஜ் தரப்பினருக்கும், லட்சுமிதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • போலீசார் பசவராஜ் (43), கதிர்வேல் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உத்தனப்பள்ளி பக்கமுள்ளது கொத்தூர். இந்த ஊரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 33). இவரது சகோதரர் பசவராஜ் (43). இவர்களுக்குள் சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.

    இந்த நிலையில் லட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் சகோதரி ராணியம்மாள் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக பஸ்தலப்பள்ளிக்கு கடந்த 14-ந் தேதி சென்றனர். அப்போது அங்கு வந்த பசவராஜ் தரப்பினருக்கும், லட்சுமிதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் லட்சுமி, அவரது சகோதரி ராணியம்மாள், திம்மராயப்பா (39), திம்மராஜ் (42), முருகேஷ் (37), கீர்த்தனா (8) ஆகிய 6 பேரும் தாக்கப்பட்டனர்.

    அவர்கள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பசவராஜ் (43), கதிர்வேல் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • அந்த சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.
    • அந்த சிறுமி மீட்கப்பட்டு தருமபுரியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 25) தொழிலாளி. இவருக்கும், 16 வயது சிறுமிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கோவிலில் குழந்தை திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி சைல்டு லைன் உறுப்பினர் ஆனந்தி, மகளிர் ஊர் நல அலுவலர் மலர்கொடி ஆகியோர் அந்த பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியை திருமணம் செய்து கொண்ட ரவி, இதற்கு உடந்தையாக செயல்பட்ட அவருடைய பெற்றோர் முருகன் (50), மூக்கம்மாள் (45), சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த சிறுமி மீட்கப்பட்டு தருமபுரியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    • வசாயிகள் சங்கங்கள் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதற்கு மாவட்டத் தலைவர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழக விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தமிழ்நாடு நிலம் ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறக் கோரியும், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசியை உடனடியாக நிறுத்தக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு மாவட்டத் தலைவர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் பிரகாஷ், பழனி, மாவட்ட தலைவர் சிவராஜ், மாவட்ட பொருளாளர் ராஜு, மாவட்ட துணை செயலாளர் அண்ணாமலை, மாநிலக்குழு உறுப்பினர் கண்ணு ஆகியோர் கண்டன உரையாற்றினர். வட்ட செயலாளர் சின்ராஜ் நன்றி கூறினார்.

    ஆரப்பாட்டத்தில் தமிழ்நாடு நிலம் ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும். உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • இதுவரை ஒரு லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் கட்டியும் எந்த சிகிச்சையும் செய்யவில்லை.
    • அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சம் ரூபாய் வரை செலாவகும் என்றும், மருந்து மற்றும் மருத்துவமனை செலவையும் சேர்த்து 10 லட்சம் ரூபாய் வரை ஆகும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா காவேரிநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையன். இவரது மகன் விஜயகுமார், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    எனது தந்தை கண்ணையன் கடந்த 14-ந் தேதி இரவு 8:30 மணிக்கு மளிகை கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது காவேரிநகரில் இருந்து கோபசந்திரம் செல்லும் சாலையில் யானை துரத்திச் சென்று மிதித்ததில் படுகாயம் அடைந்தார்.

    ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு என் தந்தையை பரிசோதனை செய்துவிட்டு, பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுவரை ஒரு லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் கட்டியும் எந்த சிகிச்சையும் செய்யவில்லை.

    அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சம் ரூபாய் வரை செலாவகும் என்றும், மருந்து மற்றும் மருத்துவமனை செலவையும் சேர்த்து 10 லட்சம் ரூபாய் வரை ஆகும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இவ்வளவு பணத்தை எங்களால் கட்ட முடியாத நிலையில் இருப்பதால், என் தந்தையின் முழு மருத்துவச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சற்று மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டதாக கூறப்படுகிறது.
    • ஏரியில் அவர் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சின்னஒரப்பம் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி பாஞ்சாலை (வயது68). இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஞ்சாலை காலைகடன் கழிப்பதற்காக ேதாட்டத்திற்கு சென்றார். அங்கு உள்ள ஏரியில் அவர் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கந்தி குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெங்கடேசன் தனது மகனை அழைத்து கொண்டு கிருஷ்ணகிரி அருகே உள்ள முனிகவுண்டன் ஏரிக்கு வந்தார்.
    • ஹேமந்த் நீச்சல் தெரியாமல் ஆழத்திற்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி, 

    கர்நாடகா மாநிலம் ஆனேக்கல் எத்திகொண்டபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் ேஹமந்த் (வயது10). இந்த நிலையில் வெங்கடேசன் தனது மகனை அழைத்து கொண்டு கிருஷ்ணகிரி அருகே உள்ள முனிகவுண்டன் ஏரிக்கு வந்தார்.

    அப்போது அங்கு தனது மகனுடன் அவர் குளிக்க சென்றார். இதில் ஹேமந்த் நீச்சல் தெரியாமல் ஆழத்திற்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்த வழியாக வந்த டாரஸ் லாரி ஒன்று வேகமாக வந்து சூர்யா மீது மோதியது.
    • தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

    கிருஷ்ணகிரி,  

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் சூர்யா (வயது22).

    மெக்கானிக்கான இவர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை-திருவண்ணாமலை சாலையில் நாயக்கனூர் பகுதி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரி ஒன்று வேகமாக வந்து சூர்யா மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து சூர்யாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த அவர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது குடிக்கும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி மதுக்குடித்து விட்டு வீட்டிற்கு வருவார்.
    • வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த வேங்கடதாம்பட்டியைச் சேர்ந்தவர் ரெங்கநாதன் (வயது28). இவர் அங்குள்ள ஒரு ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி மதுக்குடித்து விட்டு வீட்டிற்கு வருவார். இதனால் அவருக்கும், பெற்றோருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் மனமுடைந்த காணப்பட்ட ரெங்கநாதன் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    சிங்காரப்பேட்டை கொல்லக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனவைி விமலா (26). இவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். அதற்கு அதிக பணம் செலவு ஆகுவதால் குடும்ப நடந்த முடியாமல் இருந்து வருவதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட விமலா சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்த வாகனத்திற்கு முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது.
    • இரு வாகனங்களும் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது.

    தொப்பூர், மே.17-

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாகல்பட்டி பகுதியில் உள்ள தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரவு 11.30 மணியளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது அந்த வாகனத்திற்கு முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் இரு வாகனங்களும் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. அதனை தொடர்ந்து பின்னால் வந்த லாரியும் இந்த விபத்தில் சிக்கி உள்ளது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    விபத்தில் சிக்கிய ஓட்டுனர் களை வாகனங்களில் இருந்து மீட்டனர். விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த டிரைவர் மற்றும் லாரி டிரைவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

    மேலும் இந்த விபத்து குறித்து தொப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • இவருக்கு அடிக்கடி ஏற்பட்ட வயிற்றுவலி யால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
    • வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கயிறால் தூக்கு போட்டுகொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

    காவேரிப்பட்டணம், மே.17-

    இவருக்கு அடிக்கடி ஏற்பட்ட வயிற்றுவலி யால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

    வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கயிறால் தூக்கு போட்டுகொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டனம் அருகே உள்ள மலையான்டஅள்ளி புதுரை சேர்ந்தவர் ஜோதி (வயது39). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இந்நிலையில் இவருக்கு அடிக்கடி ஏற்பட்ட வயிற்றுவலி யால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை வயிற்று வலி அதிகமாகவே வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கயிறால் தூக்கு போட்டுகொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த இவரது சகோதரர் உடனடியாக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.

    பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிந்து இன்ஸ்பெக்டர் முரளி விசாரணை நடத்தி வருகிறார்.

    ×