search icon
என் மலர்tooltip icon

  வழிபாடு

  ஆன்ம கழிவுகளை நீக்கும் போகிப் பண்டிகை
  X

  ஆன்ம கழிவுகளை நீக்கும் போகிப் பண்டிகை

  • வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும்.
  • தீய சக்திகள் மற்றும் நோய்களில் இருந்தும் காக்கப்படுகிறார்கள்.

  பிரபஞ்சத்தால் படைக்கப்பட்ட உயிர்களில் மனிதனைத் தவிர மற்ற அனைத்து உயிர்களும் நிம்மதியாக வாழ்வதை உணர முடியும். ஓரறிவு உயிர் முதல் ஐந்தறிவு வரையுள்ள அனைத்து உயிர்களும் பிரபஞ்ச விதிக்கு கட்டுப்பட்டு வாழ்கின்றன. ஏனென்றால் விதியை மீறி வாழ வேண்டும் என்ற ஆறாமறிவு இன்மையால் உயிரினங்கள் பெரிய சிரமங்கள் ஏதுமின்றி தங்கள் வாழ்நாளை கழித்து விடுகிறது.

  மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை தாமே தீர்மானித்துக்கொள்ளும் சுதந்திரத்தை பிரபஞ்சம் ஆறாம் அறிவு மூலம் வழங்கியுள்ளது. ஆனால் மனிதர்கள் தங்களின் ஆறாம் அறிவை பிரபஞ்சத்திற்கு எதிராக திசை திருப்புவதால் நிம்மதியின்றி வாழும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதைத் தான் நமது முன்னோர்கள் விதி, கர்மா என்று கூறியுள்ளார்கள்.

  துக்கமும் துயரமும் நிறைந்த மனித வாழ்க்கையை புனிதப்படுத்த ஆன்மாவை சுத்தம் செய்ய வேண்டும். பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்து தேவையற்ற பழைய பொருட்களை கழிக்க வேண்டும். போகியன்று, வீட்டின் வாசலில் பொங்கல் பண்டிகைக்கான காப்பு கட்ட வேண்டும்.அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய குப்பைகளைத் தீயிட்டு கொளுத்த வேண்டும். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும். இதனால் அவர்கள் தீய சக்திகள் மற்றும் நோய்களில் இருந்தும் காக்கப்படுகிறார்கள்.

  அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தப்படும் போது சுத்தமாக்கப்படுவது வீடு மட்டுமல்ல மனிதர்களின் ஆன்மாவும் தான். ஆன்மா சுத்தம் அடையும் போது அடைய முடியாத வெற்றியே கிடையாது. போகிப் பண்டிகையன்று பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் தாழ்ந்த, தார்மீகமற்ற உலகியல் ஆசைகளான மண் ஆசை,பெண் ஆசை ,பொன் ஆசை இவற்றை மனதிலிருந்து அழித்து ஞானம் என்னும் அக்னியால் எரிக்க வேண்டும் என்பதே இந்தப் பண்டிகையின் தத்துவம். அதாவது மனதில் இருக்கும் தீய தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பதே இதன் தத்துவமாகும்.

  மேலும் தற்காலத்திற்கு ஒத்து வராத கருத்துகள்,நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் எல்லாவற்றையும் விடுத்துப் புதிய சிந்தனைகளை, பழக்கங்களை நடைமுறைப் படுத்த வேண்டும். தன் மூலம் மனித வாழ்க்கையில் தேவையற்ற துயரங்கள் நீங்குவதாக நம்பிக்கை.

  ஜோதிட ரீதியாக போகிப் பண்டிகையை பற்றி ஆய்வு செய்தால் பழமை என்ற சொல்லுக்கு அதிபதி சனி பகவான் புதிய என்ற சொல்லுக்கு அதிபதி சுக்கிரன். அதே போல்உ ழைப்பிற்கு காரகர் சனி பகவான் என்றால் அதன் மூலம் கிடைக்கும் சுக போக வாழ்விற்கு காரகர் சுக்கிரன். சுக்கிரனின் மூலமே புத்தாடை, புத்துணர்ச்சி, புது வீடு, புதிய வாகனம் போன்ற மனதை மகிழ்விக்கும் அழகு,ஆடம்பர பொருட்கள் கிடைக்கும். சுக்கிரனின் அதி தேவதை மகாலட்சுமி. சுக்கிரனின் ஆதிக்கத்தை அதிகரித்தால் மட்டுமே வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

  மகாலட்சுமியின் ஆதிக்கம் அதிகரிக்கும் போது வீட்டில் தடை பட்ட திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். புதிய தொழில் வாய்ப்பு, வேலை வாய்ப்பு உருவாகும். பொருள் குற்றம் நீங்கி பணவரவு தங்கு தடையின்றி திருப்திகரமாக இருக்கும்.

  Next Story
  ×