search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பூட்டிய கோவில் முன்பு வழிபட்ட பக்தர்கள்
    X
    பூட்டிய கோவில் முன்பு வழிபட்ட பக்தர்கள்

    வழிபாட்டு தலங்களை திறக்க தடை: பூட்டிய கோவில் முன்பு வழிபட்ட பக்தர்கள்

    வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால், பூட்டிய கோவில்களின் முன்பு பக்தர்கள் வழிபட்டனர்.
    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் அவ்வப்போது தளர்வுகள் அளிக்கப்படுகின்றன. எனினும் பொதுமக்கள் கூட்டம் கூடாதவாறு, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் மூடப்படுகிறது.

    அதன்படி நேற்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரிய கோவில்கள் மூடப்பட்டன. அங்கு வழக்கமான பூஜைகள் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடந்தது. இதேபோன்று கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிவாசல்களும் மூடப்பட்டு, அங்கு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன.

    ஆவணி மாத வெள்ளிக்கிழமையான நேற்று நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பேராத்துசெல்வி அம்மன் கோவில், டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வந்தனர். அங்கு கோவில்கள் பூட்டப்பட்டு இருந்ததால், அவர்கள் வெளியே நின்று வழிபட்டு சென்றனர்.

    இதேபோன்று நெல்லையப்பர் கோவில், சாலை குமாரசாமி கோவில் மற்றும் பல்வேறு அம்மன் கோவில்களும் பூட்டப்பட்டு இருந்தன. அவற்றின் முன்பாக நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

    மேலப்பாளையம், டவுன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களும் மூடப்பட்டதால், முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே தொழுைக நடத்தினர். இதேபோன்று கிறிஸ்தவ ஆலயங்களும் மூடப்பட்டு இருந்தன.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள சுடலைமாடசாமி கோவில், சாஸ்தா கோவில், ராமசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று கொடை விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கிடையே கொடை விழாவை நடத்த போலீசார் தடை விதித்து இருந்தனர். சில இடங்களில் தடையை மீறி கொடை விழாவை நடத்த முயன்றவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    Next Story
    ×