
3-ம் திருவிழாவான இன்று(புதன்கிழமை) காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில்சாமி வீதிஉலா வருதல், மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 8.30 மணிக்கு பரத நாட்டியம் இரவு 10.30 மணிக்கு சாமி கற்பக விருட்ச வாகனத்தில் புறப்பட்டு வடக்கு தெருவில் கொட்டாரம் வாசலில் வைத்து கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசாமி, குமாரகோவில் சுப்பிரமணியசாமி ஆகிய மூவரும் தாய், தந்தையர் வீட்டில் நடக்கும் விழாவினை காண வருகின்றனர்.
உமாமகேஸ்வரர், விஷ்ணு, அம்பாள் ஆகியோர் அமர்ந்திருக்கும் வாகனங்களை விநாயகரும், சுப்பிரமணியமும் மூன்று முறை சுற்றி வலம் வந்து ஆசி பெறுகின்றனர். பின்பு இருபுறமாக கிழக்கே பார்த்து அனைவரும் சேர்ந்து நின்று பக்த பெருமக்களுக்கு காட்சி கொடுத்து ஒரே நேரத்தில் ஒன்று போல் தீபாராதனைகளும் நடைபெறுகிறது.
இந்த காட்சி வருடத்தில் ஒருமுறை மட்டுமே இங்கு நடக்கிறது. இந்த தரிசனத்தை மக்கள் மார் சந்திப்பு என்றும் மக்கள் மார்ச் சுற்று என்றும் கூறுவர். 7 நாட்கள் விநாயகரும், சுப்பிரமணியரும், தாய்-தந்தையர் திருத்தலத்தில் தங்கி அவர்களோடு விதவிதமான வாகனங்களில் வீதி உலா வருகின்ற அற்புத காட்சி எங்குமே காண கிடைக்காத தாகும். இக்காட்சியை காண திரளான பக்தர்கள் இன்று இரவு சுசீந்திரத்தில் கூடுவார்கள்.