search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர்
    X
    பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர்

    பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை

    பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக உதவி கலெக்டர் கணேஷ் தெரிவித்தார்.
    அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா பாலாற்றங்கரை ஓரத்தில் அரங்கநாயகி உடனுறை உத்திர ரங்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின்போது ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். வருகிற 25-ந் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து உதவி கலெக்டர் கணேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற 25-ந்தேதி வைகுண்ட ஏகாதசி பெருவிழா அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது. அதிகாலை 6 மணிக்கு நடைபெறும் சொர்க்கவாசல் சேவை நிகழ்ச்சி அரசு விதிகளுக்கு உட்பட்டு கோவில் வளாகத்தில் நடைபெறும்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை பொது தரிசனம் நடைபெறும். வியாபாரிகள் சாலை ஓரங்களில் கடைகளை வைக்க கூடாது. பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க கூடாது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தேங்காய், பழம் மற்றும் பூக்கள் ஆகியவற்றை எடுத்து வர அனுமதி மறுக்கப்படுகிறது. முக கவசம் அணியாத எவரையும் அனுமதிக்கக் கூடாது.

    25-ந் தேதி காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் எந்த கனரக வாகனங்களும் செல்லக்கூடாது. திருட்டைத் தடுக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான், அணைக்கட்டு தாசில்தார் சரவணமுத்து, கோவில் செயல் அலுவலர் வடிவேல்துரை, பள்ளிகொண்டா போலீசார், உத்திர ரங்கநாதர் கோவில் சேவா சங்கத்தை சேர்ந்த சீனிவாசன், நாராயணன் மற்றும் கோவில் ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×