search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமலை வராகசாமி கோவிலில் பாலாலய சம்ப்ரோக்‌ஷன நிகழ்ச்சி
    X
    திருமலை வராகசாமி கோவிலில் பாலாலய சம்ப்ரோக்‌ஷன நிகழ்ச்சி

    திருமலை வராகசாமி கோவிலில் பாலாலய சம்ப்ரோக்‌ஷன நிகழ்ச்சி

    திருமலையில் உள்ள வராகசாமி கோவிலில் பாலாலய சம்ப்ரோக்‌ஷன நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வருகிற 10-ந்தேதி நிறைவடைகிறது.
    திருமலையில் ஸ்ரீவாரிபுஷ்கரணி அருகில் வராகசாமி கோவில் உள்ளது. திருமலை வராக ஷேத்திரமாக கருதப்படுகிறது. திருமலையில் வராகருக்கே முதல் திருமஞ்சனம், நிவேதனம், பூஜைகள் நடத்தப்படுகிறது. அதன்பிறகே ஏழுமலையானுக்கு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    வராகசாமி கோவில் எழுந்தருளியிருக்கும் கருவறை மண்டபத்தில் தங்க முலாம் பூசும் பணிகளை தேவஸ்தானம் தொடங்க உள்ளது. அந்தப் பணிகள் 6 மாதத்துக்கு நடத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. கோவிலில் உள்ள மூலவரை பாலாலயம் எனப்படும் தற்காலிக கோவிலில் எழுந்தருள செய்து பூஜைகளை நடத்த திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.

    பாலாலய சம்ப்ரோக்‌ஷனம் தடங்கலின்றி நடக்க வேண்டி நேற்று முன்தினம் வராகசாமி கோவிலில் அங்குரார்ப்பணம் நடந்தது. கோவில் அருகில் உள்ள நந்தவனத்துக்கு விஸ்வசேனரை ஊர்வலமாக எடுத்துச் சென்று, அங்கிருந்து புற்று மண்ணை சேகரித்து வராகசாமி கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. கோவிலில் பூதேவி உருவத்தை வரைந்து அதன் வயிற்றுப்பகுதியில் இருந்து மண் எடுத்து நவதானியங்களை முளைக்க விடச் செய்தனர். இந்த நவதானியங்கள் நன்றாக முளை வந்தால் எடுத்த காரியம் தடங்கலின்றி முடியும் என்பது ஐதீகம்.

    அங்குரார்ப்பணத்தை அடுத்த நேற்று பாலாலய சம்ப்ரோக்‌ஷன நிகழ்ச்சி தொடங்கி வருகிற 10-ந்தேதி நிறைவடைகிறது. நேற்று வராகசாமி கோவிலில் 13 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டன. அதில் 20 ருத்விக்குகள் பங்கேற்று சிறப்பு ஹோமங்களை நடத்தினர். காலை 7 மணியில் இருந்து 10 மணி வரை யாக சாலையில் அக்னி குண்டம் வார்க்கப்பட்டு புண்யாவச்சனம், விஸ்வசேனர் வழிபாடு, பஞ்சகவாரதானம், வாஸ்து ஹோமம், ராக்‌ஷாபந்தனம், வேதச் சடங்குகள் செய்யப்பட்டது. இரவு 8 மணியில் இருந்து 10 மணி வரை மூலவர் அறையில் சக்தியை எடுத்து, கும்பத்தில் ஆவாகனம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை), நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாள் (புதன்கிழமை) தினமும் காலை 7 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையிலும், இரவு 8 மணியில் இருந்து 10 மணி வரையிலும் சிறப்பு ஹோமங்கள் நடக்கிறது.

    10-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 10.30 மணி வரை மகர லக்னத்தில் பாலாலய சம்ப்ரோக்‌ஷனம் நடக்கிறது. இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை வராகசாமி நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
    Next Story
    ×