search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
    X
    திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

    திருப்பரங்குன்றம் கோவிலுக்கு பூ, மாலை கொண்டு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

    திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் பக்தர்கள் பூ மற்றும் மாலை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதனால் பூ மற்றும் மாலை வாங்கி சாமி தரிசனம் செய்தனர்.
    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவில்கள் கடந்த 5 மாதங்களாக பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் சில கட்டுப்பாடுகளுடன் கோவில்கள் திறக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஆனால் பக்தர்கள் தரிசனத்திற்காக பூ , மாலை மற்றும் தேங்காய் பழத்துடன் கூடிய அர்ச்சனை தட்டுகள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாததால் வருத்தம் அடைந்தனர். மேலும் பக்தர்களை மட்டும் எதிர்பார்த்து கோவில் வாசல் முன்பு கடை வைத்திருந்த தேங்காய், பழக்கடை வியாபாரிகள் மற்றும் பூ வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

    இதுதொடர்பாக தினத்தந்தியில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக கோவிலுக்குள் பக்தர்கள் பூ மற்றும் மாலை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதனால் பூ மற்றும் மாலை வாங்கி சாமி தரிசனம் செய்தனர். இதுதொடர்பாக கோவில் வாசல் முன்பு பூக்கடை வைத்துள்ள குடும்பத்தினர் தங்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்துள்ளது. இதேவேளையில் அர்ச்சனைக்காக தேங்காய் பழ தட்டுகள் கொண்டு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். அதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் கிடைக்கும் என்று வியாபாரிகள் வலியுறுத்தினர்.

    மேலும் சுபமுகூர்த்த நாட்களில் இந்த கோவிலில் குறைந்தபட்சம் 50 முதல் 100 திருமணங்கள் நடைபெறும். ஆனால் கோவில் மூடப்பட்டதால் கடந்த 5 மாதங்களாக கோவிலில் திருமணப்பதிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக திருமணப்பதிவு நடந்து வருகிறது. இதில் ஒரே நாளில் 5 திருமணத்திற்கு முன் பதிவு செய்துள்ளனர். மணமக்கள் உள்பட 10 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு திருமணத்திற்கு சுமார் 5 நிமிடம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மணமக்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளி இருக்க வேண்டும் என்பது உள்பட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×