search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கால பைரவரை படத்தில் காணலாம்.
    X
    சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கால பைரவரை படத்தில் காணலாம்.

    கோவில்களில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை

    நெல்லிக்குப்பம், நெய்வேலி பகுதி கோவில்களில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டீஸ்வரத்தில் நடனபாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 1,400 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு கார்த்திகை மாத தேய்பிறை அ‌‌ஷ்டமியை முன்னிட்டு ஆனந்த காலபைரவருக்கு மகா கால பைரவ அ‌‌ஷ்டமி ஜெயந்தி பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி சிவன், அம்பாள் மற்றும் ஆனந்த கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் மாலையில் ஆனந்த கால பைரவர் சன்னதி முன்பு பரிகார யாகம் வளர்க்கப்பட்டு, 108 சங்காபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணிக்காய், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் தீபமேற்றி வழிப்பட்டனர். முன்னதாக கோவில் வளாகத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை குருக்கள் சேனாதிபதி, மணியக்காரர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    இதேபோல் நெய்வேலி வட்டம் 29-ல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கால பைரவருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அ‌‌ஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மலர் அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்க, மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் விருத்தாசலம் பகுதியில் உள்ள கோவில்களிலும் கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    Next Story
    ×