search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மனதை ஆட்சி செய்யும் சந்திரன்
    X

    மனதை ஆட்சி செய்யும் சந்திரன்

    சந்திரன் மனோகாரகன் என்பதாலும், அதன் இயக்கம் விரைவாக இருப்பதாலும் சந்திரனின் இயக்கத்திற்கு ஏற்ப மனிதர்களின் மனம், எண்ண அலைகள் ஒவ்வொரு நிமிடமும் மாறிக் கொண்டே இருக்கிறது.
    உலகில் உள்ள அனைத்து உயிர்களும் சூரிய ஒளியை பெற்றே இயங்குகிறது. சூரியன் பகலின் நாயகன் என்றால், சூரியனின் ஒளியை பகலில் பெற்று இரவில் குளுமையை தரும் நாயகி சந்திரன். ஒரு உயிரை ஜனிக்க செய்வது சூரிய ஒளி என்றால், உயிரை தாங்கும் உடல் சந்திரன். ஆன்மாவை உடல் என்றால், மனம் சந்திரனாகும். சூரியனுக்கு அடுத்து நம் கண்ணுக்கு தெளிவாக தெரியக்கூடிய கிரகம் சந்திரன். சூரியனைப் போலவே சந்திரனும் பெயர், புகழைக் கொடுப்பான். இயற்கையின் அரசி சந்திரனைப் பற்றிய சில பயன் தரும் ஜோதிடத் தகவல்களை காணலாம்.

    சந்திரனின் பிற பெயர்கள் கலாநிதி, மதி, திங்கள், சசி, சோம என்பதாகும். மனோகாரகனான சந்திரன் நவக்கிரகங்களில் இரண்டாம் இடத்தை வகிப்பவர். சந்திரன் ஒரு ராசியில் இரண்டே கால் நாட்கள் சஞ்சரிக்கிறார். ராசி மண்டலத்தை சுற்றிவர அவருக்கு 27 நாட்கள் ஆகிறது.

    சந்திரன் மனோகாரகன் என்பதாலும், அதன் இயக்கம் விரைவாக இருப்பதாலும் சந்திரனின் இயக்கத்திற்கு ஏற்ப மனிதர்களின் மனம், எண்ண அலைகள் ஒவ்வொரு நிமிடமும் மாறிக் கொண்டே இருக்கிறது.

    ஜனன ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்றிருந்தால் பண்பு, பாசம், நல்ல மனநிலை, கவிதை, கற்பனைத் திறன், கவுரவம், புகழ், நிம்மதியான உறக்கம், அரசு வழியில் ஆதரவுகள் உண்டாகும். தாய், தாய் வழி உறவுகளின் நேரடி அன்பும், நேரடி தொடர்பும் அதிகரிக்கும். அம்மன் ஆலய தரிசனம் கிடைக்கும். அடிக்கடி பயணம் செய்ய நேரிடும். விருந்து சாப்பாடு, பலவிதமான உணவுப் பொருட்களை சமைப்பதில், சாப்பிடுவதில் ஆர்வம் போன்றவை சந்திர தசா காலம் முழுவதும் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

    கடக லக்னம், கடக ராசியில் பிறந்தவர்கள், சந்திர தசை புத்தி அந்தரம் நடப்பில் உள்ளவர்கள், சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்களின் தொடர்பு உண்டாகும். வெள்ளை நிற வஸ்துக்களின் சேர்க்கை ஏற்படும். வெள்ளை நிற ஆடைகள் அணிய விரும்புவீர்கள். முக்கிய நதிகள், அருவிகள், சமுத்திரங்களில் நீராடும் வாய்ப்பு உருவாகும்.

    சந்திரன் மனோகாரகன் என்பதால், அவர் பலம் இழந்திருந்தால் மனக்குழப்பம், மன நோய், மற்றவர்களிடம் ஒத்துப்போக முடியாத நிலை, எதிலும் தோல்வி, அனுகூலமற்ற நிலை ஏற்படும்.

    சந்திரன் பலம் குறைந்து தன் தசாவையோ, புத்தியையோ, அந்தரத்தையோ நடத்தும் காலத்தில், கெடுபலன்கள் நடக்கத் தொடங்கும். மேலும், சந்திரனுடன் இணைந்த கிரகங்களின் தசா, புத்தியிலும் இந்த பலன்களை செய்யும். அதனால் சந்திரன் தொடர்புடைய தசாபுத்தி நடப்பில் உள்ளவர்கள் ஒரு சில எளிய பரிகாரத்தைச் செய்யலாம். சந்திரன் வலுவாக உள்ளவர்களும், இந்த பரிகாரத்தை செய்தால் சந்திர பலம் கூடும்.

    திங்கட்கிழமை தோறும் பச்சரிசி சாதம் சாப்பிட வேண்டும். பச்சரிமாவில் மாவிளக்கு செய்து பிரதோஷ வேளையில் நந்திக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும். நீர், பசும்பால், அரிசியை திங்கட் கிழமைகளில் தானம் செய்ய வேண்டும். திங்கட்கிழமைகளில், சோமவார விரதம் இருந்து பார்வதி - பரமேஸ்வரரை வணங்க வேண்டும். வெள்ளி பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும். வளர்பிறையில் விரதம் இருந்து சந்திர தரிசனம் செய்ய வேண்டும். திருப்பதி சென்று வெங்கடாசலபதியை தரிசிக்கலாம். திங்களூர் சென்று வழிபாடு செய்ய வேண்டும். பவுர்ணமியில் சத்ய நாராயணர் விரதம் இருக்க வேண்டும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
    Next Story
    ×