search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பகவதி அம்மன் கோவில் விழாவில் யானை மீது சந்தனக்குடம் ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்.
    X
    பகவதி அம்மன் கோவில் விழாவில் யானை மீது சந்தனக்குடம் ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று ஒடுக்கு பூஜை

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஒடுக்கு பூஜை இன்று நள்ளிரவு நடக்கிறது.
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் சமய மாநாடு, யானை மீது களப பவனி, அன்னதானம், பஜனை, வில்லிசை, அம்மன் பவனி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. விழாவின் 6-வது நாள் இரவு வலியபடுக்கை பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நேற்று காலையில் பைங்குளத்தில் இருந்து சந்தனக்குடம் மற்றும் காவடி ஊர்வலமும், காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதலும், காலை 10 மணிக்கு இரணியலில் இருந்து யானை மீது சந்தனக்குடம் ஊர்வலமும் நடந்தது. மதியம் உச்சகால பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது.

    மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு அத்தாழ பூஜை, வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல், பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் போன்றவை நடந்தன.

    திருவிழாவின் இறுதி நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணிக்கு சாஸ்தா கோவிலில் இருந்து யானை மீது சந்தனக்குடம் பவனி வருதல் நடக்கிறது.

    தொடர்ந்து அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல், குத்தியோட்டம் போன்றவை நடைபெறும். மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை போன்றவை நடக்கிறது. இந்த பூஜையில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் அதிக பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    திருவிழாவையொட்டி நேற்று காலை முதலே பக்தர்கள் அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளனர். அவர்கள் கடற்கரைக்கு சென்று அங்கு கால் நனைத்துவிட்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    பொங்கலிடும் மண்டபம், மணலிவிளை சாலை, லட்சுமிபுரம் செல்லும் சாலை, கடற்கரை சாலை போன்ற இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×