search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மாசாணியம்மனையும், குண்டம் இறங்கும் பக்தர்களையும் படத்தில் காணலாம்.
    X
    சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மாசாணியம்மனையும், குண்டம் இறங்கும் பக்தர்களையும் படத்தில் காணலாம்.

    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திருவிழாவில் குண்டம் இறங்கிய பக்தர்கள்

    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனை வழிபட்டனர்.
    தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில்களில் கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவிலும் ஒன்று. ஆனைமலை உப்பாற்றங்கரையில் சயன நிலையில் காட்சி தரும் மாசாணியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து தினமும் மாசாணியம்மனுக்கு சிறப்பு யாகம், அலங்காரம், அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதைதொடர்ந்து 9-ந்தேதி மயான பூஜை நடைபெற்றது. குண்டம் திருவிழாவையொட்டி பொள்ளாச்சி- சேத்துமடை சாலையில் 52 அடி நீளமும், 11½ அடி அகலமும் கொண்ட பூக்குண்டம் 10 டன் விறகுகளால் தயார் செய்யப்பட்டது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நேற்று காலை நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று அதிகாலையில் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின்னர் ஆபரண பெட்டியில் சூலாயுதம் மற்றும் பூஜை பொருட்களை எடுத்து அர்ச்சகர்கள், முறைதாரர்கள், அருளாளிகள் முன்செல்ல விரதம் கடைபிடித்து காப்பு கட்டிய பக்தர்கள் உப்பாற்றங்கரைக்கு தொடர்ந்து சென்றனர். ஆற்றில் புனித நீராடி சிறப்பு பூஜை செய்து அனைவரும் செவ்வரளி மாலை அணிந்து குண்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தனர்.


    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் பக்தர்கள் பூக்குண்டம் இறங்கிய காட்சி.

    அவர்கள் குண்டத்தை வலம் வந்ததும் 4 தூண்களிலும் மாவிலை தோரணம் கட்டப்பட்டு குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது குண்டத்தை சுற்றி இருந்த பக்தர்கள் ‘மாசாணிதாயே மயான பீட நாயகியே’ என்று பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்

    பின்னர் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் தலைமை முறைதாரர் மனோகரன், அம்மன் அருளாளிகள் குப்புசாமி, அருண் ஆகியோர் குண்டத்தில் இறங்கி வந்து சித்திர தேரில் வீற்றிருந்த மாசாணியம்மனை வழிபட்டனர். பின்னர் ஒவ்வொரு பக்தர்களாக குண்டம் இறங்கினர். விரதம் இருந்த ஆண் பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் காலை 11.30 மணிக்கு குண்டம் இறங்கி முடித்தனர். அதன் பிறகு ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் கையில் குண்டம் பூவை அள்ளி மீண்டும் குண்டத்தில் போட்டு, அம்மனை தரிசித்தனர்.

    குண்டம் விழாவில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, முன்னாள் எம்.பி.சுகுமார், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சாந்தலிங்ககுமார், ஆனைமலை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுந்தரம், கூட்டுறவு சங்க இயக்குனர் மகாலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் தனபாக்கியம், நகர செயலாளர் ராஜேந்திரன் உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    குண்டம் விழாவையொட்டி வால்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜன் தலைமையில் 300 போலீசார் மற்றும் 200 ஊர்காவல் படை வீரர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தினர். பக்தர்களின் வசதிக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் முருகபூபதி தலைமையில் 5 டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். 3 ஆம்புலன்ஸ் வேன்களும் குண்டம் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    தீயணைப்பு நிலைய அலுவலர் புளுகாண்டி தலைமையில் தீயணைப்பு வாகனம் மற்றும் வீரர்கள் தயாராக இருந்தனர். மின்வாரிய செயற்பொறியாளர் சதீஷ்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    திருவிழாவை முன்னிட்டு ஆனைமலையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. ஒன்றிய தி.மு.க. சார்பில் செயலாளர் தேவசேனாதிபதி பக்தர்களுக்கு இளநீர் மற்றும் நீர்மோர் வழங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மாசாணியம்மன் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கொடிஇறக்கம், மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜை, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணிக்கு மகாஅபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் கார்த்திக், கண்காணிப்பாளர் தமிழ்வாணன், புலவர் லோகநாதீஸ்வரன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×