search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குடகு மாவட்டம் தலக்காவிரியில் காவிரி தீர்த்த உற்சவ விழா
    X

    குடகு மாவட்டம் தலக்காவிரியில் காவிரி தீர்த்த உற்சவ விழா

    குடகு மாவட்டம் தலக்காவிரியில் நேற்று காவிரி தீர்த்த உற்சவ விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வீடுகளுக்கு குடங்களில் தண்ணீர் எடுத்துச் சென்றனர்.
    கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 2 மாநிலங்களிலும் முக்கிய ஆறாக விளங்கி வருவது காவிரி. இந்த இருமாநில மக்களின் குடிநீர் தேவை, விவசாயம், தொழில் நிறுவனங் களுக்கு தேவையான தண்ணீர், நீர் மின் நிலையங்களுக்கு தேவையான தண்ணீர் ஆகியவற்றை காவிரி ஆறு வழங்கி வருகிறது. அதனால்தான் காவிரி ஆற்றின் நீரை பங்கிட்டு கொள்வதில் கர்நாடகமும், தமிழகமும் மல்லுக்கட்டி நிற்கின்றன.

    கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் தலக்காவிரி பகுதியில்தான் காவிரி ஆறு உதயமாகிறது. இதனால் அங்கு ஆண்டுதோறும் காவிரி தீர்த்த உற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தலக்காவிரியில் காவிரி தீர்த்த உற்சவ விழா கொண்டாடப்பட்டது.

    விழாவையொட்டி தலக்காவிரி பகுதியில் வீற்றிருக்கும் காவிரித்தாய்க்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடந்தன. 18 அர்ச்சர்கள் காவிரி தாய்க்கு பூஜைகள் செய்தனர்.

    நேற்று காலை 6.28 மணிக்கு காவிரித் தாய்க்கு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் காவிரி தீர்த்தம் கொண்டுவரப்பட்டு, அது அங்குள்ள பிரம்ம குளத்தில் கலக்கப்பட்டது. அதன்பிறகு திரளான பக்தர்கள் பிரம்ம குளத்தில் இருந்து தங்களது வீடுகளுக்கு குடங்களில் தண்ணீர் எடுத்துச் சென்றனர்.

    இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக குடகு, மண்டியா, மைசூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். மேலும் தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பூஜையில் கலந்து கொண்டனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே தலக்காவிரி பகுதிக்கு வந்து பஜனை பாடல்கள் பாடியும், காவிரி தாய்க்கு பல பூஜைகள் செய்தும் வழிபட்டனர்.
    Next Story
    ×