search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெங்களூருவில், முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
    X

    பெங்களூருவில், முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்

    பெங்களூருவில், ஆடிக் கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
    ஆடிக்கிருத்திகையையொட்டி பெங்களூருவில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பெங்களூரு ஸ்ரீராமபுரம் பாசியம்நகரில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆடிக்கிருத்திகையையொட்டி நேற்று சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதிகாலை 4.30 மணிக்கு சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 7.30 மணிக்கு மங்கள ஆரத்தியும், காலையில் இருந்து இரவு வரை சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

    இதுபோல, வேல்முருகபுரம், டாக்டர் டி.சி.எம்.ராயன் ரோட்டில் இருக்கும் பாலசுப்பிரமணிய சாமி கோவிலிலும் ஆடிக்கிருத்திகையையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கே பாலசுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், மங்கள ஆரத்தியும், பூஜைகளும் நடைபெற்றது. இந்த பூஜைகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பாலசுப்பிரமணிய சாமியை தரிசனம் செய்தார்கள்.

    ஆடிக்கிருத்திகையையொட்டி ராஜாஜிநகர் 5-வது பிளாக்கில் உள்ள பால தண்டாயுதபாணி சாமி கோவிலிலும் நேற்று காலையில் இருந்து இரவு வரை விசேஷ பூஜைகள் நடைபெற்றது. மேலும் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் பெங்களூருவில் உள்ள அனைத்து முருகன் கோவில்களுக்கும் காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். பெண்களும், சிறுவர்களும் காவடி எடுத்தார்கள். அப்போது முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று பக்தி கோஷமிட்டபடி காவடி சுமந்து சென்றனர்.

    ஆடிக்கிருத்திகையையொட்டி அனைத்து முருகன் கோவில்களுக்கும் காலையில் இருந்து இரவு வரை பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றார்கள். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×