search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா
    X

    ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா

    ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் ராமபிரான் ராவணனை சம்ஹாரம் செய்தார். விபீஷணருக்கு இன்று பட்டாபிஷேகம் நடைபெறுகின்றது.
    ராமேசுவரம் கோவில் தல வரலாற்றை விளக்கும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா தொடங்கியது. முதல் நாளான நேற்று மாலை 4 மணியளவில் கோவிலில் இருந்து தங்க கேடயத்தில் ராமபிரான், சீதாதேவி, லெட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோர் எழுந்தருளி திட்டக்குடி சந்திப்புக்கு வந்தனர்.

    அங்கு ராமபிரானை 3 முறை சுற்றி வந்த பின் 10 தலை கொண்ட ராவணனின் தலையை ராமபிரான் வெள்ளி வேலால் வதம் செய்த சம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதன்பின் வேலுக்கு பால், மஞ்சள் மற்றும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு மகா தீப ஆராதனை பூஜைகள் நடைபெற்றன. தமிழகத்தில் உள்ள கோவில்களிலேயே ராவண சம்ஹராம் நடைபெறுவது ராமேசுவரம் கோவிலில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    விழாவில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டு ககாரின்ராஜ், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கண்ணன், நேர்முக உதவியாளர் கமலநாதன், உதவி பேஷ்கார் கலைச்செல்வன் மற்றும் ஏராளமான பக்தர்கள் ராவண சம்ஹாரத்தை கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள் உதய்குமார் செய்து இருந்தார்.
    விபீஷணருக்கு பட்டாபிஷேகம்

    விழாவின் 2–வது நாளான இன்று பகல் 1.30 மணியளவில் தனுஷ்கோடி சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் இலங்கை மன்னராக விபீஷணரை ராமபிரான் பட்டாபிஷேகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதையொட்டி ராமேசுவரம் கோவில் நடை இன்று அதிகாலை 3 மணியளவில் திறந்து 4 மணி வரை அதாவது 1 மணி நேரம் ஸ்படிக லிங்க தரிசனம் நடைபெற்று வழக்கமான பூஜைக்கு பின்பு காலை 7 மணியளவில் நடை சாத்தப்படும்.

    தொடர்ந்து ராமபிரான் தங்ககேடயத்தில் எழுந்தருளி கோதண்டராமர் கோவிலுக்கு சென்றடைவார். விபீஷணருக்கு பட்டாபிஷேகம் முடிந்து மாலை 5 மணிக்கு ராமபிரான் கோவிலுக்கு வந்த பின்பே மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

    இதனால் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தீர்த்தமாடுவதற்கோ, தரிசனத்திற்கோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சி மற்றும் நிறைவு நாள் நிகழ்ச்சியாக கோவிலில் நாளை ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடக்கிறது.

    Next Story
    ×