search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நற்செய்தி சிந்தனை செம்பை சேவியர்: கீழ்ப்படியும் செம்மறி ஆடுகள்
    X

    நற்செய்தி சிந்தனை செம்பை சேவியர்: கீழ்ப்படியும் செம்மறி ஆடுகள்

    நற்செய்தியைப் படிக்கும் நாமும் அன்பால் சாதிக்க முடியும்; அன்பு ஒன்றுதான் பலம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, நற்செய்தி வழி நடப்போமாக.
    ‘நிலையான வாழ்வு’ பெறுவது எப்படி என்பதை இயேசு கூறுவதில் இருந்து உணரலாம். முதலில் நிலையான வாழ்வு என்பது என்ன? ‘நிலையான வாழ்வு’ என்பதற்கு ‘முடிவில்லாத வாழ்வு’ என்பதே பொருளாகும். இவ்வுலக வாழ்க்கை நிலைத்த வாழ்வு அல்ல. நிலையில்லாத இந்த உலகத்தில் இருந்து விடுபட்டு, பேரின்பமான வீட்டை அடைய வேண்டும்.

    புனித மத்தேயு இந்தச் செய்தியை அறிவிக்கிறார்.

    இயேசு பிரான், தன் சீடர்களை நோக்கி இவ்விதம் கூறு கிறார்:

    வான தூதர்கள் சுற்றி இருக்க, மாட்சிமை பொருந்திய அரியணையில், மானிட மகன் அமர்ந்திருப்பார். மக்கள் அனைவரும் அவர் முன்பு ஒன்று திரட்டப்படுவர்.

    ஓர் ஆயர் செம்மறி ஆடுகளையும், வெள்ளாடுகளையும் வேறு வேறாகப் பிரித்து, வலது பக்கத்தில் செம்மறியாடுகளையும், இடது பக்கத்தில் வெள்ளாடுகளையும் நிறுத்தி வைப்பதுபோல, அங்கிருந்த மக்களை அவர் வேறுவேறாகப் பிரித்து நிறுத்துவார்.

    பிறகு வலப்பக்கத்தில் இருப்பவர்களைப் பார்த்து, ‘என் தந்தையிடம் இருந்து ஆசீர் பெற்றவர்களே, வாருங்கள். இவ்வுலகம் தோன்றியது முதல், உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பேறுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்’.

    ஏன் நான் இவ்விதம் கூறுகிறேன் என்றால், ‘நான் பசியாக இருந்தபொழுது நீங்கள் எனக்கு உணவு கொடுத்தீர்கள். தாகமாய் இருந்தேன். தாகத்தைத் தீர்த்தீர்கள். நோயுற்று இருந்தேன். என்னைக் கவனித்தீர்கள். அந்நியரான என்னை ஏற்றுக் கொண்டீர்கள். ஆடையில்லாமல் இருந்த எனக்கு ஆடை தந்தீர்கள். சிறையில் இருந்த என்னைத் தேடி வந்தீர்கள்’ என்றார்.

    இதைக் கேட்ட நேர்மையாளர்கள், ‘ஆண்டவரே! எப்பொழுது உங்கள் பசி கண்டு உணவளித்தோம்? தாகம் உள்ளவராக இருந்த உமக்குத் தாகத்தை எப்பொழுது தணித்தோம்? எப்பொழுது அந்நியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? ஆடை எப்பொழுது அளித்தோம்? நோயுற்றவராக, சிறையில் இருந்தவராக எப்பொழுது இருந்தீர்? நாங்கள் எப்பொழுது நாடி வந்தோம்?’ என்று கேட்டார்கள்.

    அதற்கு அவர், ‘இச்சிறியோராகிய, என் சகோதர, சகோதரிக்குச் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள்’ என்றார்.

    பின்பு இடப்பக்கத்தில் இருப்பவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே! என்னிடம் இருந்து தள்ளிச்செல்லுங்கள். சாத்தானுக்கும் அதன் தூதுவர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் பசியாய் இருந்த எனக்கு நீங்கள் உணவு தரவில்லை. தாகமாய் இருந்தேன். தாகத்தைத் தணிக்கவில்லை. அந்நியராக இருந்த என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆடை இல்லாமல் இருந்தேன். நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயிலும் சிறையிலும் இருந்த என்னை நீங்கள் கவனிக்கவில்லை.’ என்றார்.

    அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே! எப்பொழுது நீர், பசியாகவோ, தாகமாகவோ, அந்நியராகவோ, நோயுற்றவராகவோ, சிறையில் இருந்தவராகவோ இருந்தீர்’ என்று கேட்டார்கள்.



    அதற்கு அவர் மறுமொழியாக, ‘மிகச் சிறியோராகிய இவர் களுள், ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ, அதை எனக்கும் செய்யவில்லை என, உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆகவே இவர்கள் முடிவில்லாத தண்டனையைப் பெறுவர். நேர்மையாளர்கள் நிலைத்த வாழ்வைப் பெறுவர்’ என்றார்.

    இருவேறுபட்ட இச்செய்திகளை எண்ணிப் பார்ப்போம்.

    நேர்மையாளர்களைச் செம்மறி ஆட்டின் கூட்டத்திற்கு ஒப்பிட்டும், வெள்ளாடுகளை நேர்மையற்றவர்களுக்கு ஒப்பிட்டும் கூறுகிறார். செம்மறி ஆடுகள் தன்னை மேய்ப்பவர்களுக்குக் கீழ்ப்படிந்து ஒற்றுமையாகச் செயல்படும். சாதுவாக இருக்கும். ஆனால் வெள்ளாடுகளோ பிரிந்தே செயல்படும். முரட்டுத் தன்மை உடையது. ‘வேலி தாண்டும் வெள்ளாடு’ என்பதுதான், வழக்குப் பேச்சு. ஆகவே அவர் காட்டும் ஒப்புமை, இயல்பும் இயற்கையும் இணைந்த ஒன்றாக இருக்கிறது.

    இவ்வுலக முடிவில், மனிதர்கள் எவ்வாறு பிரிக்கப்படு கிறார்கள் என்பதை இந்நற்செய்தி, தெளிவாக விளக்குகிறது.

    சிந்தனை:-

    இந்நற்செய்தியை இன்னும் ஆழமாக ஊன்றிப் படிப்போம். படிக்கும்பொழுது அதன் உட்பொருளை உணர்ந்து படிப்போம். இயேசு பிரானின் அடிப்படையான நோக்கமே, ஏழைகளுக்கு உதவிடு; தன்னைப்போல பிறரையும் நேசி என்பதுதான். இச்சிறியோரில் ஒருவருக்குச் செய்ததை எனக்கே செய்தாய் என்று சொல்வதில் இருந்தே, இயேசுவின் அடிப்படையான எண்ணம் எப்படிப்பட்டது என்பதை நம்மால் உணரமுடிகிறதல்லவா?

    ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதும், குறிப்பாக கைவிடப்பட்டவர்களை நேசிப்பதும் அவர்களோடு அன்பைப் பரிமாற்றம் செய்து கொள்வதும்தான் கிறிஸ்தவக் கோட்பாடாகும்.

    நம்மில் எத்தனை பேர் இவற்றைப் பின்பற்றுகிறோம்? இயேசுவின் உண்மையான அந்தப் போதனைக்குச் செவிமடுக் கிறோமா? என்பதையெல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டும்? இந்த உலகில் எப்படி வாழ்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான், மறு உலகில் நமக்கான வாழ்வு அமைகிறது என்பதை எடுத் துரைக்கிறார். ஓர் ஆயர் வளர்க்கும் இரு வேறுபட்ட ஆடுகளை எடுத்துக்காட்டி மக்களுக்குத் தெளிவை ஊட்டுகிறார்.

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ‘கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’ என்ற நிலை இருந்தது. அந்தக் காலகட்டத்தில் இந்த உலகில் தோன்றிய இயேசு பிரான், அன்பை மட்டுமே போதித்து, மக்களை நெறிப்படுத்துகிறார். இந்த நற்செய்தியைப் படிக்கும் நாமும் அன்பால் சாதிக்க முடியும்; அன்பு ஒன்றுதான் பலம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, நற்செய்தி வழி நடப்போமாக!
    Next Story
    ×