என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `என்ஜிகே' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #NGK #Suriya #NGKTeaser
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர்.

    படத்தில் சூர்யா நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே) என்ற பெயரில் நடித்திருக்கிறார். ஒரு சாதாரண இளைஞாக இருந்து அரசியல் களத்தில் இறங்கி மாற்றத்தை ஏற்படுத்துவது போல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

    சமீபத்தில் வெளியான படத்தின் டீசரில் அரசியல் வாசனை வீச படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் படம் வருகிற மே 31-ந் தேதி படம் திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

    ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #NGK #Suriya #NGKFire #NGKfromMay31

    காலீஸ் இயக்கத்தில் ஜீவா - நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கீ’ படத்தை குழந்தைகள் முதல் முதியவர் வரை செல்போன் வைத்திருக்கும் அனைவரும் பார்க்க வேண்டும் என்று இயக்குநர் கூறியுள்ளார். #KEE #Jiiva
    நாடோடிகள், ஈட்டி, மிருதன், போன்ற வெற்றி படங்களை தயாரித்த குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் செராபின் ராயப்பன் தயாரித்துள்ள படம் ‘கீ’.

    இந்த நிறுவனத்தின் 10-வது தயாரிப்பாக உருவாகி இருக்கும் இந்த படத்தை செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காலீஸ் இயக்கியிருக்கிறார். ஜீவா, நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ளனர். அனைகா, ஆர்.ஜே.பாலாஜி, பத்ம சூர்யா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    தற்போதைய தொழில்நுட்ப உலகில் செல்போன்கள் இல்லாதவர்களே கிடையாது என்னும் அளவுக்கு செல்போனின் தேவையும், பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதுப்புது செல்போன்களும் வந்த வண்ணமாகவே இருக்கின்றன.



    இவ்வாறாக செல்போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக கீ உருவாகி இருக்கிறது. செல்போன் வைத்திருப்பதால் ஏற்படும் பாதிப்பை படம் பேசுகிறது. ஒரு 4 வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்.

    நாம் செய்யும் லைக்குகள், நாம் செய்யும் ஷேர்கள் இவற்றால் நடக்கும் பின்னணி என்ன? என்பதை பற்றி படத்தில் விவரித்திருப்பதாக இயக்குநர் காலீஸ் கூறினார். 

    விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏப்ரல் 12-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. #KEE #Jiiva #NikkiGalrani

    டீன் டிபோலிஸ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ஹவ் டூ ட்ரெய்ன் யுவர் டிராகன் படத்தின் விமர்சனம். #HowToTrainYourDragon
    ஹவ் டூ ட்ரெய்ன் யுவர் டிராகன் வரிசையில் டிராகன்களின் ரகசிய உலகத்தை மையப்படுத்தி இந்த பாகம் உருவாகி இருக்கிறது. அந்த வகையில் டிராகன்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார் நாயகன் ஹிக்கப். டிராகன்களால் மனிதர்களுக்கு ஆபத்து வராது, டிராகனும், மனிதர்களும் ஒன்றாக வாழலாம் என்பதை உணர்த்தும் ஹிக்கப், நிஜத்தில் அதனை சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறார்.

    இதற்கிடையே டிராகன்களால் மனிதர்களுக்கு ஆபத்து தான் என்று அதனை அடிமைப்படுத்தி அழிக்க நினைக்கிறார் கிரிம்மல். ஹிக்கப்பிடம் இருக்கும் டிராகன்களின் அரசனான நைட் பியூரியை (டூத்லெஸ்) கவர்ந்து அதன் மூலம் மற்ற டிராகன்களை அழிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.



    அதற்காக லைட் பியூரி எனப்படும் வெள்ளை டிராகன் மூலம் லைட் பியூரியை பிடிக்க முயற்சி செய்கிறார். இதையடுத்து டிராகன்களை கிரிம்மல்லிடம் இருந்து பாதுகாக்க தனது அப்பா சொல்லும் பாதுகாப்பான ரகசிய உலகத்தை தேடுகிறார்.

    கடைசியில், பாதுகாப்பான உலகத்தை கண்டுபிடித்தாரா? அனைத்து டிராகன்களையும் அங்கு அழைத்துச் சென்றாரா? மனிதர்கள், டிராகன்கள் ஒன்றாக ஒரே உலகத்தில் வசித்தனவா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படம் முழுக்க முழுக்க அனிமேஷன், கிராபிக்ஸ் என 3டியில் உருவாகி இருப்பதால் திரையில் பார்க்க ஒரு விருந்தாகவே அமைகிறது. படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளன. ஆக்‌ஷன் காட்சிகள், அதில் வரும் இடங்கள் என அனைத்தும் கண்ணிற்கு விருந்தளிக்கின்றன.

    குறிப்பாக டிராகன்களின் ரகசிய உலகத்தில் வரும் வண்ணமயமான டிராகன்கள் மற்றும் இடங்கள் பிரம்மிப்பை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. டிராகன் - மனிதர்களுக்கு இடையேயான பாசம், பிரிவு என செண்டிமெண்ட்கள் இடம்பெற்றிருப்பது ரசிக்கும்படியாக இருக்கிறது.

    மொத்தத்தில் `ஹவ் டூ ட்ரெய்ன் யுவர் டிராகன்' விருந்து. #HowToTrainYourDragon #HowToTrainYourDragonReview

    கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா பற்றி அவதூறாக பேசிய ராதாரவிக்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்த நயன்தாரா, மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். #Nayanthara #RadhaRavi
    கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசும்போது, நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன், விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி, மிலிந்த் ராவ் உட்பட திரையுலகை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    அதனைத் தொடர்ந்து கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது.

    இந்த நிலையில், இந்த பிரச்சனை குறித்து நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    நான் பொதுவாக அறிக்கைகள் வெளியிடுவதில்லை. பெண்களுக்கு எதிரான ஆண்களின் தவறான கருத்துகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கருத்துக்களால் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

    நடிகர் ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கிய நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு எனது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



    தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் தான் பிறந்தவர் என்பதை ராதாரவி உள்ளிட்ட அவரைப் போன்றவர்கள் மறக்க வேண்டாம். சினிமா துறையில் மூத்த நடிகரான அவர் மற்ற இளம் தலைமுறையினருக்கு  முன்னுதாரணமாக, வழிகாட்டுபவராக திகழ வேண்டும். 

    சரியான பட வாய்ப்பு இல்லாததால், தன் மீதான கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று கீழ்த்தரமாக பேசி பிரபலமடைய முயற்சிக்கிறார் ராதாரவி. இதில் வேதனையளிக்கும் விஷயம் என்னவென்றால், அவருடைய கீழ்த்தரமான பேச்சுக்கு அங்கிருந்தவர்கள் கைத்தட்டி, சிரித்து கேட்பது தான். தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அவரை விசாரிக்க குழு அமைக்க வேண்டும்.

    ராதாரவி போன்ற பெண்களுக்கு எதிராக பேசுபவர்களை பொதுமக்களும், ரசிகர்களும் ஆதரிக்கக் கூடாது என்பதே எனது கோரிக்கை. அவரது இத்தகைய கேவலமான பேச்சுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது திறமைக்கு ஏற்ற வேலையை கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார். எனது ரசிகர்களுக்காக நான் என்னால் முடிந்த வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். இனியும் நடிப்பேன்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விசாகா வழிகாட்டு குழு அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? என்பதே எனது பணிவான கடைசி கேள்வி.

    எனக்கு துணையாக நின்ற, நிற்கும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். #Nayanthara #RadhaRavi #NadigarSangam #KolaiyuthirKaalam

    ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பேசிய பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமி, ரஜினி அரசியலுக்கு வரமாட்டார், ஒருவேளை வந்தால் உடனடியாக ஜெயிலுக்கு போவார் என்றார். #Rajinikanth #SubramanianSwamy
    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி அளித்த பிரத்யேக பேட்டியில் பேசும் போது,

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி பெரும்பான்மையை கைப்பற்றி நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்று தான் நம்புவதாக தெரிவித்தார். 5 வருட ஆட்சிக் காலத்தில் பொருளாதார அளவில் பாரதிய ஜனதா அரசு தோல்வியையே சந்தித்துள்ளது. எனினும் பாரதிய ஜனதாவுக்கே செல்வாக்கு உள்ளது.

    தமிழகத்தை பொறுத்த வரை பாரதிய ஜனதா தனித்து போட்டியிட வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் காலூன்ற முடியும். கூட்டணி வைத்தால் இயலாது.



    அரசியலும், சினிமாவும் ஒன்றில்லை. ரஜினி வர்றார், வர்றார்னு சொல்றாங்க, அவர் எங்கே வர்றார். அடுத்த தேர்தல் வரும் போது, இந்த தேர்தலில் போட்டியில்லை அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன்னு சொல்வார். இது அவருக்கு பழக்கமாகிவிட்டது. 

    அப்போது என்ன சொன்னார் என்று எனக்கு தெரியும். வந்துவிட்டார், வர்றார், பொதுக்கூட்டம் நடத்துகிறார், அமைப்பு ஆரம்பிக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர் வரமாட்டார் என்று நான் அப்போவே சொன்னேன், அதற்கான காரணம் எனக்கு தெரியும். ரஜினி எப்பவுமே அரசியலுக்கு வரமாட்டார். வரமுடியாது. ஒருவேளை வந்தார்னா அவர் உடனடியாக ஜெயிலுக்கு போவார்.

    இவ்வாறு கூறினார். #Rajinikanth #SubramanianSwamy

    சுப்ரமணிய சுவாமியின் பேட்டி:

    நயன்தாரா பற்றி அவதூறாக பேசிய நடிகர் ராதாரவிக்கு கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி உள்ளிட்ட பலரும் சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர். #KolaiyuthirKaalam #Nayanthara
    ராதாரவியின் பேச்சு தொடர்பாக எழுந்த கண்டனங்கள்:-

    நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ‘சமீபத்துல நீங்கள் பெண்களுக்கு எதிராக கீழ்த்தரமான முறையில் பேசியதை வன்மையாகக் கண்டித்து, நடிகர் சங்கக் கடிதத்தில் கையெழுத்து போடுறதுல நடிகர் சங்க பொதுச் செயலாளராக மகிழ்ச்சியடைகிறேன். இந்தக் கடிதம் விரைவிலேயே வந்து சேரும். இப்போதிலிருந்து உங்கள் பெயரை ‘ரவி’ன்னு வச்சிக்கோங்க. காரணம், உங்கள் பெயரில் ஒரு பெண்ணின் பெயரும் இருக்கிறது”.


    ராதாரவியின் சகோதரியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    ‘இன்று நம் துறையில் இருக்கும் அர்ப்பணிப்பான ஒரு சில நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். அவரை எனக்குத் தெரியும். அவருடன் பணிபுரிந்திருக்கிறேன். அவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். வீடியோவை முழுதாகப் பார்க்கவில்லை. ஆனால் ராதாரவியை இன்று சந்தித்தேன். அவர் பேசியது முற்றிலும் தவறு என்று சொன்னேன்’’.


    ராதாரவியின் பேச்சு குறித்து வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    ‘பெண்களை அசிங்கப்படுத்துவது, பெண்களைப் பற்றி ஆபாசமான நகைச்சுவை பேசுவது பெண்களை இழிவுபடுத்துவது, பெண்களை காட்சிப் பொருளாகப் பயன்படுத்துவது எல்லாம் இந்த திரைத்துறையில் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

    மீ டூ குறித்த சர்ச்சை வரும்போது, துறையில் இருக்கும் பெண்கள் என்னைப்போல, சின்மயியைப் போல எண்ணற்ற பெண்களுக்கு ஆதரவாக நின்றிருந்தால் வி‌ஷயங்கள் ஒருவேளை மாறியிருக்கலாம். அமைதி நமக்கு எந்தத் தீர்வையும் தராது. நேரம் முடிந்துவிட்டது. ஒவ்வொரு பெண்ணும் துணிந்து நிற்க வேண்டும்.


    திரைப்பட சங்கங்கள் என்று சொல்லிக் கொள்பவை எல்லாமே சில ஆணாதிக்கவாதிகளால் நடத்தப்படுபவை. அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். பெண்களை ஆதரிப்பது போல நடிப்பார்கள். ஆனால் நிஜத்தில் இவர்கள் ஏதோ ஒரு வகையில், திரையிலோ, வாழ்க்கையிலோ பெண்கள் இழிவுபடுத்தப்படும் சூழ்நிலைக்கு பங்காற்றியிருப்பார்கள்.

    கவர்ச்சியான உடைகள் அணிவதன் மூலம் எங்களை நாங்களே இழிவுபடுத்திக் கொள்கிறோம் என்று நினைப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன், அது ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். ஒரு பெண்ணின் குணத்தை அவளது உடையை வைத்து நீங்கள் முடிவு செய்யக் கூடாது.

    ஒரு ஆண் என்ன செய்தாலும், அது எவ்வளவு மோசமான, தவறான, நெறிமுறையற்ற செயலாக இருந்தாலும், அந்த ஆணுக்கு எத்தனை துணைகள் இருந்தாலும் அதை வைத்து நீங்கள் அவரது குணத்தை மதிப்பிட மாட்டீர்கள் என்றால் பெண்களைப் பற்றி மதிப்பிடவும் யாருக்கும் உரிமை இல்லை. உங்கள் சகோதரி என்ன உடை அணிந்திருந்தாலும் உங்களுக்கு அவரை பலாத்காரம் செய்யத் தோணாது இல்லையா. அதே போல மற்ற பெண்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்’.

    இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

    சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ‘தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் என் பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒதுங்கியிருந்தனர். காரணம் அவர்கள் வேறு யூனியன் வி‌ஷயத்தில் தலையிட முடியாது என்பதால். ஆனால், இந்த முறை அந்த நபர் மிகவும் வெற்றிகரமாக தன்னை நிரூபித்த நடிகையையல்லவா மேடையில் சீண்டியுள்ளார். இப்போதாவது நடவடிக்கை எடுங்கள். முடிந்தால் எடுங்கள். அப்படி எடுத்தால் ரொம்ப நன்றி.

    இவ்வாறு சின்மயி தெரிவித்துள்ளார்.


    ‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ், ராதாரவியை இனிமேல் தன் படத்திற்கு ஒப்பந்தம் செய்ய மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.

    ‘கொலையுதிர் காலம்‘ படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    ‘மேடையில் அனைவருமே இருந்தார்கள். ராதாரவி சார் சீனியர் நடிகர். அவர் அந்த இடத்தில் அப்படி பேசியிருக்கக் கூடாது. எனக்கே அதில் உடன்பாடில்லை.

    இவ்வாறு மதியழகன் தெரிவித்துள்ளார். #KolaiyuthirKaalam #Nayanthara #RadhaRavi

    விஜய் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் ஜெயலலிதாகவாக நடிக்கும் கங்கனா ரனாவத், தனது வாழ்க்கையும் ஜெயலலிதா வாழ்க்கையும் ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளார். #Thalaivi #JayalalithaaBiopic
    தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ‘தலைவி’ என்ற பெயரில் தயாராகிறது. இந்த படத்தை ‘மதராசப்பட்டினம்‘, ‘தெய்வத் திருமகள்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய விஜய் இயக்குகிறார்.

    இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் உள்ள முன்னணி நாயகிகளிடம் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன் மற்றும் கங்கனா ரணாவத் ஆகிய மூவரில் ஒருவர் ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாவார் என்று தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கணா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கங்கனா தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் நடித்து இருந்தார். 



    விஜய் இந்த படத்தை ஒரே நேரத்தில் இந்தியிலும் இயக்கி வருகிறார். இந்தியில் இந்த படத்திற்கு ‘ஜெயா’ என பெயரிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இந்தி நடிகை கங்கணா ரணாவத் இதுபற்றி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ‘இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பெண் ஜெயலலிதா. அவர் ஒரு சூப்பர் ஸ்டார். பின்னர் அவர் ஒரு பிரபலமான அரசியல்வாதியாகவும் மாறினார். இதையே ‘ஜெயா’ திரைப்படம் பேசுகிறது. பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தில் நான் ஜெயலலிதாவாக நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் எனக்கும் முக்கியப் பங்கு இருப்பதை நினைத்துப் பெருமை அடைகிறேன். தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதை எப்போதுமே விரும்புவேன். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருந்தேன். நான் என்னுடைய வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதற்காக தயாராகி வந்தேன்.

    ஆனால் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு அப்படியே என் வாழ்க்கையோடு ஒத்துப்போகிறது. கதையை கேட்டபோது இது எனக்கு புரிந்தது. படத்துக்காக தமிழ் கற்று வருகிறேன்’’.

    இவ்வாறு கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார். #Thalaivi #JayalalithaaBiopic #KanganaRanaut #DirectorVijay

    பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகும் `தமிழரசன்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கஸ்தூரி ஒப்பந்தமாகி இருக்கிறார். #Thamizharasan #VijayAntony
    `கொலைகாரன்', `அக்னிச் சிறகுகள்' படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது `தமிழரசன்', `காக்கி' படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் தமிழரசன் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சோனு சூட் வில்லனாகவும், சுரேஷ் கோபி, பூமிகா, சங்கீதா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

    இந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கஸ்தூரி ஒப்பந்தமாகி இருக்கிறார். கஸ்தூரி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கிவிட்டதாகவும், அவர் இதில் டாக்டராக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் விஜய் ஆண்டனியுடன் பல காட்சிகளில் கஸ்தூரி இணைந்து நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.



    இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி இந்த படத்தை தயாரிக்கிறார். #Thamizharasan #VijayAntony #RamyaNambeesan #Kasthuri

    நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #RadhaRavi #MKStalin #DMK
    சென்னை:

    கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசும்போது, நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



    இதனையடுத்து அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டார். அவர் தனது அறிக்கையில், நடிகர் ராதாரவி கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக கூறியிருந்தார்.

    இந்நிலையில், நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார். #RadhaRavi #MKStalin #DMK
    அனூப் சிங், சாய் தன்ஷிகா நடிப்பில் சுனில்குமார் தேசாய் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘உச்சக்கட்டம்’ படத்தின் விமர்சனம். #Uchakattam #UchakattamReview
    அனூப் சிங் மற்றும் தன்ஷிகா இருவரும் காதலர்கள். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இருவரும் தனியார் விடுதிக்கு செல்கின்றனர். அங்கு, நடக்கும் கொலை ஒன்றை பார்த்து ஏதேச்சையாக மொபைல் போனில் வீடியோவாகவும் படம் பிடிக்கிறார் தன்ஷிகா. இதைக்கண்டு அதிர்ந்த கொலைக் கும்பல், தன்ஷிகாவை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். 

    இதிலிருந்து தன்ஷிகாவை அனூப் சிங் எப்படி காப்பாற்றினார்? கொலை செய்யப்பட்டது யார், கொலை செய்தது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.



    சிங்கம் 3 படத்தில் வில்லனாக நடித்திருந்த அனூப் சிங், இப்படத்தில் ஹீரோவாக களம் இறங்கியிருக்கிறார். நல்ல உடற்கட்டோடு, ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். சாய் தன்ஷிகா, ரவுடி கும்பலிடம் சிக்கி தவிக்கும் காட்சிகளிலும், கார் டிக்கியில் சிக்கிக் கொண்டு பரிதவிக்கும் காட்சிகளிலும் அபாரம். இரண்டாவது நாயகியாக நடித்திருக்கும் தன்யா ஹோப் தனது அழகான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வேதாளம் படத்தின் வில்லனாக நடித்த கபீர் சிங், இப்படத்திலும் வில்லனாக மிரட்டியிருக்கிறார். 

    சஞ்சய் சௌத்ரியின் பின்னணி இசை ஓகே ரகம் தான். விஷ்ணுவர்தனின் ஒளிப்பதிவு கர்நாடகா மாநில காடுகளை அங்குலம் விடாமல் அலசி இருக்கிறது. படத்திற்கு பலமாகவும் அமைந்திருக்கிறது.

    விறுவிறுப்பாக திரைக்கதையுடன் படத்தை இயக்கி இருக்கிறார் சுனில்குமார் தேசாய். விறுவிறுப்பு ஒன்றே குறிக்கோள் என கடிவாளம் போட்டது போன்று நேர்கொண்ட பார்வையுடன் படத்தை மிக வேகமாக நகர்த்துகிறார். கதாநாயகி வில்லன் கும்பலிடம் மீண்டும் மீண்டும் பிடிபட்டு தப்புவது போன்ற காட்சிகளை சற்று மாற்றி அமைத்திருக்கலாம். லாஜிக் மீறல்கள் இல்லாமல் இருந்தால் படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    மொத்தத்தில் ‘உச்சக்கட்டம்’ குறைவான உச்சம்.
    கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா பற்றி பேசிய ராதாரவிக்கு விக்னேஷ் சிவன் கண்டனம் தெரிவித்துள்ளார். #Nayanthara #Radharavi
    கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ராதாரவி பேசும்போது, நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என பேசியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    ராதாரவியின் இந்த சர்ச்சை பேச்சுக்கும் நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ஒரு பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவரிடம் பேசிய அருவருப்பான கருத்துகளுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பார்களோ? யார் எனது கண்டன குரலுக்கு ஆதரவு கொடுப்பார்களோ? மூளையற்ற நபர், தன் மீதான கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இதனை செய்கிறார். இதில் வேதனையளிக்கும் விஷயம், அவருடைய கீழ்தரமான கருத்தை அங்கிருந்தவர்கள் கைத்தட்டி, சிரித்து கேட்பது. இப்படி ஒரு நிகழ்ச்சி, முடிவுறாத ஒரு படத்துக்காக நடக்கிறது என்று எங்கள் யாருக்கும் தெரியாது.



    இப்படத்தை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றுதான் நான் நினைத்தேன். இப்போது நடந்தது சற்றும் பொருத்தமில்லாத நிகழ்ச்சியாகும். தேவையற்ற நபர்கள் கலந்து கொண்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலயே பேசியுள்ளனர். இதுதான் ஒரு படத்தை புரமோட் செய்யும் விதம் என்றால் இனி இது போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகி நிற்பதே நலம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மேலும், என்ன நடந்தாலும் அவர் மீது நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்களோ அல்லது வேறு எந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களோ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. பரிதாப நிலை என்று காட்டமாக பதிவு செய்துள்ளார்.

    ராதாரவியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
    கொலையுதிர் காலம் படவிழாவில் கலந்துக் கொண்ட ராதாரவி, நயன்தாராவை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். #RadhaRavi #Nayanthara
    கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் ராதாரவி பேசியதாவது, ‘சினிமாத்துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் எல்லாம் ஒரு லெஜண்ட் ஆவார்கள். அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். அவர்களுடன் எல்லாம் நயன்தாராவை ஒப்பிடுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நயன்தாரா நல்ல நடிகை, இவ்வளவு நாள் திரையுலகில் நிலைப்பதே பெரிய விஷயமாகும். அவரைப் பற்றி வராத செய்தியே கிடையாது. அதெல்லாம் தாண்டி நிற்கிறார்கள். 

    தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை 4 நாட்கள் மட்டுமே ஞாபகம் வைத்திருப்பார்கள். பிறகு விட்டுவிடுவார்கள். நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார். 

    முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என பேசியுள்ளார். 
    ×