search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    இந்தி சினிமாவில் சர்ச்சையில் சிக்கி சிறைத்தண்டனை பெற்ற பிரபலங்கள்
    X

    இந்தி சினிமாவில் சர்ச்சையில் சிக்கி சிறைத்தண்டனை பெற்ற பிரபலங்கள்

    நடிகர் சல்மான் கானுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைப்போல இந்தி நட்சத்திரங்கள் பலர் குற்ற வழக்குகளில் சிக்கி உள்ளனர். #SalmaanKhan
    இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கான் கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது மான் வேட்டையாடியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை விசாரித்த ஜோத்பூர் கோர்ட்டு சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சல்மான் கான் சிறை செல்வது இது முதல் முறையல்ல. அவர் இதற்குமுன்பாக குடிபோதையில் கார் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய வழக்கில் சிறை தண்டனை பெற்று பின்னர் விடுதலை ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சல்மான் கான் போலவே குற்ற வழக்குகளில் சிக்கி சிறைத்தண்டனை பெற்றுள்ள இந்தி திரையுலகினர் பலரை சினிமா ஆர்வலர்கள் நினைவு கூர்ந்தனர்.

    அதிலும் குறிப்பாக சல்மான் கானின் நண்பரும் பிரபல இந்தி நடிகருமான சஞ்சய் தத் இதில் முக்கியமானவராக கருதப்படுகிறார். சஞ்சய் தத் 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி புனே எரவாடா மத்திய சிறையில் 42 மாதங்கள் கழித்தபின் கடந்த 2016-ல் அவர் விடுதலை ஆனார்.



    இதுபோல ‘கேங்ஸ்டர்’ மற்றும் ‘ஹசாரோன் கவைஷெயின் ஐசி’ ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்ற ஷினாய் அகுஜா தனது வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கடந்த 2011-ம் ஆண்டு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். தற்போது அவரது மேல்முறையீட்டு மனு மும்பை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. மேலும் சல்மான் கானால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தி நடிகர் சூரஜ் பஞ்சோலி அவருடன் பணிபுரிந்த நடிகையை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் சிறை சென்று தற்போது ஜாமீனில் உள்ளார்.

    இது தவிர மும்பை நிழலுலக தாதா அபு சலீம் உடன் சேர்ந்து போலி பாஸ்போர்ட்டு தயாரித்த வழக்கில் கைதான நடிகை மோனிகா பெடி மற்றும் நட்சத்திர ஓட்டலில் தொழிலதிபரை முகத்தில் குத்திய சயீப் அலிகான் ஆகியோரும் இந்த பட்டியலில் அடங்குவர். இந்த அனைத்து சம்பவங்களிலும் சிறை சென்றவர்கள் செல்வாக்கு மிக்க நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



    மேற்கண்ட இந்த சம்பவங்களில் கோர்ட்டுகள் அவர்களை குற்றவாளிகள் என அறிவித்தாலும் ரசிகர்கள் தங்களது ஆதர்ச நாயகர்களை விட்டுக்கொடுக்க மறுக்கின்றனர். சல்மான் கான் விஷயத்திலும் அவருக்கு சிறைத்தண்டனை விதித்ததை கேள்விபட்டதும் ரசிகர்கள் பலர் பாந்திராவில் உள்ள அவரது கேலக்சி அடுக்குமாடி குடியிருப்பு வாசலில் கூட தொடங்கினர். அவர்கள் சல்மான் கானின் சிறைத்தண்டனை தங்களுக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகவும், விரைவில் அவர் விடுதலை ஆவார் எனவும் தெரிவித்தனர்.

    மேலும் இந்தி சினிமா பிரபலங்கள் சோனாக்ஷி சின்கா, சத்ருகன் சின்கா, சினேகா உல்லால், ‘ரேஸ் 3’ திரைப்பட தயாரிப்பாளர் ரமேஸ் தவுராணி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாபா சித்திக் உள்பட பலர் சல்மான் கானின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். சல்மான் கானின் நெருங்கிய நண்பரும் திரைப்பட இயக்குனருமான சஜித் நதியாத்வாலா, தனது ‘பாகி 2’ திரைப்படத்தின் வெற்றி விழாவை ரத்து செய்துள்ளார். #SalmaanKhan
    Next Story
    ×