search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பெண்கள் வெளியே சென்று சாதிப்பது சவாலான ஒன்று: நடிகை சினேகா
    X

    பெண்கள் வெளியே சென்று சாதிப்பது சவாலான ஒன்று: நடிகை சினேகா

    பெண்கள் வெளியே சென்று சாதிப்பது சவாலான ஒன்றாக இருக்கிறது நடிகை சினேகா தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த சினேகா, தற்போது குழந்தை பிறந்த பிறகு சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள சில படங்களிலும், சிறப்புத் தோற்றத்தில் சில படங்களிலும் நடித்துள்ளார்.

    தற்போது, சிவகார்த்திகேயன் - மோகன்ராஜா கூட்டணியில் உருவாகும் ‘வேலைக்காரன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில், தனியார் அழகு கலை நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் சினேகா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, அதில் அந்நிறுவனத்தில் பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    அப்போது அவர் பேசும்போது, இங்கே இருக்கும் அனைத்து அழகுக் கலை நிபுணர்களுக்கும் வணக்கம். இந்நிறுவனத்தின் நிறுவனரை எனக்கு 7 வருடங்களாகத் தெரியும். ஒரு பெண்ணாக அவருடைய உழைப்பு மிகப்பெரியது. அதனால்தான் இந்த நிறுவனம் மிகப்பெரியதாக உயர்ந்துள்ளது.

    இந்நிறுவனத்தின் 10-வது வருட பட்டமளிப்பு விழாவில் பங்குபெறுவதில் மிக்க மகிழ்ச்சி. எல்லாத் துறைகளும் பெண்களுக்கு சவாலான துறை தான். எந்த துறைக்குச் சென்றாலும், பெண்கள் சவால்களை சமாளித்துதான் முன்னேற முடியும். இங்கே இருக்கும் பெண்கள் அனைவருக்கும் உங்களுடைய நிறுவனர் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. அழகுக் கலை நிபுணர்கள் மருத்துவர்களுக்கு நிகரானவர்கள்.

    அழகுக் கலை நிபுணர்கள் கையில் அதிக திறமை உள்ளது. அவர்கள் நினைத்தால் இந்த உலகத்தையே அழகாக மாற்ற முடியும். சினிமா நடிகைகள் மட்டும் தான் அழகாக இருக்க முடியும் என்ற காலம் மாறிவிட்டது. இப்போது நீங்கள் நினைத்தால் உலகத்தில் உள்ள அனைவரும் அழகாகலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×