தொழில்நுட்பம்

சாம்சங் மின்சாதனங்கள் விலை குறைப்பு

Published On 2018-07-27 10:21 GMT   |   Update On 2018-07-27 10:46 GMT
இந்தியாவில் சாம்சங் மின்சாதனங்களின் விலை 8% வரை குறைக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்ட மின்சாதனங்களுக்கு புதிய விலை உடனடியாக பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Samsung #GST


சாம்சங் நிறுவன மின்சாதனங்களின் விலை ஜி.எஸ்.டி. வரிமுறைக்கு ஏற்ப குறைக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி சாம்சங் நிறுவனத்தின் புதிய அறிவிப்பை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட டிவி மாடல்கள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் வாஷிங் மெஷின் போன்றவற்றின் விலை குறையும். மேலும் இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை குறைப்பு காரணமாக சாதனங்களின் விற்பனை வரவிருக்கும் பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் என சாம்சங் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. ஜி.எஸ்.டி. வரிமுறை அமலானதை தொடர்ந்து பயனர்களுக்கு முழு பலன்களை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம் என சாம்சங் நிறுவன மூத்த துணை தலைவர் ராஜீவ் புட்டானி தெரிவித்தார்.

அரசின் முடிவுக்கு முழுமையாக கட்டுப்பட்டு பயனர்களுக்கு முழு பலன்களை வழங்க சாம்சங் தயாராக இருக்கிறது. மேலும் இதன் மூலம் நுகர்வோர் மின்சாதனங்களுக்கான தேவை பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார். கடந்த வாரம் ஜி.எஸ்.டி. கவுன்சில் மின்சாதனங்களுக்கான வரியை 28% இல் இருந்து 18% ஆக குறைத்தது.

அதன்படி வாக்யூம் க்ளீனர்கள், வாஷிங் மெஷின்கள், 27 இன்ச் டிவி, குளிர்சாதன பெட்டி, லாண்டரி மெஷின்கள், பெயின்ட், ஹேர் டிரையர்கள், கிரைன்டர்கள் மற்றும் வார்னிஷ் உள்ளிட்டவற்றின் விலை குறைக்கப்படுகிறது.

எல்ஜி. பானாசோனிக் மற்றும் கோத்ரேஜ் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே புதிய வரிமுறையின் கீழ் சாதனங்களின் விலையை குறைத்துவிட்டன. அதன்படி பல்வேறு சாதனங்களின் விலை 7 முதல் 8 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுவிட்டது. 
Tags:    

Similar News