தொழில்நுட்பம்

இந்தியாவில் விற்பனையாகும் 10-இல் 6 ஆறு ஸ்மார்ட்போன்கள் இந்த நிறுவனங்கள் தயாரித்தவை

Published On 2018-07-20 10:59 GMT   |   Update On 2018-07-20 10:59 GMT
இந்திய சந்தையில் விற்பனையாகும் பத்து ஸ்மார்ட்போன்களில் ஆறு சியோமி அல்லது சாம்சங் நிறுவனங்களுடையது என தெரியவந்துள்ளது. #smartphone



இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் கணிசமான பங்குகளை பெற சிரமப்படுவதாகவும், ஹெச்.டி.சி. நிறுவனம் இந்திய சந்தையை விட்டு வெளியேற இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இரண்டாவது காலாண்டு விற்பனை சார்ந்து கனாலிஸ் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்களில் சியோமி மற்றும் சாம்சங் நிறுவனங்கள் இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 99 லட்சம் ஸ்மார்ட்போன் யூனிட்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

ஒரே காலாண்டில் இரு நிறுவனங்களும் இந்தளவு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். இந்திய சந்தையில் சியோமி நிறுவனம் முதலிடத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறது. சாம்சங் நிறுவனம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இரண்டாவது காலாண்டில் சியோமி மற்றும் சாம்சங் நிறுவனங்கள் 30% பங்குகளை பெற்றிருக்கின்றன. எனினும் சியோமியின் விற்பனை முந்தைய ஆண்டை விட 106% அதிகரித்து இருக்கிறது. இதே காலகட்டத்தில் சாம்சங் நிறுவனம் முந்தைய காலாண்டை விட 47% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.



இந்த காலகட்டத்தில் சியோமியின் ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் 33 லட்சம் விற்பனையாகி மிகவும் பிரபலமான மாடலாக இருந்தது, இதை தொடர்ந்து சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ2 ப்ரோ ஸ்மார்ட்போன் 23 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. 

சியோமி, சாம்சங் நிறுவனங்களை தொடர்ந்து விவோ நிறுவனம் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்தியாவில் இரண்டாவது காலாண்டில் மொத்தம் 36 லட்சம் ஸ்மார்ட்போன்களை விவோ விற்பனை செய்து சந்தையின் 11% பங்குகளை பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஒப்போ நிறுவனம் 10% பங்குகளுடன் சந்தையில் நான்காவது இடத்தில் இருக்கிறது.

இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மொத்தமாக 3.26 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 22% அதிகம் ஆகும். #Xiaomi #Samsung #smartphone
Tags:    

Similar News