செய்திகள்
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள்.

கன்னியாகுமரியில் தை அமாவாசை: முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பலிகர்ம பூஜை செய்த பக்தர்கள்

Published On 2017-01-27 06:52 GMT   |   Update On 2017-01-27 06:52 GMT
தை அமாவாசையையொட்டி இன்று கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்கு பலிகர்மம் கொடுத்தனர்.

கன்னியாகுமரி, ஜன. 27-

இந்துக்களின் முக்கிய விசே‌ஷ நாட்களில் ஒன்றான தை அமாவாசையை யொட்டி இன்று கன்னியா குமரியில் முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் திரளான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் கடலில் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்கு பலிகர்மம் கொடுத்தனர்.

இதற்காக நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் கேரளாவின் தென்பகுதியில் இருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்தனர். இதனால் கன்னியாகுமரி கடற்கரையில் எங்கும் மக்கள் வெள்ளமாக காட்சி அளித்தது. அவர்கள் அதிகாலையிலேயே புனித நீராடி விட்டு கடற்கரைக்கு வந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் மூலம் பலிகர்மம் பூஜை செய்தனர்.வாழை இலையில் பச்சரிசி, பூ, தர்ப்பை புல், எள் போன்றவற்றை வைத்து அவற்றை தலையில் சுமந்து சென்று கடலில் போட்டு மீண்டும் புனித நீராடினார் கள்.

பிறகு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதிஅம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். இதனால் பகவதி அம்மன் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தை அமாவாசையை யொட்டி இன்று அதி காலை 3 மணிக்கு பகவதி அம்மன் கோவில் மூலஸ்தான நடை திறக்கப்பட்டு அபிஷேகம், ஸ்ரீபலிபூஜை, நிவேத்திய பூஜை, தீபாராதனை, உ‌ஷபூஜை, உ‌ஷதீபாராதனை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டது.

மறைந்த முன்னோர்களுக்கு கடற்கரையில் பலிகர்மம் கொடுக்கப்பட்ட காட்சி.

இந்த பூஜைகள் நடக்கும் போது பக்தர்கள் தரிசனத்துக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதன் பிறகு அதிகாலை 5 மணிக்கு பக்தர்களுக்கு தரிசனத்துக்காக கோவிலின் பிரதான நுழைவுவாசல் திறக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

தை அமாவாசையை யொட்டி அம்மனுக்கு தங்ககவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக் கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பகதர் களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

மேலும் பகவதிஅம்மன் கோவிலில் இன்று இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளி கலை மான் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்ததீபாராதனையும் நடக்கிறது. நிகழ்ச்சிகளை சுசீந்திரம் ஆசிராமம் திருப் பனந்தாள் காசி திருமடம் செய்து வருகிறது.

அதைத் தொடர்ந்து நள்ளிரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு நிகழ்ச்சியும் வருடத்தில் 5 விசே‌ஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. * * * மறைந்த முன்னோர்களுக்கு கடற்கரையில் பலிகர்மம் கொடுக்கப்பட்ட காட்சி. * * * கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள்.

Similar News