செய்திகள்

சுசீந்திரம் கோவிலில் இன்று கருட தரிசனம்: பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

Published On 2017-01-06 08:21 GMT   |   Update On 2017-01-06 08:21 GMT
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி 5-ம் திருவிழாவான இன்று (6-ந்தேதி) கருட தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகளும், வாகன பவனியும், பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், சொற்பொழிவும் நடக்கிறது. 3-ம் திருவிழாவான 4-ந்தேதி மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

5-ம் திருவிழாவான இன்று (6-ந்தேதி) கருட தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து ரி‌ஷப வாகனத்தில் தாணுமாலய மூர்த்தியும், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும், கருடவாகனத்தில் பெருமாளும் மற்றும் உற்சவ மூர்த்திகளும் வெளி வந்தபோது வேளிமலை முருகனும், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமியும், விநாயகரும் இணைந்து கொண்டனர்.

பின்னர் அனைவரும் கோவிலை வலம் வந்தனர். நடுத்தெருவில் உள்ள வீர மார்த்தாண்டன் விநாயகர் கோவில் முன்பு தாணுமாலய மூர்த்தி, அறம் வளர்த்த நாயகி அம்மன் மற்றும் பெருமாள் ஆகிய 3 பேரும் மேற்கு நோக்கி நின்றனர்.

அப்போது அந்திரி முனி வரும் அனுஷியா தேவியும் கருட வடிவில் வந்து தாணுமாலய சுவாமியை தரிசனம் செய்தனர். கருடன் வாகனத்தை வட்டமிட்ட போது அங்கிருந்த பக்தர்களும் வணங்கி சாமி தரிசனம் செய்தனர்.

கருட தரிசனத்தையொட்டி இன்று கோவிலில் காலை முதலே கூட்டம் அலைமோதியது. கோவில் ரத வீதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.

9-ம் திருவிழாவான 10-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கங்காள நாதர் பிட்சாடனராக வீதி உலா வருவதும், 7.45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு சப்த வர்ண காட்சியும் நடைபெறும்,

தேரோட்டத்தையொட்டி 10-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. 10-ம் திருவிழா வன்று இரவு 11 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

Similar News