செய்திகள்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது

Published On 2016-11-25 08:31 GMT   |   Update On 2016-11-25 08:31 GMT
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவம் நாளை சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடத்தப்படுகிறது. இதே போல் ஏழுமலையானின் பட்டத்து ராணியான திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கும் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடத்தப்படுகிறது.

பத்மாவதி தாயார் கோவிலில் இந்த ஆண்டு கார்த்திகை பிரம்மோற்சவம் நாளை சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தாயார் சன்னதிக்கு எதிரில் உள்ள கொடிமரத்தில் மஞ்சள் நிற வஸ்திரத்தில் யானை சின்னம் பொறிக்கப்பட்ட கஜ கொடி ஏற்றப்பட்டு, வேத மந்திரம் முழங்கப்படும்.

இந்த கொடியேற்றத்தை காண ஏராளமான பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொடியேற்றத்தை தரிசிப்பவர்கள், அனைத்து தேவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றவர்களாவர் என்பது ஐதீகம். பிரம்மோற்சவத்தை காண வருமாறு தேவாதி தேவர்களுக்கு அழைப்பு விடுக்க பலவித வாத்திய கருவிகள் வாசிக்கப்படும்.

நாளை தொடங்கும் விழா டிசம்பர் மாதம் 4 -ந் தேதி வரை 9 நாட்களுக்கு கோலாகலமாக நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று இரவு பத்மாவதி தாயாருக்கு அங்குரார்பணம் நிகழ்ச்சி நடக்கிறது. இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், குங்கும லட்சார்ச்சனை நடந்தது.

மாலையில் சேனாதி பதியான விஷ்வசேவர் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பிறகு ஆகம முறைப்படி அங்குரார் பண நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முதல் நாளான நாளை இரவு சின்ன சே‌ஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் மாட வீதிகளில் வலம் வருகிறார்.

27-ந் தேதி காலை பெரிய சே‌ஷ வாகனம், இரவு ஹம்ச வாகனம் எனப்படும் அன்ன பறவை வாகனத்தில் அம்மன் பவனி வருகிறார். 28-ந் தேதி காலை முத்து பல்லக்கு வாகனம், இரவு சிம்ம வாகனத்திலும், 29-ந் தேதி காலை கல்ப விருட்ச வாகனம், இரவு அனுமன் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

30-ந் தேதி காலை பல்லக்கு உற்சவம், மாலை வசந்த உற்சவம், இரவு யானை வாகனம் ஆகிய சேவைகள் நடக்கிறது. மேலும் வரும் டிசம்பர் 1-ந் தேதி காலை சர்வ பூபால வாகனம், மாலை தங்க தேரோட்டம், இரவு கருட வாகன சேவை நடக்கிறது.

2-ந் தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 3-ந் தேதி காலை தேர் திருவிழா, இரவு குதிரை வாகன சேவையும் நடக்கிறது. 4-ந் தேதி காலை கோவில் வளாகத்தில் உள்ள பத்ம குளத்தில் சக்கர ஸ்நானம் எனப்படும் பஞ்சமி தீர்த்தம் நடைபெறுகிறது.

அன்றிரவு கொடியிறக்க நிகழ்ச்சிகள் நடக்கிறது. பிரம்மோற்வ விழாவை முன்னிட்டு மலர் அலங்காரம் கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொள்வார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Similar News