உலகம்
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

கொரோனா தொற்றை இந்தியா சிறப்பாக கட்டுப்படுத்தி உள்ளது- பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு

Published On 2022-05-24 07:28 GMT   |   Update On 2022-05-24 10:14 GMT
இந்தியா அமெரிக்கா இடையிலான நட்புறவு நம்பிக்கையின் அடிப்படையில் வலுவான நிலையில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டோக்கியோ:

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜே பைடனுடன், பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். 

இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, மக்களுக்கு இடையிலான உறவுகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அப்போது பேசிய பிரதமர் மோடி இந்தியா, அமெரிக்கா கூட்டு நட்புறவு நம்பிக்கையின் அடிப்படையிலானது என்றும், இரு நாடுகள் இடையே பொதுவான நலன்கள் மற்றும் மதிப்பீடுகள் மூலம் வலுவான நிலையில் அது உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்திய  -அமெரிக்க தடுப்பூசி நடவடிக்கை திட்டத்தை புதுப்பிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் பிரதமர் அப்போது குறிப்பிட்டார்.

அப்போது பேசிய ஜோ பைடன், கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை ஜனநாயக முறையில் இந்தியா வெற்றிகரமாக கையாண்டு உள்ளதாகவும், இதற்காக பிரதமர் மோடியை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.  

கொரோனா தொற்று நோயை கையாண்ட விதத்தில் இந்தியாவை ஒப்பிடுகையில் சீனா தோல்வி அடைந்து உள்ளதாகவும் பைடன் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் வெற்றி, ஜனநாயக முறை மூலம் எதையும் வழங்க முடியும் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டி உள்ளதாகவும், சீனா மற்றும் ரஷ்யா போன்ற எதேச்சதிகார முறை வேகமாக மாறிவரும் உலகை சிறப்பாக கையாள முடியும் என்ற கட்டுக்கதையை முறியடித்துள்ளது என்றும் பைடன் கூறியுள்ளார்.


Tags:    

Similar News