உலகம்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

இனி வெளிநாடு போகலாம்... கட்டுப்பாட்டு பட்டியலில் இருந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பெயர் நீக்கம்

Published On 2022-04-24 10:20 GMT   |   Update On 2022-04-24 10:20 GMT
முந்தைய ஆட்சியில் அரசியல் பழிவாங்கலுக்காக பலரது பெயர்கள் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டதாக தற்போதைய உள்துறை மந்திரி சனாவுல்லா தெரிவித்தார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசில் இருந்த பல்வேறு மந்திரிகள் மீது ஊழல் புகார்கள் உள்ள நிலையில், அந்த முன்னாள் மந்திரிகளை ‘நாட்டை விட்டு வெளியேற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பட்டியலில்’ (இசிஎல்) சேர்க்குமாறு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உத்தரவிட்டார். ஊழல் புகார்களில் இருந்து தப்பிக்க அவர்கள் வெளிநாட்டுக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். 

அதே சமயம்,  முந்தைய அரசு வெளியிட்ட பட்டியலில் இருந்து ஷெபாஸ் ஷெரீப், தற்போதைய மந்திரிகள் மற்றும் பல்வேறு பிரமுகர்களின் பெயர்களை நீக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த வாரம் கடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில், நாட்டை விட்டு வெளியேற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பட்டியலை மறுபரிசீலனை செய்ய உள்துறை அமைச்சகத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

அதன்பின்னர், எந்த ஒரு காரணமும் இல்லாமல் 120 நாட்களாக கட்டுப்பாட்டு பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்கான அறிவிப்புகளை உள்துறை அமைச்சகம் வெளியிடத் தொடங்கியது. அதன்படி பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அவரது மனைவி நுஸ்ரத் ஷெபாஸ், உறவினர் மர்யம் நவாஸ், முன்னாள் பிரதமர் ஷாகித் ககான் அப்பாசி, அவரது மகன் அப்துல்லா ககான், நிதி மந்திரி மிப்தா இஸ்மாயில் ஆகியோர் எந்தவித தடையும் இன்றி நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முந்தைய ஆட்சியில் அரசியல் பழிவாங்கலுக்காக பலரது பெயர்கள் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டதாக தற்போதைய உள்துறை மந்திரி சனாவுல்லா தெரிவித்தார்.  பட்டியலில் 4,863 பேரும், தற்காலிக தேசிய அடையாளப் பட்டியலில் 30,000 பேரும் உள்ளனர். தற்போது விதிகள் திருத்தப்பட்டுள்ளதால் 3,500 பேர் நேரடியாக பயனடைவார்கள் என்று அமைச்சர் சனாவுல்லா கூறினார்.
Tags:    

Similar News