உலகம்
அலெக்சி நவால்னி

மோசடி வழக்கில் ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு 9 ஆண்டு சிறை

Published On 2022-03-23 02:43 GMT   |   Update On 2022-03-23 02:43 GMT
ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்த நீதிபதி, அவரை குற்றவாளியாக அறிவித்தார்.
மாஸ்கோ :

ரஷியாவில் அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி, கடந்த 2020-ம் ஆண்டு ரசாயன தாக்குதலுக்கு உள்ளாகி கிட்டதட்ட இறக்கும் நிலைக்கு சென்றார்.

இதில் இருந்து மீண்டு வந்த அவரை, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பண மோசடி வழக்கில் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தலைநகர் மாஸ்கோவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், தனது ஊழல் எதிர்ப்பு அறக்கட்டளைக்கு நன்கொடையாக கிடைத்த 3.1 மில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.23 கோடி) தனிப்பட்ட செலவுக்காக திருடி மோசடியில் ஈடுபட்டதாகவும், 2-ம் உலகப்போரின் வீரரை அவதூறாக பேசியதற்காக கோர்ட்டு விதித்த அபராதத்தை செலுத்தாமல் கோர்ட்டை அவமதித்ததாகவும் நவால்னி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த இரு குற்றச்சாட்டுகளும் ஒரே வழக்காக இணைக்கப்பட்டு மாஸ்கோ கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது.

அப்போது நவால்னி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்த நீதிபதி, அவரை குற்றவாளியாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் அவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Tags:    

Similar News