உலகம்
சாலை விபத்து

மெக்சிகோவில் பயங்கர விபத்து: சரக்கு லாரியில் மறைந்து சென்ற வெளிநாட்டினர் 49 பேர் பலி

Published On 2021-12-10 05:35 GMT   |   Update On 2021-12-10 05:35 GMT
தெற்கு மெக்சிகோவில் சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
தெற்கு மெக்சிகோவில், சியாபாஸ் மாநில நகரை நோக்கி நேற்று சரக்கு லாரியில் 107 பேர் சென்றனர். அப்போது,  சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து, நெடுஞ்சாலையில் உள்ள நடைபாதை பாலத்தில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

இதில், சம்பவ இடத்திலேயே 49 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 58 பேரில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய 40 பேர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்த விபத்து குறித்து சியாபாஸ் மாநில சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் தலைவர் லூயிஸ் மானுவல் மோரேனோ கூறியதாவது:-

விபத்து குறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், லாரியில் இருந்தவர்கள் மத்திய அமெரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆனால், தப்பிப்பிழைத்தவர்கள் சிலர் தாங்கள் அண்டை நாடான குவாத்தமாலாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர். அதனால், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று இன்னும் உறுதி செய்யவில்லை.

விபத்துக்குள்ளான சரக்கு வாகனத்தில் சுமார் 107 பேர் பயணம் செய்துள்ளனர். அதிகளவில் மனிதர்களை ஏற்றிச் சென்றதால் எடை தாங்காமல் வாகனம் கவிழ்ந்திருக்கலாம்.

மேலும், வாகனம் விபத்துக்குள்ளானபோது இன்னும் அதிகமான புலம்பெயர்ந்தோர் இருந்ததாக, குடிவரவு முகவர்களால் தடுத்து வைக்கப்படுவார்கள் என்ற பயத்தில் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. நியூசிலாந்து நாட்டில் இளைய தலைமுறையினர் புகைபிடிக்க தடை
Tags:    

Similar News