செய்திகள்
ஆங் சான் சூகி

மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி மீதான வழக்கு விசாரணை அடுத்த வாரம் தொடங்குகிறது

Published On 2021-06-08 20:25 GMT   |   Update On 2021-06-08 20:25 GMT
மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை ராணுவம் கைது செய்து வீட்டு காவலில் வைத்தது.
நேபிடாவ்:

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி ராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை ராணுவம் கைது செய்து வீட்டு காவலில் வைத்தது.

இதில் ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது; தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது; காலனித்துவ கால அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தை மீறியது உள்பட 6 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆங் சான் சூகியை இழிவுபடுத்துவதற்கும் ராணுவ ஆட்சியை நியாயப்படுத்துவதற்கும் அரசியல் உள்நோக்கத்துடன் பொய்யாக புனையப்பட்டவை என ஆங் சான் சூகியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.இந்த நிலையில் ஆங் சான் சூகிக்கு எதிரான வழக்கு விசாரணையை ராணுவ அரசு அடுத்த வாரம் (14-ந்தேதி) தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வழக்கு விசாரணை தலைநகர் நேபிடாவில் உள்ள கோர்ட்டில் நடைபெறும் எனவும், வாரத்தில் 2 நாட்கள் விசாரணை நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங் சான் சூகி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கூட நாட்டில் அடுத்து நடைபெறும் தேர்தலில் அவரால் போட்டியிட முடியாது எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News