செய்திகள்
ஐ.நா.பொதுச்செயலாளரின் சிறப்பு தூதர் பர்க்னெர்

மியான்மரில் அதிகரித்து வரும் ராணுவ வன்முறைகளுக்கு ஐ.நா. சிறப்பு தூதர் கண்டனம்

Published On 2021-03-15 00:39 GMT   |   Update On 2021-03-15 00:39 GMT
ராணுவ ஆட்சிக்கு எதிரான மியான்மர் மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
வாஷிங்டன்:

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. இந்த வெற்றி முறைகேடாக பெறப்பட்டது என குற்றம்சாட்டி வந்த அந்த நாட்டு ராணுவம் கடந்த மாதம் 1-ம் தேதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

மேலும், அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் என ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் பலரையும் ராணுவம் அதிரடியாக கைது செய்தது.கடந்த 5 வாரங்களுக்கும் மேலாக ரகசியமான இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது ராணுவம் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி கோர்ட்டில் விசாரணை நடத்தி வருகிறது.‌

ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதேவேளையில் ராணுவமும் போராட்டக்காரர்கள் மீதான தங்களது அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடிப்பதை ராணுவம் வழக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்கிடையே, மியான்மரின் முக்கிய நகரங்களான யாங்கூன், மாண்டலே உள்ளிட்ட நகரங்களில் நேற்று போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் யாங்கூன் நகரங்களில் மட்டும் 22 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், மியான்மரில் அதிகரித்து வரும் வன்முறைக்கு ஐ.நா.பொதுச்செயலாளரின் சிறப்பு தூதர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News