செய்திகள்
கோப்புப்படம்

ஜப்பானில் தாயின் உடலை 10 ஆண்டுகளாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த பெண்

Published On 2021-01-30 19:36 GMT   |   Update On 2021-01-30 19:36 GMT
ஜப்பானில் தாயின் உடலை அடக்கம் செய்ய விருப்பம் இல்லாததால் 10 ஆண்டுகளாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
டோக்கியோ:

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ள சிபா நகரைச் சேர்ந்த பெண் யூமி யோஷினோ (வயது 48). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.‌

இந்தநிலையில் யூமி யோஷினோ தனது வீட்டுக்கு முறையாக வாடகை செலுத்தாததால் வீட்டின் உரிமையாளர் அவரை வீட்டை காலி செய்ய வற்புறுத்தினார்.‌அதன்படி யூமி யோஷினோ வீட்டை காலி செய்ய ஏற்பாடுகள் செய்தார். வீட்டை காலி செய்வதற்கு தனக்கு உதவியாக கூலி தொழிலாளி ஒருவரை அவர் வேலைக்கு வைத்தார்.‌ அப்போது வீட்டிலிருந்த ஒரு குளிர்சாதனப் பெட்டியில் பெண் ஒருவரின் உடல் இருப்பதைக் கண்டு அந்த கூலித்தொழிலாளி அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் பெண்ணின் உடலைக் குளிர் சாதனப் பெட்டியில் மறைத்து வைத்திருந்தது பற்றி யூமி யோஷினோவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் குளிர்சாதன பெட்டியில் பிணமாக இருக்கும் பெண் தனது தாய் என்றும் அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டதாகவும் யூமி யோஷினோ போலீசாரிடம் கூறினார். மேலும் தனது தாயின் உடலை அடக்கம் செய்ய விருப்பம் இல்லாததால் குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார். அதேசமயம் தனது தாய் எப்படி இறந்தார் என்கிற தகவலை அவர் தெரிவிக்கவில்லை.‌

இதையடுத்துடு 10 ஆண்டுகளாக சடலத்தை குளிர்சாதனப்பெட்டியில் மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக யூமி யோஷினோவை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News