செய்திகள்
ஏவுகணை தாக்குதல்

அசர்பைஜான் மீது அர்மீனியா ஏவுகணை தாக்குதல் - 21 பேர் பலி

Published On 2020-10-30 01:23 GMT   |   Update On 2020-10-30 01:23 GMT
அசர்பைஜான் மீது அர்மீனியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் அந்த நகரத்தின் அப்பாவி மக்கள் 21 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பாகு:

நாகோர்னா-காராபாக் மலைப்பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பதில் அசர்பைஜான், அர்மீனியா ஆகிய இரு நாடுகள் இடையே 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சினை இருந்து வருகிறது. தற்போது கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி, இந்த பிரச்சினை மோதலாக வெடித்தது. இரு தரப்பும் சண்டை போட்டு வந்த நிலையில் பெரும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டு வந்தன.

இதில் ரஷியா தலையிட்டு ஏற்படுத்திய 2 சண்டை நிறுத்தங்கள் தோல்வியில் முடிந்தன. 3-வதாக அமெரிக்கா தலையீட்டில் உருவான சண்டை நிறுத்தமும் தோல்வி கண்டிருக்கிறது. அசர்பைஜான் நாட்டில் உள்ள பர்தா நகரத்தின் மீது அர்மீனியா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் அந்த நகரத்தின் அப்பாவி மக்கள் 21 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதுபற்றி அசர்பைஜான் அதிபரின் செய்தி தொடர்பாளர் ஹிக்மெட் ஹாஜியெவ் கூறுகையில், “ மத்திய அசர்பைஜானில் உள்ள பர்தா நகரத்தின் மீது அர்மீனியா படைகள் பொதுமக்கள் மத்தியில் பெருத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்துவதற்காக கொத்து ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளன” என குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் வெளியான படங்கள் அந்த நகர வீதிகளிலும், வாகனங்களிலும் ஏற்பட்டுள்ள சேதத்தையும், சாலைகளில் பைகளில் போடப்பட்டிருந்த மனித உடல்களையும் காட்டின. ஆனால் இந்த ஏவுகணை தாக்குதலை அர்மீனியா மறுத்துள்ளது.
Tags:    

Similar News