செய்திகள்
டிரம்ப்

ராணுவ ஆஸ்பத்திரியில் இருந்தவாறு வீடியோ வெளியிட்டார், டிரம்ப் - விரைவில் திரும்ப வருவேன் என தகவல்

Published On 2020-10-04 18:44 GMT   |   Update On 2020-10-04 18:44 GMT
ராணுவ ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ‘நான் நன்றாக இருக்கிறேன்; விரைவில் திரும்ப வருவேன்’ என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வாஷிங்டன்:

உலக நாடுகளையெல்லாம் உலுக்கி எடுத்துவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்குதலுக்கு அமெரிக்க வல்லரசின் ஜனாதிபதி டிரம்பும் ஆளாகி உள்ளார். 74 வயதான அவருக்கும், 50 வயதான அவருடைய மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு, கடந்த 1-ந் தேதி உறுதியானது, உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 3-ந் தேதி நடக்க உள்ள நிலையில், கொரோனா தாக்குதல் டிரம்பை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. முதலில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் சிகிச்சை பெற்ற டிரம்ப், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 2-ந் தேதி பெதஸ்தாவில் உள்ள வால்டர் ரீட் ராணுவ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லப்பட்டு, சேர்க்கப்பட்டார். அங்கு விரைவில் குணம் அடைவதற்கு வசதியாக அவருக்கு ‘ரெம்டெசிவிர் சிகிச்சை’ அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் 4 நிமிடம் ஓடக் கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

உடல்நிலை நன்றாக இல்லாத நிலையில், நான் இங்கு வந்தேன். இப்போது நான் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். நான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்காக கடுமையாக உழைக்கிறோம். நான் விரைவில் திரும்ப வருவேன். தேர்தல் பிரசாரத்தை முடிக்க நான் ஆவலோடு காத்திருக்கிறேன்.

நாம் இந்த கொரோனா வைரசை வெல்லப்போகிறோம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால் நாங்கள் அதை நன்றாக வீழ்த்தப்போகிறோம்.

நான் எல்லா அமெரிக்கர்களுக்காகவும்தான் இங்கே போராடிக்கொண்டிருக்கிறேன். அடுத்த சில நாட்களில், ஒரு உண்மையான பரிசோதனை இருப்பதாக நான் யூகிக்கிறேன். எனவே அடுத்து வரும் நாட்களில் என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம்.

என் மனைவி மெலனியா இளமையாக இருப்பதால் நன்றாக இருப்பதாக உணர்கிறார். இளம்வயதினரைப் பொறுத்தமட்டில் கொரோனாவின் லேசான அறிகுறிகளைத்தான் அனுபவிக்கிறார்கள்.

நானும் நன்றாக இருக்கிறேன். நாம் நல்லதொரு முடிவை பெறப்போகிறோம் என்று நினைக்கிறேன். அடுத்த சில நாட்களில் நாம் நிச்சயமாக அதை தெரிந்துகொள்ளப்போகிறோம். அமெரிக்காவிலும், உலகமெங்கும் உள்ள மக்களுக்கும், அவர்களது ஆதரவு வார்த்தைகளுக்காகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் டிரம்ப் கூறி உள்ளார்.

இந்த வீடியோ காட்சியில் டிரம்ப் வழக்கம் போல ‘கோட்-சூட்’ அணிந்திருந்தாலும், ‘டை’ அணியாமல், அமெரிக்க தேசிய கொடி பறக்க விடப்பட்ட சூழலில், மேஜையின் முன் நாற்காலியில் அமர்ந்து காணப்பட்டார். வெள்ளை மாளிகை மருத்துவ நிபுணர் டாக்டர் சீன் கான்லி நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் ஜனாதிபதி மிகச்சிறப்பாக செயல்படுவதாகவும், சிகிச்சைக்கு சாதகமாக பதில் அளிப்பதாகவும் தெரிவித்தார். மெலனியா டிரம்ப், தொடர்ந்து வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News