செய்திகள்
கியாஸ் சிலிண்டர்

அமீரகத்தில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 24 சதவீதம் குறைப்பு

Published On 2020-09-30 04:58 GMT   |   Update On 2020-09-30 04:58 GMT
அமீரகத்தில் வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை 24 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது என அமீரக எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு துறை மந்திரி சுகைல் முகம்மது பரஜ் அல் மஸ்ரூயி தெரிவித்து உள்ளார்.
அபுதாபி:

அமீரக எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு துறை மந்திரி சுகைல் முகம்மது பரஜ் அல் மஸ்ரூயி கூறியிருப்பதாவது:-

அமீரகத்தில் வீட்டு உபயோகத்துக்காக சமையல் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையிலும், மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவும் வகையிலும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும் இந்த சிலிண்டர்களின் விலையானது 24 சதவீதம் குறைக்கப்படுகிறது.

இந்த விலை குறைப்பு நுகர்வோரின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும். உள்ளூர் சந்தைகளில் போட்டித்தன்மையை ஏற்படுத்துவதுடன், விற்பனையாளர்கள் சட்ட விரோதமாக கூடுதலாக லாபம் வைத்து விற்பனை செய்வதை தடுக்க உதவும். இதன் மூலம் வீடுகளுக்கு உயர்தர எரிவாயு வினியோகத்தை வழங்கவும் முக்கிய காரணமாக இருக்கும். இந்த விலை குறைப்பு நாளை (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த விலை குறைப்பை தொடர்ந்து 11 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் 60 திர்ஹாமுக்கும், 22 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் 115 திர்ஹாமுக்கும், 44 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் 230 திர்ஹாமுக்கும் விற்பனை செய்யப்படும் என எரிசக்தி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News