செய்திகள்
கோப்புப்படம்

பாகிஸ்தானை விட்டு 15 நாளில் வெளியேற வலைத்தள பெண் பதிவருக்கு இம்ரான்கான் அரசு கெடு

Published On 2020-09-04 00:37 GMT   |   Update On 2020-09-04 00:37 GMT
பாகிஸ்தானை விட்டு வெளியேற, வலைத்தள பெண் பதிவருக்கு இம்ரான்கான் அரசு 15 நாளில் கெடு விதித்துள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருபவர், அமெரிக்க வலைத்தள பெண் பதிவர் சிந்தியா ரிச்சி. இவர் சர்ச்சைக்குரிய பதிவுகளால் பிரபலம் அடைந்தார். இவரை டுவிட்டரில் சுமார் 3 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

இந்த சூழலில், மறைந்த பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு, அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் உள்துறை மந்திரி ரகுமான் மாலிக் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என ‘பேஸ்புக்’ பக்கத்தில் வீடியோ பதிவு வெளியிட்டார். அத்துடன் நிற்கவில்லை. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள விரும்பியதாக சிந்தியா ரிச்சி தன்னிடம் கூறினார் என அவரது நண்பரான டி.வி. பிரபலம் அலி சலீம் பரபரப்பு தகவல் வெளியிட்டார்.

இப்படி தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த சிந்தியா ரிச்சியின் விசா கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முடிந்து விட்டது. அவர் மீதான வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு, அவரது விசா தொடர்பாக உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுக்கு அதிருப்தி தெரிவித்தது. அத்துடன் சிந்தியா ரிச்சிக்கு முறையான உதவிகளை வழங்க இம்ரான்கான் அரசுக்கு இறுதி வாய்ப்பை அளித்தது.

இந்த நிலையில், சிந்தியா ரிச்சியின் விசா நீடிப்பு விண்ணப்பத்தை நிராகரித்ததுடன், 15 நாளில் அவர் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்று இம்ரான்கான் அரசு உத்தரவிட்டுள்ளது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News