செய்திகள்
இந்தியா, இலங்கை

இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பதே எங்கள் கொள்கை - இலங்கை அரசு அறிவிப்பு

Published On 2020-08-27 02:26 GMT   |   Update On 2020-08-27 02:26 GMT
இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பதே புதிய அரசின் வெளியுறவு கொள்கை என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
கொழும்பு:

இலங்கை நாடாளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். புதிய அரசின் வெளியுறவு செயலாளராக இலங்கை கடற்படை முன்னாள் தளபதி ஜெயநாத் கொலம்பேஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்பதவியில் ராணுவ பின்னணி கொண்டவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். ஜெயநாத் கொலம்பேஜ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புதிய இலங்கை அரசின் வெளியுறவு கொள்கை, இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் ‘முதலில் இந்தியா’ ஆகும். இந்தியாவின் நலன்களை பாதுகாப்போம். அதாவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டோம். அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் இதே கொள்கையை பின்பற்றுவார்.

எங்கள் மண்ணில் பிற நாட்டுக்கு எதிரான, குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான எந்த காரியத்தையும் அனுமதிக்க மாட்டோம்.

உலக அளவில் சீனா இரண்டாவது பொருளாதார வல்லரசு. இந்தியா, 6-வது பொருளாதார வல்லரசு. எனவே, 2 பொருளாதார வல்லரசுகளுக்கிடையே இலங்கை உள்ளது.

இலங்கையில் உள்ள ஹம்பன்தொட்டா துறைமுகத்தை முதலில் இந்தியாவுக்குத்தான் குத்தகைக்கு கொடுக்க முன்வந்தோம். ஆனால், இந்தியா ஏற்காததால்தான் சீனாவுக்கு அளித்தோம்.

அந்த துறைமுகத்தை சீனா வணிக காரியங்களுக்குத்தான் பயன்படுத்தும். ராணுவ செயல்பாடுகளுக்கு பயன்படுத்தாது.

கொழும்பு துறைமுகத்தை இயக்குவது தொடர்பாக இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை தொழிற்சங்கங்களின் எதிர்ப்பை மீறி செயல்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News