செய்திகள்
பிலிப்பைன்ஸ் தொடர் குண்டு வெடிப்பு

பிலிப்பைன்சில் தொடர் குண்டு வெடிப்புகளில் 7 ராணுவ வீரர்கள் உள்பட 11 பேர் பலி

Published On 2020-08-25 01:21 GMT   |   Update On 2020-08-25 01:21 GMT
பிலிப்பைன்சில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 7 ராணுவ வீரர்கள் உள்பட 11 பேர் பலியாகினர்.
மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பிராந்தியத்தில் அபு சயாப் என்கிற பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இவர்கள் அங்கு மத அடிப்படையிலான ஒரு அரசை நிறுவ முயற்சித்து வருகின்றனர். இதனால் அவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தொடர் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். பயங்கரவாதிகளின் அட்டூழியம் காரணமாக தெற்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிலிப்பைன்சின் தெற்கு மாகாணமான சுலூவில் உள்ள ஜோலோ நகரில் ராணுவ வீரர்கள் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 ராணுவ வாகனங்களுக்கு இடையில் பயங்கரவாதிகள் வெடி குண்டுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை நிறுத்தி வெடிக்க செய்தனர். வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தீக்கிரையாயின. இதனால் அங்கு கரும்புகை மண்டலம் உருவானது.

இந்த குண்டுவெடிப்பில் 5 ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து அந்த பகுதியை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே இந்த குண்டு வெடிப்பு நடந்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக ஜோலோ நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் முன்பு பெண் தற்கொலை படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.

இதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த 2 குண்டு வெடிப்புகளில் ராணுவ வீரர்கள் போலீசார் மற்றும் அப்பாவி பொதுமக்கள் என 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே ஜோலோ நகரில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில் மேலும் ஒரு ராணுவ வீரர் பலியானார். எனினும் இந்த குண்டுவெடிப்பு எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் அபு சயாப் பயங்கரவாதிகளே இந்த கொடூர தாக்குதலை நடத்தியதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

இதனிடையே ஜோலோ நகர் முழுவதும் பாதுகாப்பு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கி விடப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News