செய்திகள்
பிரதமர் ஷின்சோ அபே

நான் நலமாக இருக்கிறேன்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜப்பான் பிரதமர்

Published On 2020-08-20 03:50 GMT   |   Update On 2020-08-20 03:50 GMT
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான் நலமாக இருப்பதாகவும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றதாகவும் ஷின்ஜோ அபே தெரிவித்துள்ளார்.
டோக்கியோ :

ஜப்பான் நாட்டின் பிரதமராக ஷின்சோ அபே இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக ஷின்சோ அபேவின் உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்களால், அவரது ஆரோக்கியம் பற்றிய சந்தேகங்கள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை திடீரென ஆஸ்பத்திரிக்கு சென்ற பிரதமர் ஷின்சோ அபே மாலையில் வீடு திரும்பினார்.

அவர் எதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார் என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படாததால் அந்த நாட்டு ஊடகங்களில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகின.

சமீபத்தில் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்நாட்டு மந்திரி அகிரா அமாரி, இந்த சமயத்தில் பணியில் இருந்து விடுமுறை எடுப்பதை குற்றமாக அபே கருதுகிறார். ஆனால், அவருக்கு ஓய்வு தேவை என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை சுட்டிக்காட்டி ஷின்சோ அபே உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய போதும், ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தது குறித்து பிரதமர் அலுவலகம் சார்பில் விளக்கம் அளிக்கப்படும் இருந்து வந்தது.

இந்த நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான் நலமாக இருப்பதாகவும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றதாகவும் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “ஆரோக்கியமாக இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்த வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றேன். நான் நலமாகவே இருக்கிறேன். இப்போது மீண்டும் வேலைக்கு வந்துள்ளேன். தொடர்ந்து கடினமாக உழைப்பேன் என்று நம்புகிறேன் நன்றி” என கூறினார்.

65 வயதாகும் ஷின்சோ அபே, இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு உடல்நிலையை காரணம் காட்டி பிரதமர் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News