செய்திகள்
விபத்து நடந்த பகுதி

பெய்ரூட் விபத்தால் வீடுகளை இழந்த 3 லட்சம் பேர்

Published On 2020-08-06 00:48 GMT   |   Update On 2020-08-06 00:48 GMT
பெய்ரூட்டில் ஏற்பட்ட விபத்தால் 3 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளதாக கவர்னர் தெரிவித்துள்ளார்.
பெய்ரூட்:
 
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 4) பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது.

வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் பெய்ரூட் துறைமுகப்பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக மாறியது.

துறைமுகப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளது.

இந்த வெடிவிபத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. துறைமுகப்பகுதியே நிலைகுலைந்தது. இந்த கோரவிபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து நடந்த பகுதியில் பலர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும்பணியும், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக லெபனானில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த வெடிவிபத்து காரணமாக 3 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளதாக பெய்ரூட் கவர்னர் மர்வான் அஃபோண்ட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவர்னர் கூறியதாவது:-

பெய்ரூட் வெடிவிபத்து காரணமாக 5 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 3 லட்சம் மக்கள் தற்காலிகமாக
வீடுகளை இழந்துள்ளனர். 

கிட்டத்தட்ட பெய்ரூட்டின் பாதி நகரம் இந்த வெடிவிபத்தால் பாதிக்கப்பட்டுள்ளது அல்லது அழிந்துள்ளனது. 

இது ஒரு பேரழிவு நிலைமை. வரலாற்றில் இதுபோன்ற நிகழ்வை பெய்ரூட் நகரம் சந்தித்ததே கிடையாது.

என அவர் தெரிவித்தார்.  
Tags:    

Similar News