செய்திகள்
தீ விபத்து

அமெரிக்காவில் சீன தூதரகத்தில் தீ விபத்து

Published On 2020-07-23 09:39 GMT   |   Update On 2020-07-23 09:39 GMT
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகம் திடீர் தீ விபத்து நேரிட்டது.
ஹூஸ்டன்:

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகம் சர்வதேச சட்ட விதிகளை மீறியதாக கூறி அந்த தூதரகத்தை உடனடியாக மூட டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டதாக சீனா கூறியது.

மேலும் இது மூர்க்கத்தனமான மற்றும் நியாயப்படுத்த முடியாத நடவடிக்கை எனக்கூறி சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. எனினும் அமெரிக்கா உடனடியாக இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே சீனா இந்த தகவலை வெளியிட்ட சில மணி நேரத்தில் ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் தூதரகத்தில் திடீர் தீ விபத்து நேரிட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் தூதரக ஊழியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

எனினும் தூதரகத்தில் இருந்த பல முக்கிய கோப்புகள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சாம்பலானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவு விட்டதாக சீனா குற்றம் சாட்டிய சில மணி நேரத்துக்குள் இந்த தீ விபத்து நடந்து இருப்பதால் இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
Tags:    

Similar News