search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fire"

    • அரிய வகை மரங்கள் மற்றும் செடி கொடிகள் தீயில் கருகி சேதமானது.
    • வனப்பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு காட்டுத் தீ ஏற்படுவதை கண்காணித்து வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்குட்பட்ட அய்யூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடும் வெப்பத்தால் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது.

    இதனால், அரிய வகை மரங்கள் மற்றும் செடி கொடிகள் தீயில் கருகி சேதமானது. காட்டு தீயால் வனப்பகுதியில் வாழ்ந்து வரும் பறவைகள், உள்ளிட்ட வனவிலங்குகள் பாதிக்கப்பட்டது.

    இதனையடுத்து, ஓசூர் வன கோட்ட உயிரின காப்பாளர் கார்த்திகேயனி உத்தரவின் பேரில், தேன் கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன், தலைமையில் வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு வனப்பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு காட்டுத் தீ ஏற்படுவதை கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தொழுவபெட்டா வனப்பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மல்லேசப்பா (வயது29) என்பவர் வனப்பகுதிக்கு தீ வைத்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து வனப்பகுதியில் தீ வைத்த குற்றத்திற்காக அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    வனத்துறையினர் மல்லே சப்பாவை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி தருமபுரி சிறையிலடைத்தனர்.

    வனப்பகுதிகளில் அத்துமீறி நுழைந்து தீ விபத்து ஏற்பட காரணமாக இருப்பவர்கள் மீது வனச்சட்டங்களின் படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • துருக்கியில் இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த தீ விபத்தில் சிக்கி 29 பேர் உயிரிழந்தனர்.

    இஸ்தான்புல்:

    துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் அமைந்துள்ளது இரவு விடுதி. அந்த விடுதியில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்தது.

    இந்நிலையில், இரவு விடுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது என இஸ்தான்புல் கவர்னர் தெரிவித்தார்.

    இந்த தீ விபத்தில் 29 பேர் பலியாகினர் என்றும், தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டார்.

    விசாரணையில், தீ விபத்தில் பலியானோர் ஊழியர்கள் என தெரிய வந்தது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அங்கிருந்த வெடிமருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் உடனே அணைக்க முடியவில்லை.

    இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ராணுவ வெடிமருந்து கிடங்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த வெடிமருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதனால் கரும்புகை பல அடி உயரத்துக்கு எழும்பியது. உடனே தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். ஆனால் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் உடனே அணைக்க முடியவில்லை. இந்த விபத்தில் உயிர்ச்சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாவதியான வெடிமருந்துகளை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட பகுதியில் தீப்பிடித்தது என்றும் காலாவதியான வெடிமருந்துகளில் நிலையற்ற ரசாயனங்கள் உள்ளன. அதில் ஏற்பட்ட உராய்வுகள் மூலம் தீ பிடித்திருக்கலாம் என்றும் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • பாரத ஸ்டேட் வங்கி. சிட்கோவில் உள்ள சிறு குறு நிறுவனங்கள் அனைத்தும் இதில் வங்கி கணக்குகள் வைத்துள்ளன.
    • சேதாரத்தின் மதிப்பு குறித்து வங்கி உயர் அதிகாரிகள் பார்வையிட்ட பின் கணக்கீடு செய்து தான் சொல்ல முடியும்.

    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி சிட்கோ பகுதியில் அமைந்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. சிட்கோவில் உள்ள சிறு குறு நிறுவனங்கள் அனைத்தும் இதில் வங்கி கணக்குகள் வைத்துள்ளன. அது மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்களும் சேமிப்பு கணக்குகள் வைத்துள்ளனர்.

    எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் வங்கி இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் வங்கிக்குள் புகை வருவதை கண்ட வாட்ச்மேன் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    மேலும் துவாக்குடி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து திரு வெறும்பூர், பெல், நவல்பட்டு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.

    இதில் வங்கியிலிருந்து அனைத்து கம்ப்யூட்டர்களும் எரிந்து சேதமாகிவிட்டது. இதுகுறித்து வங்கி மேலாளர் பிரசாந்த் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சேதாரத்தின் மதிப்பு குறித்து வங்கி உயர் அதிகாரிகள் பார்வையிட்ட பின் கணக்கீடு செய்து தான் சொல்ல முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

    வங்கியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தெரிய வரவும் ஒவ்வொருத்தரும் தங்களது கணக்கின் நிலை தங்கள் நகை அடகு வைத்ததுடன் நிலை கண்டு அச்சம் தெரிவித்துள்ளனர். 

    • திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்ததில் அங்கு பல ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து நின்ற சுமார் 100 மரங்கள் மற்றும் செடி-கொடிகள் ஆகியவை தீயில் கருகி சாம்பலாயின.
    • வனப்பகுதியில் இருந்த வன விலங்குகள் மற்றும் பறவைகள் வேறு இடங்களுக்கு தப்பிசென்றன.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பாரஸ்ட் டேல் வனப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்ததில் அங்கு பல ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து நின்ற சுமார் 100 மரங்கள் மற்றும் செடி-கொடிகள் ஆகியவை தீயில் கருகி சாம்பலாயின. மேலும் வனப்பகுதியில் இருந்த வன விலங்குகள் மற்றும் பறவைகள் வேறு இடங்களுக்கு தப்பிசென்றன.

    இதுகுறித்து தகவலின்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் வனத்துக்குள் தீ விபத்து காரணமாக பரவி நிற்கும் அடர்ந்த புகையால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் பாரஸ்ட்டேல் காட்டுப்பகுதியில் பற்றியெரியும் தீயை, கடந்தாண்டு போல ஹெலிகாப்படர் பயன்படுத்தி அணைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டுமென அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இதற்கிடையே குன்னூர் தீவிபத்து தொட ர்பாக குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனக்குழுவினர் விசாரணை நடத்தியதில், அங்குள்ள ஒரு தேயிலை தோட்ட த்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊழியர்கள் கவாத்து செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவையற்ற பொருட்களை குவித்து தீ வைத்து எரித்தனர். பின்பு தீயை அணைக்காமல் சென்றது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து குன்னூர் வனத்தில் பற்றியெரிந்த தீ விபத்துக்கு காரணமாக இருந்ததாக பாரஸ்ட்டேல் தேயிலை தோட்ட உரிமையாளர் எபினேசர் ஜெயசீலன் இன்பம் மற்றும் தொழிலாளர்கள் கருப்பையா (வயது 65), மோகன் (35), ஜெயக்குமார் (60) ஆகிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    • மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து கோவை, பழனி உள்பட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பஸ் நிலையத்தின் வடக்கு புறம் திருச்சி, கரூர், பழனி செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தின் பின்புறத்தில் பேக்கரி மற்றும் செல்போன் கடைகள் உள்ளது. நேற்றிரவு வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டு சென்றனர். இன்று அதிகாலை பேக்கரி கடை நடத்துபவர்கள் தங்களது கடைகளை திறக்க வந்தனர்.

    அப்போது கடைகளின் ஷட்டரில் இருந்து கரும்புகை வந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் உடனே தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் ஒரு பேக்கரி கடை , 3 செல்போன் கடை ஆகியவற்றில் தீ மளமளவென பற்றி எரிந்தது.


    தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனிடையே தீயணைப்பு வாகனங்களில் இருந்த தண்ணீரும் காலியானது. உடனே தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணனை தொடர்பு கொண்டு தெரிவிக்கவே, அவர் நகராட்சி தண்ணீர் லாரிகளை அனுப்பி வைத்தார். இதையடுத்து அதன் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இருப்பினும் பேக்கரி கடையில் இருந்த பிரிட்ஜ், பேன், டி.வி., இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் செல்போன் கடைகளில் இருந்த விலையுயர்ந்த செல்போன்கள் தீயில் எரிந்து சேதமானது. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் மேம்பாட்டு பணிக்காக இடிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்து ஏற்பட்ட 4 கடைகளின் உரிமையாளர்களுக்கும் தற்காலிக கடை ஒதுக்கப்பட்டு கடைகள் இடிக்கப்பட இருந்தது. இந்தநிலையில் தீ விபத்து ஏற்பட்டு 4 கடைகளும் சேதமாகி உள்ளன. சேதமான கடைகளை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • படகில் இருந்த மீனவர்கள் உயிர் பயத்தில் அலறி கூச்சலிட்டனர்.
    • அருகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் படகு தீப்பிடித்து எரிவதை கண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், உப்பாடாவை சேர்ந்தவர் சுரதா ராமராவ். இவர் சொந்தமாக படகு வைத்து கொண்டு கடலில் மீன் பிடித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை ஒப்படைவை சேர்ந்த சக மீனவர்கள் 11 பேருடன் கடலில் மீன் பிடிக்க சென்றார். பைரவ பாலம் என்ற இடத்தில் நடுக்கடலில் சுரதா ராமராவ் உள்ளிட்டவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது சுரதா ராமாராவின் படகில் திடீரென புகை வந்து தீப்பிடித்து எறிய தொடங்கியது.

    இதனைக் கண்ட படகில் இருந்த மீனவர்கள் உயிர் பயத்தில் அலறி கூச்சலிட்டனர். அருகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் படகு தீப்பிடித்து எரிவதை கண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் படகில் சிக்கி இருந்த 11 மீனவர்களை பத்திரமாக மீட்டனர். தீப்பிடித்த படகில் இருந்து 11 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடையின் முன்பு கட்டியிருந்த தார்பாயில் பற்றி எரிய தொடங்கியது.
    • போக்குவரத்து மிகுந்த சாலையில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் போக்கு வரத்து நிறைந்து இருக்கும்.

    இப்பகுதியில் சாலையில் ஒருபுறம் சாலையோர கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சல்மான் பாரிஸ் என்பவர் சாலை ஓரத்தில் மாலை நேர டிபன் கடை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சல்மான் பாரிஸ் வழக்கம்போல் வியாபாரத்தை நடத்தி கொண்டிருந்தார். அப்போது திடீரென சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து தீ மளமளவென கடையின் முன்பு கட்டியிருந்த தார்பாயில் பற்றி எரிய தொடங்கியது.

    உடனே சாலை ஓரத்தில் உணவருந்தி கொண்டு இருந்தவர்கள், உணவை கீழே போட்டு விட்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் தீ பற்றி எரிய தொடங்கியது. இது குறித்து தகவலறிந்த கடையநல்லூர் போலீசார் அந்த பகுதியில் உள்ள போக்குவரத்தை நிறுத்தினர்.

    அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். ஆனால் கடையநல்லூர் தீயணைப்புத்துறையில் இருந்த வண்டி அருகில் உள்ள ஊருக்கு பூக்குழி திருவிழாவிற்கு சென்றதால் அதற்கு பதிலாக 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வாசுதேவநல்லூர் தீயணைப்புத்துறை வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆனால் வாகனம் வருவதற்கு தாமதமானதால் அங்கே இருந்த இளைஞர்கள் முகமது காலித், அக்பர், ஹாஜி உட்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் எதிரே இருந்த ஹார்டுவேர்ஸ் கடையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து தீயை அணைத்தனர். பொது மக்களும், வாலிபர்களும் துரிதமாக செயல்பட்டதால் கடையநல்லூரில் போக்குவரத்து மிகுந்த சாலையில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

    • ஆட்டோ, மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரல்வாய்மொழி:

    தோவாளை அருகே தோவாளைபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன்கள் செந்தில் முருகன் (வயது 32), அருள் அய்யப்பன் (28). செந்தில் முருகன் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    நேற்று வழக்கம்போல் செந்தில் முருகன் சவாரிக்கு சென்று விட்டு ஆட்டோவை இரவு தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அருள் அய்யப்பன் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.

    இன்று அதிகாலையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த செந்தில் முருகன், அருள் அய்யப்பன் இருவரும் வெளியே வந்து பார்த்தனர். ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

    ஆனால் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ஆட்டோ, மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    இது தொடர்பாக செந்தில் முருகன், அருள் அய்யப்பனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இருவருக்கும் யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், இவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

    போலீசார் உடனே அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் எரிப்புக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். தொடர்ந்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தோவாளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இங்கிலாந்தைச் சேர்ந்த எண்ணெய் கப்பலான எம்.வி. மர்லின் லுவாண்டா மீது ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தினர்.
    • 10 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழு 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக இந்திய கடற்படை தெரிவித்தது.

    செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் செல்லக் கூடிய வர்த்தக கப்பல்கள் மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஏடன் வளைகுடா பகுதியில்இங்கிலாந்தைச் சேர்ந்த எண்ணெய் கப்பலான எம்.வி. மர்லின் லுவாண்டா மீது ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் கப்பலில் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து இங்கிலாந்து கப்பலில் இருந்தவர்கள், இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலை தொடர்புகொண்டு உதவி கேட்டனர். உடனே ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலில் இருந்து தீயணைப்பு சாதனங்களுடன் மீட்பு குழுவினர் அங்கு அனுப்பப்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் கப்பலில் 22 இந்தியர்கள் உள்ளனர். கப்பலில் எரிந்த தீயை கடுமையாக போராடி இந்திய மீட்புக்குழுவினர் அணைத்தனர்.

    10 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழு 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக இந்திய கடற்படை தெரிவித்தது. எண்னை கப்பலின் கேப்டன் அபிலாஷ் ராவத் கூறும்போது, இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்திற்கு நன்றி கூறுகிறேன். இந்த தீயை எதிர்த்து போராடும் நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம். தீயை அணைக்க இந்திய கடற்படை எங்களுக்கு உதவ முன்வந்ததற்கு நன்றி என்றார்.

    • தூத்துக்குடியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு மாலையில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முறப்பநாடு போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள அனைத்தலையூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.

    இவர் நேற்று காலை தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது சொகுசு காரில் தூத்துக்குடியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு மாலையில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு அருகே காரில் குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியே வந்துள்ளது. இதைப்பார்த்த கோவிந்த ராஜ் காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தனது மனைவி, குழந்தைகளுடன் அவசர அவசரமாக காரில் இருந்து கீழே இறங்கி உள்ளார். அதற்குள் காரின் என்ஜின் பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    அதைக் கண்ட அப்பகுதியில் இருந்த மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இருந்தும் கார் அதிக அளவில் தீயில் சேதமடைந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முறப்பநாடு போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம், அதில் இருந்த 4 பேர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • தென்னை ஓலைகள் அனைத்தும் எரிந்து இதில் சேதமாகின.
    • காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் காரமடை நகராட்சிக்குட்பட்ட 15-வது வார்டு மங்களக்கரை புதூரில் வீரசென்னியம்மன் கோவில் உள்ளது.

    கெண்டேபாளையம், மருதூர், ராமகேவுண்டன் புதூர், கீரணத்தம், கீரணத்தம் புதுப்பாளையம் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    புரட்டாசி மாதம், மார்கழி மாதங்களில் இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நிலையில் இந்த கோவில் முன்பு தென்னை ஓலையில் பந்தல் அமைத்து அதன்மேல் தகர சீட் அமைக்கப்பட்டிருந்து.

    இன்று அதிகாலை 2 மணியளவில் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் தீ பற்றி மள, மளவென எரிந்து கொண்டிருந்தது. தென்னை ஓலைகள் அனைத்தும் எரிந்து இதில் சேதமாகின. இதனை பார்த்த அப்பகுதி பொது மக்கள் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


    மேலும் சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் கேன் ஒன்று கிடந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் திறந்து பார்த்த போது பெட்ரோல் வாசனை வந்தது. யாரோ மர்மநபர்கள் அதிகாலை நேரத்தில் பெட்ரோலை கொண்டு வந்து ஊற்றி கோவில் பந்தலுக்கு தீ வைத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கோவில் பந்தலுக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? எதற்காக இந்த செயலில் ஈடுபட்டனர் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் காரமடை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×