செய்திகள்
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ

சீனா அடாவடித்தனமாக அண்டை நாடுகளின் எல்லையை கைப்பற்ற முயற்சிக்கிறது - அமெரிக்கா

Published On 2020-06-20 12:40 GMT   |   Update On 2020-06-20 12:40 GMT
அண்டை நாடுகளுடன் சீனா அடாவடித்தனமாக எல்லையை கைப்பற்ற முயற்சிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ குற்றம்சாட்டி உள்ளார்.
வாஷிங்டன்:

டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெறும் ஜனநாயகம் குறித்த ஆன்லைன் மாநாட்டில் இணையம் வாயிலாக வாஷிங்டனிலிருந்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ கூறியதாவது:-

அண்டை நாடுகளுடன் சீனா அடாவடித்தனமாக எல்லையை கைப்பற்ற முயற்சிக்கிறது. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் எல்லையில் பதற்றத்தை சீன ராணுவம் அதிகரித்துள்ளது. இந்திய எல்லையில் சீனா உரிமை கோருவது நியாயமற்றது.

தென் சீனக்கடல் பகுதியிலும் சீனாவின் கடற்படையினர் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனால் கூடுதலான இடத்தை ஆக்கிரமித்து கடல் எல்லையை அதிகப்படுத்த சீனா முயற்சித்து வருகிறது.  ஜனநாயக நாடுகளும், சுதந்திரத்தை விரும்பும் மக்களும் சீனாவை சமாளிக்க ஒன்றுபட வேண்டும் என கூறினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங், சீன முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு மிருகத்தனமான அடக்குமுறை பிரச்சாரத்தை தூண்டி உள்ளார். இது இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் நாம் காணாத அளவில் மனித உரிமை மீறல் நடக்கிறது. இப்போது, சீன ராணுவம் இந்தியாவுடனான எல்லை பதட்டங்களை அதிகரித்துள்ளது.

அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் ஒரு பிளவை ஏற்படுத்துவதற்காக தவறான தகவல்கள் மற்றும் தீங்கிழைக்கும் இணைய பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கு சீனா தான் காரணம்.

சீனா கொரோனா வைரஸைப் குறித்து சொன்ன பொய்யால் லட்சக்கணக்கான மக்கள் இறந்துவிட்டனர், உலகப் பொருளாதாரம் அழிந்துவிட்டது. சீனா தொடர்ந்து மருத்துவ தகவல்களை வழங்க மறுக்கிறது அல்லது வெளி விஞ்ஞானிகளை அனுமதிக்க மறுக்கிறது.

சீனாவின் பல செயல்களை நாம் காணலாம். ஹாங்காங், திபெத், சின்ஜியாங் மற்றும் இந்தியாவில் அவர்கள் என்ன செய்கிறார்கள், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா மற்றும் இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகியவற்றுடன் பொருளாதார மண்டலங்களில் அவர்கள் என்ன செய்தார்கள், ஆஸ்திரேலியா மீதான  சைபர் தாக்குதல்  என்று அவர் பலவற்றை அவர் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News