செய்திகள்
ஆப்கானிஸ்தான் தாக்குதல் சம்பவம்

பிரசவ வார்டுக்குள் புகுந்து தாக்குதல்: குழந்தைகள் உள்பட 24 பேர் பலி - ஐ.நா. கண்டனம்

Published On 2020-05-14 07:02 GMT   |   Update On 2020-05-14 07:02 GMT
ஆப்கானிஸ்தான் ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 2 பச்சிளம் குழந்தைகள் உள்பட 24 பேர் பலியான சம்பவத்திற்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
காபூல்:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள டார்சி-இ-பார்ச்சி நகரில் மிகப்பெரிய அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் உள்ள மகப்பேறு பிரிவை ‘மெடிசன்ஸ் சான்ஸ் பிரான்டியர்ஸ்’ என்ற சர்வதேச மருத்துவ தொண்டு அமைப்பு கவனித்து வருகிறது. இங்கு சர்வதேச நாடுகளை சேர்ந்த டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பலர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு போலீஸ் உடையில் வந்த பயங்கரவாதிகள் சிலர் ஆஸ்பத்திரியின் நுழைவாயில் முன்பு வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.



அதனை தொடர்ந்து, துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் பிரசவ வார்டுக்குள் புகுந்து, கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் பிறந்து சில நாட்களே ஆன 2 பச்சிளம் குழந்தைகளும், குழந்தை பெற்றெடுத்த பெண்கள் மற்றும் நர்சுகள் உள்பட 24 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 16 பேர் காயம் அடைந்தனர்.

பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதலால் ஆஸ்பத்திரியில் பெரும் பதற்றமான சூழல் உருவானது. டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட அனைவரும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.

ஆனால் பயங்கரவாதிகள் ஆஸ்பத்திரி முழுவதையும் ஆக்கிரமித்ததால் அவர்களால் ஆஸ்பத்திரியை விட்டு, வெளியேற முடியவில்லை. மேலும் பலரை பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்தனர்.

இதற்கிடையில் பயங்கரவாத தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் ராணுவ வீரர்கள் விரைந்து சென்று ஆஸ்பத்திரியை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

அதனை தொடர்ந்து, பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த டாக்டர்கள், நர்சுகள் மற்றும் நோயாளிகளை பத்திரமாக மீட்கும் முயற்சியில் அவர்கள் இறங்கினர்.இதனிடையே ராணுவ வீரர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். அதனை தொடர்ந்து, ராணுவ வீரர்கள் தங்களுடைய துப்பாக்கியால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்புக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இறுதியில் ராணுவ வீரர்கள் அதிரடியாக ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.அதனை தொடர்ந்து பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நோயாளிகள் என 100-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அதேபோல் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த 15 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மற்றொரு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.மனிதாபிமானமற்ற இந்த கொடூர தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. அதே சமயம் இந்த தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என தலீபான் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர்.



முன்னதாக நங்கர்ஹார் மாகாணத்தில் போலீஸ் அதிகாரியின் இறுதி சடங்கில் நடந்த குண்டுவெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியே குட்டரெஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News