செய்திகள்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

பொது இடங்கள் திறப்பு- நிபந்தனை திட்டத்தை வெளியிட்டார் போரிஸ் ஜான்சன்

Published On 2020-05-11 05:33 GMT   |   Update On 2020-05-11 05:33 GMT
இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தனி மனித இடைவெளி உள்ளிட்ட சில நிபந்தனைகளுன் பொது இடங்களை திறக்கப்பட உள்ளன.
லண்டன்:

ஐரோப்பிய நாடுகளிலேயே பிரிட்டனில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மேலும் வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 32 ஆயிரத்தை நெருங்குகிறது. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. 

இந்நிலையில், இங்கிலாந்தில் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாகவும், அதன்பின்னர் நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்த்தப்படுவதாகவும் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது:-

இங்கிலாந்தில் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும், தனி மனித இடைவெளி உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் மக்கள் கூடும் பொது இடங்கள் புதன்கிழமை திறக்கப்பட உள்ளன. வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாதவர்கள் பணியிடத்திற்குத் திரும்ப வேண்டும். ஆனால் பொது போக்குவரத்தைத் தவிர்க்க வேண்டும்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை எவ்வளவு விரைவாக தளர்த்த முடியும் என்பதை, 5 நிலைகளைக் கொண்ட புதிய கொரோனா எச்சரிக்கை அமைப்பு நிர்வகிக்கும். சில பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு திரும்ப முடியும். கடைகளை மீண்டும் திறப்பதும் இதில் அடங்கும். விஞ்ஞானத்தால் ஆதரிக்கப்பட்டால் மட்டுமே இது நடக்கும். 

பாதிப்பு குறையும்பட்சத்தில், ஜூலை 1ம் தேதிக்கு பிறகு சில விருந்தோம்பல் வணிகங்கள் மற்றும் பிற பொது இடங்கள் மீண்டும் திறக்கப்படுவதைக் காணலாம். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சமுதாயத்தை மீண்டும் திறப்பதற்கான திட்டத்தின் முதல் பகுதி.

இந்த வாரம் ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நேரம் இதுவல்ல. அதற்கு பதில், கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மாற்றியமைப்பதற்கு கவனமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News